Last Updated : 22 Jun, 2016 01:52 PM

 

Published : 22 Jun 2016 01:52 PM
Last Updated : 22 Jun 2016 01:52 PM

திருத்துறைப்பூண்டி - விளக்குடியில் ஒரே நாளில் அரசுப் பள்ளியில் 1-ம் வகுப்பில் 54 மாணவர்களை சேர்த்து சாதனை

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள விளக்குடி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில், ஒரே நாளில் 1-ம் வகுப்பில் 54 மாணவர்கள் சேர்க்கப்பட்டனர்.

அரசுப் பள்ளிகளில் அதிக அளவு மாணவர்களைச் சேர்ப்பதற்காக, கல்வித் துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில், ஆங்கிலப் பள்ளிக்கு இணையான கல்வித் தரத்தை வழங்குவதால், விளக்குடி அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது.

விளக்குடி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில், 1 முதல் 5-ம் வகுப்பு வரை 217 மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு 8 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். விளக்குடி, ராயநல்லூர், மேட்டுப்பாளையம் கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள், இப்பள்ளியில் பயின்று வருகின்றனர்.

இந்நிலையில், பெற்றோர்-ஆசிரியர் கழகம், பள்ளி மேலாண்மைக் குழு, கிராமக் கல்விக் குழு ஆகியவற்றின் முயற்சியால், இப்பள்ளியில் 1-ம் வகுப்பில் 37 மாணவிகள், 17 மாணவர்கள் என 54 பேர் நேற்று சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதையொட்டி, முதல் வகுப்பில் சேரும் மாணவர்களை, விளக்குடி கடைவீதியிலிருந்து பள்ளிக்கு நேற்று ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். அனைவருக்கும் கல்வி இயக்க உதவி திட்ட அலுவலர் சங்கரநாராயணன் தலைமையில், உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பாலசுப்பிரமணியன், பெற்றோர்-ஆசிரியர் கழகத் தலைவர் பாஸ்கரன், கல்விக் குழுத் தலைவர் கோவிந்தசாமி, பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவி கவிதா மற்றும் பெற்றோர், ஆசிரியர்கள் இதில் கலந்துகொண்டனர். பள்ளிக்குச் சென்றதும், நெல் மணிகளைப் பரப்பி, அதில் மாணவர்களை ‘அ, ஆ…’ எழுத வைத்தனர்.

இதுகுறித்து பள்ளித் தலைமை ஆசிரியை கமலா கூறும்போது, “எங்கள் பள்ளியில் ஆங்கிலப் பள்ளியில் கற்பிக்கப்படுவதுபோல பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. இதனால், எங்கள் பள்ளியின்மீது பெற்றோர் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். இங்கு பயிலும் மாணவர்களுக்கு, அரசு வழங்கும் புத்தகங்கள், குறிப்பேடுகள், சீருடைகள், பை உள்ளிட்ட அனைத்தும் இலவசமாக வழங்குகிறோம். நடப்பாண்டில், பிற ஆங்கிலப் பள்ளியில் படித்த மாணவர்கள் 6 பேர், எங்கள் பள்ளியில் சேர்ந்துள்ளனர்” என்றார்.

உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பாலசுப்பிரமணியன் கூறும்போது, “ஆங்கிலப் பள்ளிகளின் தாக்கத்தால், அரசுப் பள்ளிகள் மூடப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதைத் தடுக்க கல்வித் துறை முழு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அரசுப் பள்ளிக்கு வரும் மாணவர்களுக்குத் தேவையான அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது. விளக்குடி பள்ளி, மற்ற ஆங்கிலப் பள்ளிகளுக்கு நிகராகச் செயல்படுவதால், ஆங்கிலப் பள்ளியில் படித்தவர்கள்கூட இப்பள்ளியில் சேரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு, ஆசிரியர்கள், பெற்றோரின் ஒத்துழைப்பு முக்கியக் காரணமாகும். இப்பள்ளியை, சிறந்த ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியாக தேர்வு செய்ய, கல்வித் துறைக்குப் பரிந்துரை செய்யப்படும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x