Published : 18 Apr 2014 11:54 AM
Last Updated : 18 Apr 2014 11:54 AM
காசநோயை (டி.பி.) 2 மணி நேரத்தில் கண்டுபிடிக்கும் கருவி சென்னை சேத்துப்பட்டில் உள்ள தேசியக் காசநோய் மருத்துவமனையில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம், பைன்டு தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஆகியவை இணைந்து காசநோய் கண்டுபிடிக்கும் ஜீன்எக்ஸ்பர்ட் (GeneXpert) என்ற புதிய கருவியை டெல்லி, ஹைதராபாத், சென்னை, கொல்கத்தா ஆகிய 4 முக்கிய நகரங்களில் அமைத்துள்ளன. இக்கருவி வியாழக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.
சென்னை சேத்துப்பட்டில் உள்ள தேசியக் காசநோய் ஆராய்ச்சி மருத்துவமனையில் ஜீன்எக்ஸ்பர்ட் கருவியை மத்திய சுகாதார அமைச்சக செயலர் ஜெகதீஷ் பிரசாத் திறந்து வைத்தார்.
25 லட்சம் பேருக்கு டி.பி.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
இந்தியாவில் 25 லட்சம் பேர் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 15 சதவீதத்துக்கும் அதிகமான குழந்தைகள் காசநோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.
சளியை எடுத்து நுண்ணோக்கி மூலம் பரிசோதனை செய்யும் முறைதான் தற்போது காசநோயை அறிய பின்பற்றப்பட்டு வருகிறது. குழந்தைகளின் காசநோய் குறித்து இந்த முறையில் அவ்வளவாக கண்டறிய முடிவதில்லை.
ஜீன்எக்ஸ்பர்ட் கருவி மூலம், 2 மணி நேரத்தில் பரிசோதனை செய்து நோய் கண்டறியப்பட்டவருக்கு, பரிசோதனை முடிந்த தினமே சிகிச்சை அளிக்க முடியும் என்றார்.
50 பாக்டீரியா போதும்
தற்போது பின்பற்றப்பட்டு வரும் நுண்ணோக்கி வாயிலான பரிசோதனை முறையில் சளியில் ஆயிரம் பாக்டீரியாக்கள் இருந்தால்தான் காசநோய் இருக்கிறதா என்று அறிய முடியும். ஆனால் ஜீன்எக்ஸ்பர்ட் கருவி மூலம் நடத்தப்படும் சோதனையில், சளியில் 50 பாக்டீரியாக்கள் இருந்தாலே கண்டுபிடிக்க முடியும் என்று சென்னை தேசியக் காசநோய் ஆராய்ச்சி மைய இயக்குநர் சவுமியா சுவாமிநாதன் கூறினார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT