Published : 26 Jul 2016 10:34 AM
Last Updated : 26 Jul 2016 10:34 AM
சிவகங்கை மாவட்டத்தில் நாவல் மரங்கள் நிறைந்த கண்மாய்களில், மதுரையைச் சேர்ந்த தேனீ வளர்ப்போர் மருத்துவ குணம் நிறைந்த தேன் சேகரிக்கின்றனர்.
மதுரை கடச்சனேந்தலைச் சேர்ந்தவர் ஜோஸ்பின்(40). இவர் இயற்கை முறையில் தேன் சேகரித்து விற்பனை செய்து வருகிறார். மலைத்தேன், கொம்புத்தேன், நாவல்தேன் என மருத்துவ குணம் வாய்ந்த தேன் சேகரிக்க, தமிழகம் முழுவதும் சென்று வருகிறார்.
சிவகங்கை மாவட்டம். கல்லல் அருகே சீமைக் கருவேல மரங்கள் இல்லாத, நாவல் மரங்கள் நிறைந்த கூமாச்சிபட்டி கண்மாயில் நாவல் தேன் எடுப்பதற்காக 500 தேனீ பெட்டிகளுடன் தற்போது முகாமிட்டுள்ளார். நாவல் தேன் எடுப்பதற்காக ஆண்டுதோறும் கூமாச்சிபட்டி கண்மாய்க்கு வருகிறார். இந்தமுறை நாவல் தேன் எடுக்க வந்த ஜோஸ்பின், ‘தி இந்து’விடம் கூறியதாவது:
இயற்கையில் தேனுக்கு நிகரான உணவு இல்லை. பல சத்துகள் அடங்கியுள்ளன. தேன் மூவா மருந்தென்றும், சாவா மருந் தென்றும் அழைக்கப்படுகிறது. வேப்ப மரங்கள் சூழ்ந்த தோப்பில் தேனீ பெட்டியை வைத்து பெறும் தேன் வேம்புத் தேன் ஆகும்.
30 வகையான தேன்
இந்த முறையில் நாவல் தேன், குங்குமப்பூத் தேன், பூண்டுத் தேன், மலைத் தேன், இஞ்சித் தேன், துளசித் தேன், அத்திப்பழத் தேன், ரோஜா தேன், வெட்டிவேர் தேன், கொம்புத் தேன் என 30 வகையான தேன் சேகரிக்கிறோம். இது பல மருத்துவக் குணம் வாய்ந்தது. இதற்காக தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் செல்கிறோம். மலைத் தேன் எடுப்பதற்காக கேரளாவுக்கு செல்கிறோம்.
இயற்கையில் தேனீ விவசாயி களின் நண்பன். தேனீக்கள் மூலம் மகரந்தச் சேர்க்கை நடைபெற்று மகசூல் அதிகரிப்பதால் தனியார் தோப்புக்காரர்கள் தேனீ பெட்டிகளை வைக்க எங்களை அனுமதிக்கின்றனர்.
இந்த மாதம் நாவல் பழம் காய்க்கும் பருவம் என்பதால் நாவல் மரங்கள் நிறைந்த கூமாச்சி பட்டி கண்மாய்க்கு வந்துள்ளோம். சிவகங்கை மாவட்டத்தில் கூமாச்சிபட்டி கண்மாயில் சுமார் 500 தேனீ பெட்டிகள் வைத்து தேன் சேகரிக்கத் தொடங்கியுள்ளோம். கடந்த ஆண்டு இரண்டாயிரம் கிலோ தேன் சேகரித்தோம். இந்த ஆண்டு 10 ஆயிரம் கிலோ தேன் சேகரிக்க முடிவெடுத்துள்ளோம். சுமார் 20 நாட்களுக்கு ஒருமுறை தேன் எடுப்போம்.
இதில், நாவல் மரங்களில் இருந்து எடுக்கப்படும் தேன் சர்க்கரை நோயாளிகளுக்கு மருந்தா கிறது. தேனீக்களை பக்குவமாகக் கையாண்டால் நம்மை தாக்காது. இதற்கு, தேனீக்களுக்கு அதிர்வு கொடுக்காமல் இருந்தால் நம் சொல்படி கேட்கும். தேன் அடையிலிருந்து ஈக்களை விரட்டுவதற்கு தேங்காய் மட்டை நாரில் தீயிட்டு அதிலிருந்து வரும் புகையை தேனீக்கள் மீது படச்செய்தால் ஈக்கள் பறந்து, அதே பெட்டியில் உள்ள மற்றொரு அடைக்கு சென்றுவிடும்.
இலவச பயிற்சி
இதுபோன்ற புகைபோக்கிகளை நாங்களே தயாரித்துள்ளோம். பின்னர் இந்த கண்மாயிலேயே தேனைப் பிழிந்து எடுத்துவிடு வோம். மழைக்காலத்தில் சேத மடையாத வகையில் பிளாஸ்டிக் கூடு தயாரித்துள்ளோம். இதற்காக, பெண்களுக்கும் இலவசமாக பயிற்சி அளித்து வருகிறோம்.
வேளாண் அறிவியல் நிலையத்தில் பயிற்சி பெற்று முன்னேறியுள்ளேன். இதற்காக, ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை இலவசமாக பயிற்சி அளித்து வருகிறேன். வீட்டுக்கு ஒரு தேனீ பெட்டி இருந்தால் போதும் மாதம் ரூ.2 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT