Last Updated : 04 Aug, 2016 04:00 PM

 

Published : 04 Aug 2016 04:00 PM
Last Updated : 04 Aug 2016 04:00 PM

ஓய்வு அறை இல்லாததால் அவலம்: தேசிய நெடுஞ்சாலை நிழற்குடையில் ஓய்வெடுக்கும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஓய்வு அறை இல்லாத காரணத்தால், தேசிய நெடுஞ்சாலையின் நிழற்குடையில் தங்கி பணி செய்து வருகின்றனர்.

தமிழகத்தில் கடந்த 2008-ம் ஆண்டு 108 ஆம்புலன்ஸ் திட்டம் தொடங்கப்பட்டது. சாலை விபத்து, தீ விபத்து, உடல்நலக்குறைவு உள்ளிட்ட பல்வேறு அவசர கால தேவைகளுக்கு 108 ஆம்புலன்ஸ் சேவை இலவசமாக அளிக்கப்படுகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, ஓசூர், தேன்கனிக் கோட்டை, தளி, ஊத்தங்கரை, போச்சம்பள்ளி உட்பட பல பகுதிகளில் மொத்தம் 19 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயக்கப்படுகிறது. இதில், 47 ஓட்டுநர்கள், 50 ஆண், பெண் மருத்துவ உதவியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். விபத்து உள்ளிட்ட சம்பவங்களில் பாதிக்கப் பட்டவர்களை உடனடியாக மீட்டு, முதலுதவி சிகிச்சையளிக்கும் வகையில் 20 கி.மீ.க்கு ஒரு வாகனம் நிறுத்தப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகள் அதிகளவில் ஏற்படுவதால், குரு பரப்பள்ளி, சூளகிரி, பேரண்டப் பள்ளி, இஎஸ்ஐ மருத்துவ மனை அருகே, ஓசூர் அரசு மருத்துவமனை என 5 ஆம்புலன்ஸ்கள் இப்பகுதியில் இயங்குகின்றன. ஆம்புலன்ஸ் களில் பணிபுரியும் ஊழியர் களுக்கு தங்கும் வசதி இல்லாததால், வாகனங்களிலும், தேசிய நெடுஞ்சாலை நிழற்குடை களில் ஓய்வு எடுக்கும் அவலநிலை உள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர், இதுதொடர்பாக 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் நலச்சங்கத்தின் தலைவர் சாந்தமூர்த்தி ‘தி இந்து’விடம் கூறியதாவது:

விபத்து மற்றும் அவசர காலங்களில் பாதிக்கப் படு பவர்களை, ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சேர்த்துவிட்டு, மீண்டும் எங்களுக்கு வாகனம் நிறுத்த ஒதுக்கப்பட்ட இடத்திற்கு வந்துவிடுவோம். அழைப்பு வந்தவுடன், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிர்காக்கும் பணியில் ஈடுபடும் நாங்கள், எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாமல் அவதியுடன் பணியாற்றி வருகிறோம்.

வாகனங்கள் நிறுத்தும் இடத்தின் அருகே கிடைக்கும் சிறிது நேரத்தில் ஓய்வு எடுக்க முடியாத நிலை உள்ளது. இதனால், எங்களுக்கும், வாகனத்திற்கும் எவ்வித பாதுகாப்பும் இல்லை. மேலும், ஆம்புலன்ஸில் வைக்க சென்னையில் இருந்து அனுப்பி வைக்கப்படும் மருந்து உள்ளிட்டவற்றை, எந்த முகவரிக்கு அனுப்புவது என திண்டாடும் நிலை நீடித்து வருகிறது. எனவே, மாவட்ட நிர்வாகம் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x