Published : 01 Jun 2015 08:13 AM
Last Updated : 01 Jun 2015 08:13 AM
கூட்டணி ஆட்சி அமைந்தால்தான் ஊழலை தடுக்க முடியும். எல்லா வற்றிலும் வெளிப்படைத்தன்மை உருவாகும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறினார்.
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்ற தலைப்பில் கருத்தரங்கு ஒன்றை நடத்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக, பல்வேறு கட்சித் தலைவர்களை திருமாவளவன் சந்தித்து அழைப்பு விடுத்து வருகிறார். இந்நிலையில், ‘தி இந்து’வுக்கு அவர் நேற்று அளித்த சிறப்புப் பேட்டி:
கூட்டணி ஆட்சி என்ற கோரிக் கையை திடீரென முன்வைக்க காரணம் என்ன?
நீண்டகாலமாகவே இதைச் சொல்லி வருகிறோம். அது வெளிச் சத்துக்கு வரவில்லை. 1999-ல் முதன்முதலாக மூப்பனாரோடு கூட்டணி அமைத்தபோது, ‘கடைசி மனிதனுக்கும் ஜனநாயகம், எளிய மக்களுக்கும் அதிகாரம்’ என்ற முழக்கத்தை நிபந்தனையாக வைத் தோம். அதை அவர் உள்வாங்கிக் கொண்டு, ‘தலித்களுக்கு ஆட்சி யிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு’ என்று பிரகடனம் செய்தார்.
இப்போது எடுத்துள்ள முடிவு உங்களுக்கு கைகொடுக்கும் என்று நினைக்கிறீர்களா?
இது ஆபத்தான முடிவுதான். இதனால் திமுக, அதிமுக இடையே எங்களுக்கு மேலும் இடைவெளி ஏற்படக்கூடும். இந்த முடிவை மற்ற கட்சிகள் ஏற்காமல் ஒதுங்கலாம். அப்படி நடந்தால் நாங்கள் தனிமைப்படுத்தப்படுவோம். எனினும் ஜனநாயக ரீதியான எங்களது கோரிக்கையை கோட் பாடாக உயர்த்திப் பிடிக்கிறோம். இது மூன்றாவது அணிக்கான முயற்சி அல்ல. அதிகாரத்தை பரவலாக்குவதற்கான முயற்சி.
திமுகவுடன் நீண்டநாள் கூட்டணியில் இருந்த நீங்கள், இப்போது திடீரென புதிய முடிவை எடுத்தது ஏன்?
கூட்டணி ஆட்சி கோரிக்கையை எழுப்புவதன் மூலம் திமுகவோடு முரண்பாடு ஏற்பட்டுவிட்டது என்று பொருளாகாது. எங்களது நட்புறவு சிதையவில்லை. தேவைகளை நோக்கி கோரிக்கைகளை முன் வைக்கும்போது, நண்பர்களோடு கூட முரண்பட வேண்டி வரலாம்.
மனக்கசப்பு இல்லை என்கிற போது, உங்களின் கருத்தரங்குக்கு திமுகவை அழைக்காதது ஏன்?
திமுகவும் அதிமுகவும் கூட்டணிக்கு தலைமையேற்கிற கட்சிகளாக உள்ளன. எனவே, அவர்களை அழைப்பது நாகரிகம் அல்ல. பாஜக மதவாத கட்சியா கவும், பாமக சாதியவாத கட்சியாகவும் உள்ளன. எனவே, அவற்றையும் அழைக்கவில்லை. எங்களது கோட்பாட்டை பாஜகவும், பாமகவும் ஏற்றுக்கொண்டால் வரவேற்போம். ஆனால், கூட்டணி என்று இணையமாட்டோம்.
கூட்டணி ஆட்சி என்பது தமிழக நலனுக்கு எந்த வகையில் உதவும்?
ஏற்கெனவே கேரளம், மகாராஷ் டிரம், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கூட்டணி ஆட்சி முறை இருந்திருக்கிறது. அதிகார பரவலாக்கம்தான் உண்மையான ஜனநாயகம். ஒரு கட்சி ஆட்சி அதற்கு எதிரானது. பொருளாதாரம் ஒருவரிடம் குவியும்போது எப்படி அது முதலாளித்துவம் ஆகிறதோ அதுபோல, அதிகாரம் ஒருவரிடம் குவியும்போது, அது யதேச் சதிகாரம் ஆகிறது. கூட்டணி ஆட்சி நடந்தால் ஒருவரையொருவர் கண்காணித்துக் கொள்ள முடியும். ஊழலை தவிர்க்கலாம்; வெளிப் படைத்தன்மை உருவாகும்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தேர்தல் அங்கீகாரத்தை பெறாததற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?
நாங்கள் திட்டமிட்டே ஒதுக்கப்படுகிறோம். கூட்டணி அமைக்கும்போது கட்சியின் வலிமையைப் பார்த்து இடங்களை ஒதுக்காமல், சமூக அந்தஸ்தைப் பார்த்து ஒதுக்கும் நிலை உள்ளது. இவர்கள் தலித், இவர்களுக்கு அதிக இடங்களை கொடுத்தால் மற்ற சாதியைச் சேர்ந்தவர்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்ற அச்சமான போக்கு திமுக, அதிமுக விடம் கடந்த 15 ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. அதனால் எங்களுக்கு தேர்தல் அங்கீகாரம் கிடைக்கவில்லை.
நிறைய தொகுதிகளில் போட்டி யிட்டு தேர்தல் அங்கீகாரத்தைப் பெறுவதற்குதான் இந்த முயற்சியா?
கிட்டத்தட்ட அப்படித்தான். எங்களைப் போன்ற கட்சிகளை 2 முதல் 10 தொகுதிக்குள்ளாக அடக்கிவிடுகிறார்கள். மற்ற தொகுதிகளில் எங்களுக்கு உள்ள வாக்கு வங்கி, பிற கட்சிகளுக்கு போவதால் அவர்கள் வலிமை அடைகிறார்கள். இது ஒருவிதமான அரசியல் சுரண்டல்.
கூட்டணி ஆட்சி என்ற உங்கள் கோட்பாட்டுக்கு 2016-ல் வரவேற்பு இல்லை என்றால் யாரோடு கூட்டணி அமைப்பீர்கள்?
எந்தக் கூட்டணி என்பதை இப்போது சிந்திக்கவில்லை. எது வாயினும், கூட்டணி என்பது ஓட்டுக் காக மட்டுமல்ல, அதிகாரத்துக் கானது என்றிருக்க வேண்டும்.
இவ்வாறு திருமாவளவன் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT