Published : 26 Mar 2014 12:00 AM
Last Updated : 26 Mar 2014 12:00 AM
‘நெல்லை எனக்கு எல்லை, குமரி எனக்கு தொல்லை’ என்று, ஒருமுறை தி.மு.க. தலைவர் கருணாநிதி தெரிவித்திருந்தார். ஆனால், கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது கன்னியாகுமரி மாவட்டத்தில் 6 சட்டமன்றத் தொகுதிகளில் நான்கில் தி.மு.க. கூட்டணியே வெற்றி பெற்றது.
தேசியக் கட்சிகளின் கையில் இருந்த கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில், கடந்த முறை தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஹெலன் டேவிட்சன் வெற்றி பெற்றார். ஆனால், இந்த தேர்தலை உற்சாகமே இல்லாமல் எதிர்கொள்கின்றனர், குமரி தி.மு.க.வினர்.
கனிமொழி சிபாரிசு
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில், தி.மு.க. சார்பில் போட்டியிட முன்னாள் எம்.பி. ஆஸ்டின், தற்போதைய எம்.பி. ஹெலன் டேவிட்சன், முன்னாள் எம்.எல்.ஏ. ராஜரத்தினம், மனோ தங்கராஜ் உள்ளிட்ட பலரும் சீட் கேட்டனர். இதில், எப்.எம்.ராஜரத்தினத்துக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
சிட்டிங் எம்.பி. ஹெலன் டேவிட்சனுக்கு ஆதரவாக கனிமொழி சிபாரிசு கடிதம் கொடுத்திருந்தார். ஆனால், அது பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. மனோ தங்கராஜ் சீட் கேட்டு முட்டிய போதும், அவருக்கும் மாவட்டச் செயலாளர் சுரேஷ் ராஜனுக்கும் ஏழாம் பொருத்தம். இடையில் சில காலம் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தார் மனோ தங்கராஜ். இதனால், சீட் ரேசிலிருந்து அவரும் ஒதுக்கப்பட்டார்.
மா.செ. தேர்தல்
ஆஸ்டினுக்கு சீட் கிடைக்கும் என அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், புதிதாக கட்சியில் இணைந்தது அவரது பலவீனமாக இருந்தது. தி.மு.க.வில் விரைவில் நடக்க இருக்கும் மாவட்ட செயலாளர் தேர்தலில் எப்.எம்.ராஜரத்தினம் வசம் 30 வாக்குகள் இருக்கின்றன. அதைப் பெறும் முயற்சியில் தி.மு.க. மாவட்ட செயலாளர் சுரேஷ்ராஜன் அவரை சிபாரிசு செய்ததாக கூறப்படுகிறது.
தனிமையில் சுற்றுகிறார்
தி.மு.க.வின் மிகப்பெரிய பலவீனம் வைட்டமின் ‘ப’தான் என்கின்றனர் கட்சியின் உள்நடப்பு அறிந்தவர்கள். அ.தி.மு.க., பா.ஜ.க. வேட்பாளர்கள் ஆள், படை, அம்பாரி சகிதம் சென்று வாக்கு சேகரிக்கும் நிலையில், தி.மு.க. வேட்பாளர் எப்.எம்.ராஜரத்தினம், தன்னுடைய பழைய அம்பாசிடர் காரில் தனியாக சுற்றி வருகிறார். தலைமையில் இருந்து ஒவ்வொரு தேர்தலுக்கும் முன்னதாகவே வைட்டமின் ‘ப’ வந்து விடும். ஆனால் இந்த தேர்தலுக்கு இதுவரை வந்து சேரவில்லை, என்கின்றனர் உடன்பிறப்புகள்.
சுற்றி சுழல்கின்றனர்
அ.தி.மு.க. தரப்பில் வேட்பாளர் ஜான் தங்கத்தை ஆதரித்து, முதல்வர் பிரச்சாரம் செய்து சென்றுள்ளார். அதன் பின் பரிதி இளம்வழுதி, தலைமைக் கழக பேச்சாளர் பாத்திமா பாபு, நடிகர்கள் ராமராஜன், செந்தில், சிங்கமுத்து, தியாகு போன்றவர்கள் பிரச்சாரம் செய்துள்ளனர். கொள்கை பரப்பு துணை செயலாளர் நாஞ்சில் சம்பத்தும் சுற்றி வருகிறார்.
ஆனால் தி.மு.க. முகாமில் இதுவரை ஸ்டாலின் மட்டுமே பிரச்சாரம் செய்து சென்றுள்ளார். அ.தி.மு.க. சார்பில் ஒவ்வொரு கிராமங்களுக்கும் பிரச்சார வாகனங்கள் சென்று வருகின்றன. ஆனால் தி.மு.க. முகாம் இதுவரை எந்த வேலையையும் தொடங்கவில்லை.
போகப் போகத் தெரியும்
தி.மு.க. நிர்வாகி ஒருவரிடம் கேட்ட போது, ‘முன்பெல்லாம் கிராமங்கள் தோறும் காரியாலயம் திறப்பாங்க. காலையில் இருந்து இரவு வரை அதில் கட்சிக்காரங்க இருப்பாங்க. இரவு கடலை அவிச்சு, சுக்கு காபி போட்டு குடிப்பாங்க. ஆனால் இந்த முறை தலைமையில் இருந்து இன்னும் பணம் எதுவும் வரவில்லை.
வேட்பாளர் கைக்காசு தான் இப்போ மாவட்ட செயலாளர் மூலமா கொடுத்திட்டுருக்காங்க. அந்த பணம் குறைவா இருக்குறதால கிராமப் பகுதிகளுக்கு பட்டுவாடா செய்ய முடியல. இந்த தொகுதியில் அ.தி.மு.க. முதல் முறையாக போட்டியிடுது. ஆனால், பிரச்சாரம் அனல் பறக்குது.
அதே நேரத்தில் தி.மு.க.வில் காசு இல்லாததால் தான் தள்ளாட்டம். வேட்புமனு தாக்கலுக்கு பிறகு தி.மு.க. துள்ளி ஓடும்’ என்றார்.
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியை பொறுத்தவரை தி.மு.க. இதுவரை பெரிய அளவில் பிரச்சாரமோ, விளம்பரமோ செய்யாத நிலையில் இனி வரும் நாட்கள் தி.மு.க.வுக்கு சாதகமா? பாதகமா என்பது போக, போகத் தான் தெரியும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT