Published : 02 May 2017 07:02 PM
Last Updated : 02 May 2017 07:02 PM

இப்போது ஈஸ்வரியின் முறை.. காவல்துறைக்கு சிக்கலை உருவாக்கிய வீடியோ ஆதாரங்கள்

நெடுஞ்சாலை பகுதிகளில் உள்ள மதுபானக்கடைகளை மூட நீதிமன்றம் உத்திரவிட்டதை தொடர்ந்து அதை எங்கெங்கோ அமைக்க திண்டாடுகிறார்கள் அரசு அதிகாரிகள்.

அதையொட்டி மக்கள் போராட்டங்களும் மூலைக்கு மூலை எழுந்த வண்ணம் உள்ளது. அது எந்த எல்லையை தொடும் என்பதெல்லாம் காலம் தீர்மானிக்கும் என்றாலும், காவல்துறை இந்த போராட்டங்கள் விஷயத்தில் அடக்குமுறையை கையாள துணிவதில்லை.

காரணம். திருப்பூர் மாவட்டம், சியாமளாபுரத்தில் நடந்த டாஸ்மாக் மதுபானக்கடைக்கு எதிரான போராட்டத்தில் காவல்துறை அதிகாரி ஒருவரின் அத்துமீறல். ஈஸ்வரி என்ற பெண்ணின் கன்னத்தில் அறைந்தும், தாக்கியும் எல்லை கடந்த சம்பவம்.

அது சமீபத்திய போலீஸாரின் அத்துமீறலுக்கு பெரும் பேசும் பொருளானது. இதற்கு அங்கு பதிவான ஒளிக்காட்சி பதிவுதான் ஆதாரம்.

இது தொலைக்காட்சிகளில் முதன்முறையாக வந்தபோது மேலதிகாரிகள் கூப்பிட்டு, சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளை அழைத்து என்ன நடந்தது என்று வினவியவேளை, ‘அது மார்பிங்; கிராபிக்ஸ்!’ என்றே பதில் சொல்லப்பட்டிருக்கிறது.

‘அது நேரலை’ என்று மேலதிகாரிகள் உலுக்கிய பின்புதான் சம்பவ இடத்தில் இருந்த காவல்துறை அதிகாரிகள் வியர்த்து விறுவிறுத்துப் போயிருக்கிறார்கள்.

இந்த சம்பவம் குறித்து முழுமையாக விசாரித்து அறிக்கை அளிக்க கோவை மாவட்ட எஸ்.பிக்கு மேற்கு மண்டல ஐஜி உத்திரவு பிறப்பிக்க, பல தரப்பட்ட விசாரணைகளை கடந்த 2 வாரகாலமாக செய்து ஜஜியிடம் அறிக்கை கொடுத்துள்ளார் எஸ்.பி.

அந்த அறிக்கையின்பாற்பட்ட என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பதெல்லாம் காவல்துறை அதிகாரிகளுக்கே வெளிச்சம்.

என்றாலும் கூட ஒட்டுமொத்த காவல்துறையும் பெண்கள் உரிமை ஆணையத்திற்கும், மனித உரிமை ஆணையத்திற்கும் பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் இருக்கிறது என்பது உண்மை.

காவல்துறை மனித உரிமை மீறல் தாக்குதல் நடத்துவது அவ்வப்போது நடக்கத்தான் செய்கிறது. எப்போதாவது மட்டும்தான் இப்படி அகப்பட்டுக் கொள்கிறார்கள்.

கோவையை பொறுத்தவரை மக்கள் போராட்டங்களிலும், கலவரச்சூழலிலும் இது மிகுதியாகவே அகப்பட்டிருக்கிறது.

1997 நவம்பர் ஆம் ஆண்டு போலீஸ்காரர் செல்வராஜ் கொலையின் எதிரொலியாக குறிப்பிட்ட சாராரை போலீஸார் தாக்கினர். லத்தி சார்ஜ் மற்றும் துப்பாக்கி சூடு நடத்தினர். சிலர் எரித்தும் கொல்லப்பட்டனர்.

அந்த வகையில் கோவை அரசு மருத்துவமனைக்கு பலத்த காயமடைந்து கொண்டு வரப்பட்ட ஒருவரையும், அவரைச்சார்ந்த நண்பர்களையும் போலீஸார் சிலர் சூழ்ந்து கொண்டு தாக்கினர்.

இது ஊடகங்களில் வெளியானது. அந்த நவம்பர் கலவரத்தை விசாரிக்க கமிஷன் அமைக்கப்பட்டது.

சம்பந்தப்பட்ட நேரடிச் செய்தியை முன்வைத்து கமிஷன் சம்பந்தப்பட்ட நிருபருக்கு சம்மன் அனுப்பியது.

1999 ஆம் ஆண்டு நீலகிரி தேயிலை விலை அதலபாதாளத்திற்கு சென்று தேயிலை தோட்டத்தொழிலாளர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டனர். மாதக்கணக்கில் தேயிலைக்கு உரிய விலை கேட்டு பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் போராடினர். அரசு பேருந்துகள் கொளுத்தப்பட்டன.

இந்த சூழலில் கேத்தி பகுதியில் நடந்த ஒரு போராட்டத்தில் லத்தி சார்ஜ் செய்து பலரை கைது செய்தது காவல்துறை. அப்படி கைது செய்யப்பட்ட ஒரு காவல்துறை வாகனத்தில் இருந்த 10 இளைஞர்களை வேறொரு வாகனத்திற்கு மாற்றியது. அப்படி இறங்கி அடுத்த வாகனத்திற்கு நடந்து போன அத்தனை இளைஞர்களும் ஜட்டியுடன் முக்கால் நிர்வாணமாக இருந்தனர்.

கடைசியாக சென்ற இளைஞரும் ஜட்டியுடனே, மற்றவர்களின் துணியை மூட்டை கட்டி தன் தோளில் சுமந்தபடி வாகனம் ஏறினார். அவர்கள் பின்னாலேயே லத்தியுடன் போலீஸ் அதிகாரி ஒருவர்.

அந்த இளைஞர்கள் வேனிற்குள்ளேயே வைத்து கடுமையாக லத்தியால் தாக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதும் அவர்களை பார்த்தவுடன் புரிந்தது. இதை ஒரு புகைப்படக்காரர் பதிவு செய்து விட்டார்.

அடுத்தநாள் அந்த காட்சி அனைத்து தினசரி, வார இதழ்களிலும் வெளி வந்தது. அது காவல்துறைக்கு கடும் நெருக்கடியை உருவாக்கி விட்டது.

மனித உரிமை ஆணையம் இதை விசாரித்தது. சம்பந்தப்பட்ட புகைப்பட நிபுணர் சம்மன் கொடுத்து அழைக்கப்பட்டார்.

அந்த புகைப்படக்காரர் கமிஷன் முன்பு ஆஜராகி உள்ளது உள்ளபடி சாட்சியம் சொன்னார். அதனால் போலீஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. 10 இளைஞர்களுக்கும் குறிப்பிட்ட தொகை நஷ்ட ஈடும் வழங்கப்பட்டது.

2010 ஆம் ஆண்டு. திருப்பூரில் லஞ்ச வாங்கும் அரசுத்துறையினரை வீடியோ எடுத்து இலஞ்ச ஒழிப்புத்துறையிடம் பிடித்துக் கொடுக்கும் வீடியோ சுப்பிரமணியத்தை அடித்து வேனில் ஏற்றினர் போலீஸார்.

ஒரு பெண் போலீஸ் அதிகாரியை தாக்கி வீடியோ எடுத்தார். அதற்காக பெண் வன்கொடுமை உள்ளிட்ட கடும் வழக்குகளில் அவர் கைது செய்யப்பட்டார்.

வீடியோ சுப்பிரமணியம் தரப்போ, 'ஒரு கடையில் சம்பந்தப்பட்ட பெண் அதிகாரி லஞ்சம் வாங்கினார் அதை வீடியோ எடுத்து விட்டார்

அதை சுத்தமாக மறுத்த அப்போதைய மேற்கு மண்டல உயர்போலீஸ் அதிகாரி சுப்பிரமணியத்தின் மீதே பல்வேறு கடும் சட்டப்பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தார்.

இந்த சூழ்நிலையில் சுப்பிரமணியம் சிறையில் இருக்கும்போதே அவரால் எடுக்கப்பட்ட அந்த பெண் போலீஸ் அதிகாரி லஞ்ச வீடியோ வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியது.

அதையொட்டி பெண் போலீஸ் அதிகாரி இடமாறுதலுக்கு பின் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார்.

இப்போது ஈஸ்வரியின் முறை. அப்பட்டமான வீடியோ ஆதாரம் காவல்துறை அதிகாரிக்கு எதிராக அகப்பட்டிருக்கிறது. என்ன நடக்கும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x