Published : 03 Mar 2017 09:25 AM
Last Updated : 03 Mar 2017 09:25 AM
நண்பர் கலாநிதி பவேஸ்வரன் காட்சி ஊடகம் ஒன்றில் பரபரப்பாக இயங்கியவர். திடீரென வேலையைத் விடுத்து சொந்த ஊருக்குத் திரும்பி விட்டார். ‘‘எனது வேலை இதுவல்ல. என் மண்ணுக்காக, என் மண்ணின் மக்களுக்காக செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது’’ என்பவர், மரபுரீதியான உணவு, மருத்துவம் உள்ளிட்டவற்றை மீட்பதற்காக பணியாற்றுகிறார். இதேபோல நண்பர் ரமேஷ் கருப்பையாவும் வேலையைத் துறந்துவிட்டு சொந்த ஊரில் நீர் நிலைகளையும் மரபு விவசாயத்தையும் மீட்கும் வேலைகளை செய்கிறார்.
உள்ளாட்சியின் தத்துவமும் மண் சார்ந்த, மரபு சார்ந்த விஷயங்களை மீட்பதுதான். காந்தி விரும்பிய தற்சார்பு கிராமங்கள் உருவாக்கப்பட்டிருந்தால் இன்றைக்கு சென்னையைப் போன்ற பெருநகரங்களுக்கு மக்கள் இடம் பெயரத் தேவையில்லை. சுற்றுச் சூழலை நாசப்படுத்தத் தேவையில்லை. கிராமங்களின் இயற்கை வளங் களைக் கொள்ளையடிக்கத் தேவை யில்லை. அணு உலை தேவையில்லை. ஹைட்ரோ கார்பன் தேவை யில்லை. மண்ணின் மைந்தர்களான நீங்கள் உங்கள் ஊரில் அதிகாரம் பெற்றிருந்தால், உங்கள் மண் மீது யாரேனும் உரிமை கொண்டாட முடியுமா? மண்ணை மீட்க வெளியே இருந்து போராடுபவர்கள் உள்ளாட்சியில் பிரதிநிதித்துவம் பெறுவதே மேற்கண்ட பிரச்சினை களுக்கு தீர்வாக இருக்கும்.
2015-2020 ஆண்டுக்கான ஓடிசாவின் நான்காவது மாநில நிதிக்குழு அறிக்கை யின் 4-ம் பக்கத்தில் இருக்கும் வரிகள் இவை: ‘‘கிராமப் பஞ்சாயத்துத் தலைவி யான ஆரத்தி தேவியுடன் கலந்துரையாடும் வாய்ப்பு இந்தக் குழுவுக்கு கிடைத்தது. அவர் எங்களுக்கு உள்ளாட்சி நிர்வாகம், பெண் குழந்தைகள் கல்வி, அதிகாரத்தில் பெண்களைப் பங்கு பெற செய்வது உள்ளிட்டவை குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்...” - என்று நீள்கிறது அந்த அறிக்கை.
ஒரு கிராமப் பஞ்சாயத்துப் பெண் தலைவரை அந்த மாநில அரசு இதைவிட வேறு எப்படி பெருமைப்படுத்திவிட முடியும்!
ஒடிசா மாநிலம், துங்கபடா என்கிற சிறு கிராமம்தான் ஆரத்தி தேவியின் சொந்த கிராமம். எம்.பி.ஏ. மற்றும் சட்டம் படித்துவிட்டு புவனேஸ்வர் நகரத்தில் பன்னாட்டு வங்கி ஒன்றில் முதலீட்டு ஆலோசகராக இருந்தார் ஆரத்தி தேவி. உயர் பதவி, நவநாகரீக உடைகள், நுனி நாக்கு ஆங்கிலம், ஆடம்பரமான நகர வாழ்க்கை என்று சென்றுகொண்டிருந்தது அவரது நாட்கள். ஒருநாள் அலுவலகத்துக்கு வெளியே சலசலப்பு. வாசலில் கிராமத்தினர் சிலரை உள்ளே விட மறுத்து வாக்குவாதம் செய்துகொண் டிருந்தார்கள் காவலர்கள். அவர்கள் ஆரத்தியின் பெயரைச் சொல்லவே அவர் வெளியே வந்தார். வந்தவர்கள் ஆரத்தி தேவியின் கிராமத்தினர்.
ஊர்ப் பெரியவர் ஒருவர்தான் பேசினார், ‘‘எங்கள் மண்ணைக் கட்டிக் காத்த சுதந்திரப் போராட்ட வீரருடைய பேத்தி நீ. கடந்த தலைமுறையில் உன் பெற்றோரைப் போன்று பலரும் கிராமத்தைவிட்டு வெளியேறிவிட்டார்கள். மராமத்து செய்யாமல் நீர்நிலைகள் வறண்டு விட்டன. விவசாய நிலங்கள் பாழ்பட்டுக் கிடக்கின்றன. வேலைக்காக பலரும் வெளியேறிவிட்டார்கள். எளியவர்கள் மட்டுமே எஞ்சியிருக்கிறோம். உணவின்றி மக்கள் தவிக்கிறார்கள். உங்கள் மண்ணுக்கு நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?” என்றார் அவர். அவரது வார்த்தைகள் ஆரத்தியை உலுக்கின. வேலையைத் துறந்தார். சொந்த ஊர் திரும்பினார். உள்ளாட்சித் தேர்தலை சந்தித்தார்.
2012-ல் அவர் தலைவராக வென்ற போது வயது 26. வசதியாக வாழ்ந்தவர், கிராமத்தில் தனியாக தங்கினார். கிராமத்துக்கு நீண்டகாலமாக ரேஷன் கடை இல்லாமல் இருந்தது. ரேஷன் கடையைக் கொண்டு வந்ததுடன், வறுமைக் கோட்டுக்குக் கீழிருக்கும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் 5 கிலோ கோதுமையையும் மண்ணெண்ணை யும் வழங்க ஏற்பாடு செய்தார். ஒவ்வொரு மாதமும் கிராம சபையில் குறைந்தது 1,000 பேர் பங்கேற்பைக் கட்டாயமாக்கினார். நிர்வாகத்தில் வெளிப்படை தன்மையை ஏற்படுத் தினார். அதுவரை அரசியல் கட்சியின ரின் ஒப்பந்ததாரர்களுக்கு அளிக்கப் பட்டு வந்த கிராமத்தின் சாலை, பாலம், கட்டிடப் பணிகள் உள்ளூர் மக்களுக்கு அளிக்கப்பட்டன. நீர்நிலைகள் தூர் வாரப்பட்டன. விவசாயம் செழித்தது.
துங்கபடா உயர்நிலைப் பள்ளி யில் இரு ஆசியர்கள் மட்டுமே அனைத்துப் பாடங்களையும் எடுத்துக் கொண்டிருந்தார்கள். கல்வித் துறையை எதிர்பார்க்காமல் பஞ்சாயத் தின் சொந்த நிதியில் ஆசிரியர்களை ஒப்பந்தப் பணியில் நியமித்தார் ஆரத்தி. ஊரில் ஆண் - பெண் பேதங்கள் அதிகம் இருந்தன. பெண்கள் அனை வரும் கல்வியறிவு பெற ‘திப்பா நுஹன் தஸ்தஹத்’ (கைநாட்டு அல்ல, கையேழுத்திடுவோம்) இயக்கத்தைத் தொடங்கினார். கிராமத்தின் அத்தனை பெண்களும் அடிப்படை கல்வி பயில் வதைக் கட்டாயமாக்கினார். ஊரில் பள்ளிக்குச் செல்லாத குழந்தையே இல்லை என்ற நிலையை உருவாக்கி னார். அழியும் நிலையில் இருந்த தனது கிராமத்தின் நாட்டுப்புறக் கலையான ‘குமுரா’வை மீட்டெடுத்தார்.
கடந்த 2014-ம் ஆண்டு அமெரிக்க அரசாங்கத்தின் கல்வி மற்றும் கலாச்சார நடவடிக்கைகளுக்கான பரிமாற்றக் குழு நிகழ்வில் இந்திய நாட்டின் பிரஜையாக கலந்துகொண்டு அதிபர் ஓபாமாவை சந்தித்தார் ஆரத்தி தேவி. அந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டதன் மூலம் முன்னாள் பிரதமர்கள் மொரார்ஜி தேசாய், இந்திரா காந்தி, வாஜ்பாய், முன்னாள் ஜனாதிபதிகள் கே.ஆர். நாராயணன், பிரதீபா பாட்டீல் ஆகியோர் வரிசையில் இடம் பெற்றார் ஆரத்தி தேவி. சில மாதங்களுக்கு முன்புதான் ஆரத்தி தேவியின் பதவி காலம் நிறைவடைந்தது. கட்சியின் விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டு பதவியில் இல்லாமலேயே பணிகளைத் தொடர முடிவு செய்துள்ளார்.
தமிழகத்தின் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் இளைஞர்களுக்கு ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா என்று ஆரத்தி தேவியிடம் கேட்டேன். “தமிழகத்தின் சூழலை உன்னிப்பாக கவனித்து வருகிறேன். படித்த பெண் களும் இளைஞர்களும் அரசியலில் பங்கேற்க வேண்டும். தமிழகத்தில் பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக் கீடு அளித்திருக்கிறார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. பெண்கள் அதனை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அரசியல் அதிகாரத்துக்கு வருவது மட்டுமே பெண்களை அடிமைத் தளையில் இருந்து விடுவிக்கும்...” என்றார்.
- தொடரும்... | எண்ணங்களைப் பகிர: sanjeevikumar.tl@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT