Published : 02 Feb 2014 12:00 AM
Last Updated : 02 Feb 2014 12:00 AM
வரத்து அதிகரிப்பால் சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது.
தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து மட்டுமின்றி ஆந்திரா, மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து கோயம்பேடு சந்தைக்கு வரும் காய்கறிகள்தான் பெருமளவில் சென்னையின் காய்கறி தேவையை பூர்த்தி செய்கின்றன.
தற்போது காய்கறி வரத்து அதிகரித்திருப்பதால், விலை குறைந்துள்ளது. இதுகுறித்து கோயம்பேடு சந்தை காய்கறி வியாபாரிகள் சங்கங்களின் ஆலோசகர் வி.ஆர்.சவுந்தரராஜன் கூறியதாவது:
ஊட்டி, ஒட்டன்சத்திரம், தாராபுரம், உடுமலைபேட்டை, பெரம்பலூர், ஒசூர், திருவள்ளூர் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, தக்காளி, உருளைக்கிழங்கு, முட்டைக்கோஸ், கேரட், கத்திரிக்காய், சாம்பார் வெங்காயம், வெண்டைக்காய், முருங்கை காய் உள்ளிட்ட காய்கறிகள் தினமும் கோயம்பேடு சந்தைக்கு வருகின்றன.
ஆந்திரம், கர்நாடகம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வெங்காயம், பீன்ஸ், தக்காளி, உருளைக்கிழங்கு, கேரட், முட்டைக்கோஸ், கத்தரிக்காய், பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகள் வருகின்றன.340 லாரிகளில் வருகிறதுதலா 15 டன் எடை கொண்ட 300 லாரிகள் தினமும் கோயம்பேடு சந்தைக்கு வந்தன. கடந்த ஆண்டில் பொழிந்த வடகிழக்கு பருவமழை, காய்கறி விளைச்சலுக்கு சாதகமாக அமைந்தது.
இதனால், விளைச்சல் அதிகரித்தது. கடந்த நவம்பரில் இருந்து கோயம்பேடு சந்தைக்கு வரும் காய்கறி லாரிகளின் எண்ணிக்கையும் படிப்படியாக உயர்ந்தது. ஜனவரி 15 முதல் தினமும் 340 லாரிகள் வருகின்றன. இதனால், கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் விலை மிக கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது.பெரிய வெங்காயம் 3 மாதங்களுக்கு முன்பு சில்லறை விலையில் கிலோ ரூ.100-க்கு விற்கப்பட்டது. தற்போது விலை ரூ.15 முதல் 20 வரை விற்கப்படுகிறது. ரூ.25-க்கு விற்ற கத்திரிக்காய் ரூ.10 முதல் ரூ.12 வரையும், ரூ.35-க்கு விற்ற அவரைக்காய் ரூ.20 முதல் ரூ.25 வரையும், ரூ.40-க்கு விற்ற தக்காளி ரூ.7-க்கும் சில்லறை விலையில் விற்கப்படுகின்றன.
மார்ச் வரை நீடிக்கும்
முட்டைக்கோஸ் கிலோ ரூ.10, முள்ளங்கி ரூ.13, கேரட் ரூ.15, நூக்கல் ரூ.10, பீட்ருட் ரூ.10, சவ்சவ் ரூ.10 என மற்ற காய்கறிகளின் விலையும் மிகமிக குறைந்துள்ளன. காய்கறி விலை நிலவரம் மார்ச் வரை இப்படித்தான் இருக்கும்.
இவ்வாறு வி.ஆர்.சவுந்தரராஜன் தெரிவித்தார்.
தேங்காய் விலை அதிகரிப்பு
வரத்து குறைவு காரணமாக கோயம்பேடு சந்தையில் தேங்காய் விலை கணிசமாக அதிகரித்துள்ளது. இதுகுறித்து தேங்காய் மொத்த வியாபாரி அயப்பராஜ் கூறியதாவது:கோயம்பேட்டுக்கு பொள்ளாச்சி, பட்டுக்கோட்டை, பேராவூரணி, மைசூர் உள்ளிட்ட பகுதி
களில் இருந்து தேங்காய்கள் வருகின்றன. பனிக்காலம் என்பதால் தேங்காய் விளைச்சல் குறைந்துள்ளது. வழக்கமாக 50 லாரிகளில் வரும் தேங்காய் தற்போது 20 லாரிகளில்தான் வருகிறது. இதனால், தேங்காய் விலை கணிசமாக அதிகரித்துள்ளது.
மொத்த விலையில் ஒரு தேங்காய் ரூ.16, ரூ.18, ரூ.20, ரூ.25 என அளவுக்கேற்ப விற்கப்படுகிறது. 600 கிராம் எடையுள்ள நடுத்தர அளவு கொண்ட தேங்காய் ரூ.18-க்கும் பெரிய தேங்காய் ரூ.25-க்கும் விற்கப்படுகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT