Published : 28 Mar 2017 01:20 PM
Last Updated : 28 Mar 2017 01:20 PM
நாமக்கல் நகராட்சியின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் கடந்த 2014-ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட ஜேடர்பாளையம் - நாமக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் இதுவரை செயல்படுத்தப்படாமல் உள்ளதால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
நாமக்கல் நகராட்சியுடன் காவேட்டிப்பட்டி, தும்மங்குறிச்சி, பெரியப்பட்டி என 9 கிராம ஊராட்சிகள் கடந்த உள் ளாட்சி தேர்தலுக்கு முன் இணைக்கப்பட்டன. அதன்கார ணமாக நாமக்கல் நகராட்சி வார்டு எண்ணிக்கை 30-லிருந்து 39 ஆக உயர்ந்தது. தவிர, நகராட்சி மக்கள் தொகை 1.20 லட்சமாக உயர்ந்தது. நகர எல்லையும் விரிவடைந்தது. ஏற்கெனவே நகராட்சியின் 30 வார்டுகளுக்கு மோகனூர் - நாமக்கல் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் புதியதாக இணைந்த 9 வார்டுகளுக்கும், மோகனூர் - நாமக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் பெற்றப்பட்ட தண்ணீரையே பகிர்ந்தளிக்க வேண்டிய சூழல் நிலவியது. இதனால் கோடை காலங்களில் குடிநீர் விநியோகம் செய்வதில் பெரும் சிரமம் நிலவியது. இப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் நகராட்சி மூலம் ஜேடர்பாளையம் - நாமக்கல் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது.
திட்டத்தின்படி ஜேடர்பாளையம் அணைக்கட்டில் இருந்து நாளொன்றுக்கு 3.09 கோடி லிட்டர் தண்ணீர் ஏற்றம் செய்யப்பட்டு கபிலக்குறிச்சி அருகே அமைய உள்ள சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்தம் செய்து, நாமக்கல் நகராட்சிக்கு கொண்டுவரப்படும். அந்த தண்ணீர் மேல்நிலை குடிநீர் தொட்டியில் ஏற்றம் செய்து, நகராட்சிக்கு உட்பட்ட 39 வார்டுகளுக்கும் விநியோகம் செய்யப்படும் என நகராட்சி நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.
இப்புதிய குடிநீர் அபிவிருத்தி திட்டத்திற்கு, கடந்த 2014-ம் ஆண்டு சட்டப்பேரவை கூட்டத்தொடரின்போது ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும், அப்போது திட்ட மதிப்பீடாக ரூ.161.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்தும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இது நாமக்கல் நகர மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் திட்டம் அறிவித்தும், நிதி ஒதுக்கீடு செய்தும் மூன்று ஆண்டுகளானபோதும், அதற்கான பணிகள் எதுவும் தொடங் கப்படாமல் உள்ளது. இதனால், நகர மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். புதிய குடிநீர் திட்டம் பயன்பாட்டுக்கு வருவது எப்போது என்ற எதிர்பார்ப்பு, நாமக்கல் நகர மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இதுகுறித்து நாமக்கல் நகராட்சி தலைமைப் பொறியாளர் ந.கமலநாதன் கூறுகையில், ‘‘ஜேடர்பாளையம் - நாமக்கல் புதிய குடிநீர் திட்ட மதிப்பீடு தற்போது ரூ.184 ஆகும். அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப் பணியை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தினர் மேற்கொள்கின்றனர். தற்போது டெண்டர் அறிவிக்கும் நிலையில் உள்ளது’’, என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT