Published : 13 Mar 2017 10:26 AM
Last Updated : 13 Mar 2017 10:26 AM
டீசல் விலை உயர்வால் அரசு போக்குவரத்து கழகங்களுக்கு மாதம் ரூ.9.21 கோடி கூடுதல் செலவு ஏற்படும். இதனால் போக்கு வரத்து கழகங்களில் நஷ்டம் அதிகரிக்கும் நிலை எழுந்துள்ளது.
தமிழகத்தில் சென்னை, மதுரை, நெல்லை, கும்பகோணம், கோவை, சேலம், விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகங்களிலும், அரசு விரைவு போக்குவரத்து கழகத்திலும் 23,078 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னை மாநகரில் 3,685, சென்னை தவிர்த்து
பிற நகரங்களில் 6,930, வெளியூர் களுக்கு 8,612, மலைப் பகுதிகளுக்கு 529 பேருந்துகளும், விரைவுப் போக்குவரத்து கழகம் சார்பில் பக்கத்து மாநிலங்களுக்கு 419, தமிழகத்துக்குள் 664 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. 2,239 மாற்றுப் பேருந்துகளும் உள்ளன.
மாநிலம் முழுவதும் அரசு பேருந்துகள் தினமும் 94.02 லட்சம் கி.மீ. தூரமும், மதுரை மண்டலத்தில் 4.21 லட்சம், திண்டுக்கல் மண்டலத்தில் 4.09 லட்சம், விருதுநகர் மண்டலத்தில் 2.11 லட்சம் கி.மீ. தூரமும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகளுக்கு தினமும் 17.74 லட்சம் லிட்டர் டீசல் தேவைப்படுகிறது. ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.59.75 ஆக இருந்த நிலையில், தமிழக அரசு வாட் வரியை உயர்த்தியதால் தற்போது லிட்டர் ரூ.61.38 ஆக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வால் தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்து கழகங்களுக்கு மாதம் ரூ.9.21 கோடி கூடுதல் செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 2015 ஜூன் மாதம் முதல் இப்போது வரை 38 முறை பெட்ரோல், டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதில் 6 முறை மட்டும் விலை குறைக்கப்பட்டது. 32 முறை விலை உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது பெட்ரோலுக்கான வாட் வரி உயர்த்தப்பட்டதால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.45-ம், டீசல் லிட்டருக்கு ரூ.1.45-ம் உயர்ந்துள்ளது. 2015 ஜூன் மாதம் டீசல் விலை லிட்டருக்கு ரூ.53.69 ஆக இருந்தது. இது தற்போது ரூ.61.38 ஆக உயர்ந்துள்ளது.
இது தொடர்பாக அரசு போக்குவரத்து கழக பணியாளர்கள் சம்மேளன மாநில பொருளாளர் எஸ்.சம்பத் கூறும்போது, “வரி, கடன் வட்டி, உதிரி பாகங்கள், டீசல் விலை உயர்வால் ஏற் கெனவே போக்குவரத்து கழகங்கள் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. இந்த நஷ்டங்களால் ஏற்படும் இழப்புகளை அரசே ஈடுகட்ட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். சென்னையில் நடைபெற்ற ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையிலும் அரசு போக்குவரத்து கழகங்களின் வருவாய், செலவு இடையே பெரிய அளவிலான வித்தியாசத்தை குறைக்க பட்ஜெட்டில் அரசு நிதி உதவி வழங்க வேண்டும் என பெரும்பாலான தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT