Last Updated : 17 Apr, 2014 09:20 AM

 

Published : 17 Apr 2014 09:20 AM
Last Updated : 17 Apr 2014 09:20 AM

சிறுவர்களின் உயிரைப் பறிக்கும் ஆழ்துளை கிணறுகள்: கண்டுகொள்ளப்படாத உச்ச நீதிமன்ற உத்தரவால் தொடரும் சோகங்கள்

ஆழ்துளை கிணறுகளில் விழுந்து குழந்தைகள் உயிரிழப்பதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவு பிறப்பித்துள்ளது.

எனினும் அந்த உத்தரவு கண்டுகொள்ளப் படாமல் இருப்பதால், ஆழ்துளை கிணறுகளில் விழுந்து ஏதுமறியாத பிஞ்சுகள் உயிரைவிடும் சோக நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.

தமிழ்நாட்டில் கடந்த இரண்டு வாரங்களுக்குள் 3 சிறுவர்கள் ஆழ்துளை கிணறுகளில் விழுந்துள்ளனர். இவர்களில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே வீட்டின் அருகில் இருந்த ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயதுச் சிறுமி மதுமிதா, பல மணி நேரப் போராட்டத்துக்குப் பின்னர் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி உயிருடன் மீட்கப்பட்டாலும், பின்னர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே குத்தாலப்பேரி என்ற கிராமத்தைச் சேர்ந்த ஆசிரியர் கணேசனின் 4 வயது மகன் ஹர்சன் கடந்த திங்கள்கிழமை ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்து, பின்னர் ரோபா இயந்திரத்தின் உதவியுடன் பத்திரமாக மீட்கப்பட்டான். இந்த சிறுவன் உயிருடன் மீட்கப்பட்ட செய்தியறிந்து தமிழக மக்கள் நிம்மதி அடைந்த நேரத்தில், திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கத்தை அடுத்த கிடாம்பாளையம் கிராமத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை ஆடு மேய்க்கச் சென்ற தனது தாத்தா, பாட்டியுடன் உடன் சென்ற சுஜித் என்ற ஒன்றரை வயது மழலை, மூடப்படாமல் இருந்த ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்து இறந்து விட்டது.

தொடரும் நிகழ்வுகள்:

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே கைலாசநாதபுரம் கிராமத்தில் கடந்த 2011-ம் ஆண்டு மாதம் நடைபெற்ற கோவில் திருவிழாவின்போது சுதர்சன் என்ற 5 வயதுச் சிறுவன் மூடப்படாத ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்தான்.

கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகேயுள்ள கும்மாளத்தூர் கிராமத்தில் குணா என்ற 3 வயது சிறுவன் கடந்த 2012-ம் ஆண்டு ஜனவரி மாதம் ஆழ்துளை கிணற்றில் விழுந்து சுமார் 6 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டான்.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கரூர் அருகே முத்துலட்சுமி என்ற 7 வயதுச் சிறுமி ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்தாள்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகேயுள்ள புலவன்பாடி கிராமத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தேவி என்ற 4 வயது குழந்தை ஆழ்துளை கிணற்றில் விழுந்து பலியானாள்.

இந்தியா முழுவதும்…

ராஜஸ்தான் மாநிலம் கராவுலி என்ற இடத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சோட்டு என்ற 9 வயது சிறுவன், மகாராஷ்டிர மாநிலம் துலே மாவட்டத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பட்டு தாங்கர் என்ற 3 வயது சிறுவன், ஆந்திர மாநிலம் கரீம் நகர் அருகே பல்லம்குண்டா என்ற கிராமத்தில் 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அஜீத் என்ற 5 வயது சிறுவன், அரியானா மாநிலம் குர்கான் அருகே 2013-ல் மஹி என்ற சிறுமி, இந்தூரில் சிறுவன் பயால் என ஏதும் அறியாத சின்னஞ்சிறு அப்பாவி பிஞ்சுக் குழந்தைகளின் உயிர்களை ஆழ்துளை கிணறுகள் பறிக்கும் கொடுமைகள் தொடர்கின்றன.

அமல்படுத்தப்படாத உச்ச நீதிமன்ற உத்தரவு:

தொடரும் ஆழ்துளை கிணறு மரணங்களைத் தடுக்கும் வகையில் உச்ச நீதிமன்றம் தெளிவான வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துள்ளது.

ஆழ்துளை கிணறுகளைத் தோண்டும்போது அது தொடர்பான விவரங்களை சம்பந்தப்பட்ட அரசுத் துறை அதிகாரிகளுக்கு நில உரிமையாளர்கள் தெரிவிக்க வேண்டும். வெளியாட்கள் யாரும் அருகில் செல்ல முடியாத வகையில் ஆழ்துளைக் கிணற்றைச் சுற்றி தடுப்புகள் அமைக்கப்பட வேண்டும். ஆழ்துளைக் கிணற்றின் குழாய்களை திறந்து வைக்காமல், உரிய அளவில் மூடியைக் கொண்டு மூடி வைக்க வேண்டும். பயன்படுத்தப்படாத அல்லது கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணறுகளை மண்ணைக் கொண்டு மூடி விட வேண்டும் என அந்த வழிகாட்டு நெறிமுறைகளில் கூறப்பட்டுள்ளன.

எனினும் இந்த உத்தரவு அமல்படுத்தப்படாத காரணத்தால் மழலைகள் மரணமடைவது தொடர்கிறது. பயன்படுத்தப்படாமல் மற்றும் மூடப்படாமல் இருக்கும் ஆழ்துளைக் கிணறுகளைக் கண்டறிந்து, அவற்றை மூடுவதற்கான நடவடிக்கைகளை வருவாய்த் துறை மற்றும் வேளாண்மைத் துறை போன்ற அரசுத் துறை அலுவலர்கள் தொடர்ச்சியாக மேற்கொள்ள வேண்டும். இதற்கான ஒரு நிரந்தர ஏற்பாட்டை அரசு உருவாக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x