Published : 07 Nov 2013 12:00 AM
Last Updated : 07 Nov 2013 12:00 AM
ஏற்காடு இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் சனிக்கிழமை தொடங்குகிறது. அதிமுகவும் திமுகவும் வேட்பாளரை அறிவித்து தேர்தல் பணிகளில் மும்முரம் காட்டி வரும் நிலையில், தேமுதிக தனது முடிவை இன்னும் அறிவிக்கவில்லை.
அதிமுக எம்எல்ஏ பெருமாள் மரணமடைந்ததைத் தொடர்ந்து ஏற்காடு தொகுதிக்கு டிசம்பர் 4-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. இதற்கான வேட்புமனுத் தாக்கல், நாளை மறுநாள் (9-ம் தேதி) தொடங்கி, 16-ம் தேதி முடிகிறது. வேட்புமனுத் தாக்கலுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
தமிழகத்தின் பிரதான அரசியல் கட்சிகளின் கவனம் எல்லாம் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு நடக்கவிருக்கும் ஏற்காடு இடைத்தேர்தல் மீதுதான் இருந்து வருகிறது. நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தங்களை தயார்படுத்திக் கொள்வதற்கான சோதனைக் களமாக இந்த இடைத்தேர்தலை பிரதான கட்சிகள் கருதுகின்றன.
எல்லோரையும் முந்திக்கொண்டு, முதலில் வேட்பாளரை அறிவித்த திமுக, தேர்தல் பணிகளில் தீவிரமாக இறங்கிவிட்டது. அக்கட்சியின் வேட்பாளர் மாறன், கிராமம் கிராமமாகச் சென்று வாக்கு சேகரிக்கத் தொடங்கிவிட்டார். கட்சி நிர்வாகிகளும் ஏற்காட்டில் முகாமிட்டு தேர்தல் பணிகளை கவனித்து வருகின்றனர்.
அதிமுக சார்பில், மறைந்த எம்எல்ஏ பெருமாளின் மனைவி சரோஜாவையே வேட்பாளராக அறிவித்துவிட்டது. அனைத்து அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் உள்பட 60 பேர் கொண்ட மெகா தேர்தல் பணிக்குழுவை ஜெயலலிதா அமைத்துள்ளார். அவர்களும் அரசின் சாதனைகளைச் சொல்லி ஓட்டு வேட்டையாடத் தொடங்கிவிட்டனர்.
கம்யூனிஸ்டுகள் உள்பட சில கட்சிகள் அதிமுகவுக்கும், விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம் ஆகியவை திமுகவுக்கும் ஆதரவு அளிப்பதாக அறிவித்துவிட்டன. சட்டமன்ற பிரதான எதிர்க்கட்சியான தேமுதிக இன்னமும் தனது முடிவை அறிவிக்கவில்லை. கட்சி நிர்வாகிகளைக் கேட்டால், இடைத்தேர்தலில் போட்டியிடுவது உறுதி என்கின்றனர்.
காமன்வெல்த் மாநாட்டில் இந்தியாவின் பங்கேற்பு பற்றி அதிகாரப்பூர்வ தகவல் வரும் வரை காத்திருக்க முடிவு செய்திருப்பதாக தேமுதிக நிர்வாகிகள் கூறுகின்றனர். காங்கிரஸ் அல்லது திமுகவுடன் தேமுதிக கூட்டணி சேரும் என்ற எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்றால் திமுகவின் நிலை என்னவாக இருக்கும் என்பதை வைத்து காய் நகர்த்த தேமுதிக தலைமை முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. வேட்புமனு தாக்கலுக்கு 16-ம் தேதி வரை அவகாசம் இருக்கிறது.
நவம்பர் 15-ம் தேதி காமன்வெல்த் மாநாடு தொடங்க இருப்பதால் காங்கிரஸ் மற்றும் திமுகவின் நிலைப்பாடு தெரிந்துவிடும், அதன்பிறகு இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான உத்தியை வகுப்பதில் ஒரு தெளிவான முடிவினை எடுக்க முடியும் என்பதால் வேட்பாளர் அறிவிப்பு தள்ளி வைக்கப்பட்டிருப்பதாக மற்றொரு தரப்பினர் கூறுகிறார்கள்.
மதிமுகவும் மவுனமாகவே இருந்து வருகிறது. தமிழக காங்கிரசார் தலைமையின் உத்தரவை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT