Published : 08 Jul 2016 10:22 AM
Last Updated : 08 Jul 2016 10:22 AM
சுதந்திரப் போராட்ட காலகட்டத்தில் தாழ்த்தப்பட்டோரின் ஆலயப் பிரவேசத் துக்காக பாடுபட வேண்டுமென்று காந்தி யடிகள் வேண்டுகோள் விடுத்தார். இந்த வேண்டுகோளை ஏற்று, மதுரையைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவரும், வழக்கறிஞருமான அ.வைத்தியநாத அய்யர் தனது தலைமையில் தாழ்த்தப்பட்ட மக்களுடன் 1939 ஜூலை 8-ம் தேதி மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் ஆலயப் பிரவேசம் செய்தார். அன்றைய காலகட்டத்தில் இந்த ஆலயப் பிரவேசம் நாடு முழுவதும் பரவலாகப் பேசப்பட்டது. மற்ற பகுதிகளிலும் தாழ்த்தப்பட்ட மக்கள் ஆலயப் பிரவேசம் செய்ய இது ஒரு முன்னோட்டமாக அமைந்தது.
இதுகுறித்து மதுரை அம்மன் சன்னதி, காந்தி சிலை கமிட்டித் தலைவர் மு.சிதம்பரபாரதி கூறியதாவது:
ஆலயப் பிரவேசப் போராட்டத்தை முன்னெடுக்க யாரைத் தேர்ந்தெடுக்கலாம் என்று காந்தியடிகள் ராஜாஜியுடன் ஆலோசித்தார். சுதந்திரத் துக்காகவும், தாழ்த்தப்பட்ட மக்கள் நலனுக்காகவும் பல்வேறு போராட்டங் களை முன்னெடுத்த அ.வைத்தியநாத அய்யரை தேர்ந்தெடுத்தனர். வைத்தியநாத அய்யர் சாதாரண குடும்பத்தில் பிறந்து, ஆசிரியராக, வழக்கறிஞராகப் பணிபுரிந்தவர்.
வைத்தியநாத அய்யர், தாழ்த்தப்பட்ட மக்களுடன் மீனாட்சியம்மன் கோயிலில் ஆலயப் பிரவேசம் செய்ய முடிவெடுத்தபோது, அவரது சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆதரிப்போர் ஒருபுறம் வைத்தியநாத அய்யர் தலைமையில் பொதுக்கூட்டங்களும், எதிர்ப்புத் தெரிவிப்போர், அவரது வழக்கறிஞர் தொழில் ‘குருவான’ நடேச அய்யர் என்பவர் தலைமையில் பொதுக்கூட்டங்களும் நடத்தினர்.
இதனால், கலவரச் சூழல் உருவாகும் நிலை ஏற்பட்டது. சொந்த சமூகத்தினரின் எதிர்ப்பையும் மீறி, 1939 ஜூலை 8-ம் தேதி மீனாட்சியம்மன் கோயில் தெற்கு கோபுர வாசல் வழியாக தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கக்கன், முத்து, பி.ஆர்.பூவலிங்கம், வி.எஸ்.சின்னையா, ஆவலம்பட்டி முருகானந்தம், விருதுநகரைச் சேர்ந்த எஸ்.எஸ்.சண்முக நாடார் ஆகியோருடன் வைத்தியநாத அய்யர் மீனாட்சியம்மன் கோயிலுக்குள் செல்ல முயன்றனர்.
தாழ்த்தப்பட்டோர் ஆலயப் பிரவேசத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, அர்ச்சகர்கள் பூஜை செய்யமாட்டோம் என்றனர். சாமிநாத பட்டர் என்ற ஒரே ஒரு அர்ச்சகர் ஆலயப் பிரவேசத்துக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தார்.
அ.வைத்தியநாத அய்யர் தாழ்த்தப்பட்ட மக்களுடன், ஆலயத்தில் நுழைந்து கோயிலில் உள்ள பொற்றாமரைக் குளத்தில் கைகால் அலம்பினர். பின்னர், அய்யர் அனைவரையும் மீனாட்சியம்மனின் கர்ப்பக்கிரகம் வரை அழைத்துச் சென்றார். அர்ச்சகர் சாமிநாத பட்டர் பூஜை செய்து பிரசாதம் வழங்கினார். தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் அதுவரை கண்டிராத மீனாட்சியம்மனைக் கண்குளிர தரிசித்தனர். பின் கோயிலில் உள்ள முக்கிய இடங்களுக்குச் சென்று வழிபாடு செய்துவிட்டு கிழக்கு கோபுரவாசல் வழியாக வெளியே வந்தனர்.
தகவலறிந்து மதுரை மக்கள் ஆயிரக்கணக்கானோர் கிழக்கு கோபுரம் அம்மன் சன்னதி பகுதியில் கூடி நின்றனர். ஆலயப் பிரவேசம் நல்லபடி யாக நடந்தேறியதாக அய்யர் பொதுமக்களுக்கு அறிவித்து, அங்கு நின்றிருந்த தாழ்த்தப்பட்ட மக்களை நீங்களும் மீனாட்சியை தரிசனம் செய்ய திரண்டு வாருங்கள் என அழைத்தார். அன்று முதல் இன்று வரை அனைத்து சமூக மக்களும் மீனாட்சியம்மன் கோயிலில் சென்று வழிபட்டு வருகின்றனர் என்றார்.
ராஜாஜியின் ராஜதந்திரம்
சிதம்பரபாரதி மேலும் கூறும்போது, “ஆலயப் பிரவேசத்தைத் தொடர்ந்து கோபமடைந்த எதிர்ப்பாளர்களும், அர்ச்சகர்களும் மீனாட்சி தீட்டு பட்டுவிட்டதாக ஆலயத்தை இழுத்துப் பூட்டினர். எதிர்ப்பாளர்களுக்கு தலைமை தாங்கிய நடேச அய்யரின் வீட்டில் பால மீனாட்சி பிறந்துவிட்டதாக அங்கு பிரதிஷ்டை செய்து மீனாட்சிக்கு அபிஷேகங்கள் செய்யத் தொடங்கினர்.
மேலும், வைத்தியநாத அய்யர் மீது இந்து மத ஆலய சட்டங்களுக்கு விரோதமாக மீனாட்சியம்மன் கோயிலில் அத்துமீறி நுழைந்ததாக நடேசஅய்யர் கிரிமினல் வழக்கு தொடர்ந்தார். அதனால், அய்யர் தண்டனைக்குள்ளாகும் நிலை ஏற்பட்டது. இதைத் தவிர்க்க ஆலயப் பிரவேசத்துக்கு ஆதரவாக இருந்த அப்போதைய முதல்வர் ராஜாஜி தாழ்த்தப்பட்ட மக்களும் ஆலயப் பிரவேசம் செய்யலாம் என முன்தேதியிட்டு அவசரச் சட்டம் பிறப்பித்தார். நடேச அய்யர் தொடர்ந்த வழக்கு நீதிமன்றத்துக்கு வரும் நாளில் அந்த உத்தரவு நகலை மதுரை மாவட்ட ஆட்சியர் மூலம் நீதிமன்றத்தில் வழங்கச் செய்து வைத்தியநாத அய்யர் கைதாவதைத் தவிர்க்க உதவினார்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT