Published : 06 Nov 2013 12:26 PM
Last Updated : 06 Nov 2013 12:26 PM
விழுப்புரம் மாவட்டம் திருகோவி லூர் பேரூராட்சியில் அனாதை சடலங்கள் ஆற்றில் வீசப்படுவ தால், அப்பகுதி மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகின்றனர்.
திருகோவிலூர் பேரூராட்சியின் மக்கள்தொகை சுமார் 30,000. இதன் தலைவராக தி.மு.க.வைச் சேர்ந்த தேவி முருகன் பதவி வகிக்கிறார். இப்பகுதியில் இறக்கும் ஆதரவற்றோரின் சடலங்களைக் காவல்துறைக்கு தெரிந்தே பேரூராட்சி ஊழியர்கள் தென்பெண்ணை ஆற்றில் 2 அடி ஆழத்தில் ஒப்புக்குப் புதைக்கிறார்கள். ஆற்றின் வெள்ளப்பெருக்காலும், நாய், நரிகள் தோண்டுவதாலும் அந்த சடலங்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்படுகின்றன.
“இந்த ஆற்றின் வழியாக மணம்பூண்டிக்கு செல்லும் மாணவர்களும் பொதுமக்களும் எப்போது எங்கு சடலம் கிடக்கும் என்ற பயத்துடன் ஆற்றைக் கடக்கின்றனர்” என சி.பி.ஐ. (எம்.எல்.) கட்சியின் மாவட்ட துணைத்தலை வர் பிரபாகரன் கூறுகிறார்.
யூனியன் ஆபீஸ் சாலை வழியாக நாம் அந்த தென்பெண்ணை ஆற்றுக்குச் சென்றபோது நகரின் குப்பைகள் ஆற்றங்கரையில் கொட்டப்பட்டு, அதில் பன்றிகள் மேய்ந்துகொண்டிருந்தன. ஆற்றுக்குள் ஆங்காங்கு மணல் குவியல் காணப்பட்டது. அதன் மேல் முள் வைக்கப்பட்டிருந்தது.
அவை அனாதை சடலங்கள் புதைக்கப்பட்டிருப்பதின் அடையாளம் என அக் கட்சியைச் சேர்ந்த பாஸ்கர், லோகநாதன், தணிகாசலம் ஆகியோர் தெரிவித்தனர்.” சடலங்கள் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு, ஆற்றங்கரையோரம் குடியிருக்கும் வீட்டுக்கு அருகில் ஒதுங்கியதும் உண்டு . 200 கிலோமீட்டர் துாரத்தில் சுடுகாடு இருந்தும் ஆற்றில் ஏன் புதைக்கிறார்கள் என்று தெரியவில்லை” என அவர்கள் கூறுகின்றனர்.
இது தொடர்பாக திருகோவிலூர் பேரூராட்சி செயல்அலுவலர் சுந்தரத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது, “ஒரு சடலத்தை அடக்கம் செய்ய துப்புரவு பணியாளர்களுக்கு ரூ.200 வழங்கப்படுகிறது. நீங்கள் சொல்லும் தகவல் இப்போதுதான் கேள்விப்படுகிறேன். அப்படி இருந்தால் இனிமேல் நிகழாமல் பார்த்துக்கொள்கிறேன்” என்றார்.
தே.மு.தி.க. எம்.எல்.ஏ. வெங்கடேசனிடம் இதுகுறித்து பேசியபோது, “வருகின்ற கூட்டத் தொடரில் இதுகுறித்து அரசின் நேரடி கவனத்திற்கு கொண்டு செல்கிறேன். இலவசத்தை வாரி வழங்கும் அரசு இதில் அக்கறை செலுத்தத் தவறிவிட்டது ”என்றார். சி.பி.ஐ. எம்.எல்லின் மாவட்டச்செயலாளர் வெங்கடேசன் கூறும்போது,” அத்தண்டை மருதுார் அணைக்கட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆற்றில் புதைக்கப்பட்ட சடலங்கள் கரை ஒதுங்கின. பிறகு அதிகாரிகள் அந்த சடலங்களை மீண்டும் புதைத்தனர். உடனடியாக இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காவிட்டால் எங்கள் கட்சி சார்பில் போராட்டம் நடத்துவோம்” என்றார்.
இப்பிரச்சினை குறித்து விழுப்புரம் எஸ்.பி. மனோகரனிடம் தெரிவித்தோம். அவர் உடனடியாக திருகோவிலூர் இன்ஸ்பெக்டர் மகேஷை தொடர்புகொண்டு, இதுகுறித்து விசாரித்தார். தொடர்ந்து உதவி ஆட்சியர் சுபேத்குமாரிடமும் பேசினார். பின்னர் நம்மிடம் பேசிய அவர் ” சுகாதாரத்துறை, பேரூராட்சி அதிகாரிகள், வருவாய்த்துறையினரை ஒருங்கிணைத்து உடனடியாக கூட்டம் நடத்துவதாக தெரிவித்துள்ளார். இனிவரும் காலங்களில் ஆற்றில் சடலங்கள் புதைக்கப்படாது. அங்கு எச்சரிக்கை பலகை வைக்கப்படும். இது தொடர்பாக கலெக்டரிடம் பேசி அனாதை சடலங்களை புதைக்க வேறு இடம் ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
தனி இடம் ஒதுக்க வேண்டும்
”அனாதை சடலங்களை சுடு காட்டில் புதைக்க அந்தந்த ஊர் மக்கள் அனுமதிக்க மாட்டார்கள். அதனால் இதுபோன்ற இடங்களில் அவற்றைப் புதைக்கின்றனர். ஒவ்வொரு மதத்துக்கும் தனித்தனி சுடுகாடு உள்ளது. ஆதரவின்றி இறக்கும் நபர்கள் எந்த மதத்தைச் சேர்ந்த வர்கள் என கண்டுபிடிப்பது சிரமமாக உள்ளது. எனவே, இதற்கென தனி இடத்தை அரசு ஒதுக்கவேண்டும்” என பெயர் சொல்ல விரும்பாத அரசு அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT