Published : 12 Apr 2014 10:55 AM
Last Updated : 12 Apr 2014 10:55 AM
திமுக-வுக்கு கூட்டணி தோழனாய் நிற்கும் திக தலைவர் கி.வீரமணி, திமுக கூட்டணி வேட்பாளர்களுக்காக தமிழகம் முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் இருக்கிறார். நீலகிரியில் ஆ.ராசாவுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் இருந்த அவர் ‘தி இந்து’வுக்கு அளித்த சிறப்புப் பேட்டி.
திமுக-வுக்கு ஆதரவாக நீங்கள் மேற்கொண்டிருக்கும் பிரச்சாரத்துக்கு மக்கள் மன்றத்தில் வரவேற்பு எப்படி உள்ளது?
மக்கள் மத்தியில் மதச்சார்பற்ற அணிக்கு நல்ல வரவேற்பு உள்ளது. மக்கள் நல்ல விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள்.
ராமர் கோயில் கட்டுவோம் என்பது உள்ளிட்ட பாஜக தேர்தல் அறிக்கையில் உள்ள அம்சங்கள் குறித்து உங்கள் கருத்து?
பாஜக-வை ஆர். எஸ்.எஸ். தான் பின்னணியில் இருந்து இயக்குகிறது. இந்தத் தேர்தலில் யார் யார் எந்தெந்தத் தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று தீர்மானித்ததுகூட ஆர்.எஸ்.எஸ்.தான். இதற்கெல்லாம் உதாரணம்தான் பாஜக தந்திருக்கும் தேர்தல் அறிக்கை . ராமர் கோயில் கட்டுதல், காஷ்மீர் மாநிலத்துக்கான 370 சிறப்பு சட்டப் பிரிவு நீக்கம், பொதுச் சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் போன்ற அஜென் டாக்கள் (செயல் திட்டங்கள்) இதுநாள் வரையில் மறைமுகமாக வைக்கப்பட் டிருந்தன. இப்போது தேர்தல் அறிக்கை யாக வெளிச்சத்துக்கு வந்திருக்கின்றன.
பாஜக தேர்தல் அறிக்கையில் உள்ள அம்சங்கள் தமிழகத்தை எந்தளவுக்கு முன்னேற்றும். இதனால் பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு என்ன பயன்?
தமிழக மீனவர் பிரச்சினை, ஈழத் தமிழர் விவகாரம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு பாஜக தேர்தல் அறிக்கையில் எந்தவித உத்தரவாதமும் இல்லை. மாறாக, சேது சமுத்திரத் திட்டத்தை கைவிடப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். இவை எல்லாமே தமிழகத்தில் பாஜக-வுடன் கூட்டணி உடன்படிக்கை செய்து கொண்டுள்ள திராவிடக் கட்சிகளுக்கு பேரதிர்ச்சியாகத்தான் இருக்க முடியும்.
காங்கிரஸும் பாஜக-வும் மக்கள் மத்தியில் ஆதரவை இழந்து வருகிறது என்றால் மூன்றாவது அணிக்கு உங்களது ஆதரவு உண்டா?
மூன்றாவது மாற்று அணி என்பது ஏற்கெனவே கருச்சிதைவு அடைந்த ஒன்று. இந்த முறை மூன்றாவது மாற்று அணி என்ற கரு கூட உருவாகவில்லை. மாற்று அணி உருவாகும்போது அப்போது ஆதரவு குறித்துத் தெரிவிக்கப்படும்.
தேர்தல் முடிவுகள் பாஜக-வுக்கு சாதகமாக அமைந்து மத்தியில் அக்கட்சி ஆட்சி அமைத்தால் திமுக அதற்கு ஆதரவளிக்குமா?
நூறு சதவீதம் அதற்கான வாய்ப்புகள் இல்லை. திமுக தலைவர் கருணாநிதி மதச்சார்பற்ற அணி ஆட்சியமைக்க மட்டுமே திமுக ஆதரவளிக்கும் என திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறார். எனவே அந்த சந்தேகம் உங்களுக்கு வேண்டாம்.
அலைக்கற்றை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆ.ராசாவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்கின்றீர்கள். அவருக்கு வெற்றிவாய்ப்பு எப்படி உள்ளது?
ஆ.ராசாவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று தெள்ளத் தெளிவாக உணர்ந்திருக்கிறார்கள்.
திமுக-வை விட்டு நீக்கப்பட்ட அழகிரி தொடர்ந்து கட்சிக்குள் குழப்பம் விளை வித்து வருகிறார். அவர் மீது தொடக் கத்திலேயே நடவடிக்கை எடுக்காமல் விட்டதை கருணாநிதி செய்த தவறாகக் கருதுகிறீர்களா?
அழகிரி சம்பந்தப்பட்ட விஷயங்களில் திமுக-தான் கருத்துத் தெரிவிக்க வேண்டும்.
இலங்கை பிரச்சினை உள்ளிட்ட விவகாரங் களில் காங்கிரஸுக்கு சாதகமாகவே இருந்த திமுக, கடைசி நேரத்தில் கூட் டணியிலிருந்து வெளியேறியதை நியாயப்படுத்துகிறீர்களா?
ஈழ விவகாரம் உள்ளிட்ட தமிழர் நலன் சார்ந்த பல்வேறு விவகாரங்களில் திமுக-வின் நியாயத்தை காங்கிரஸ் புரிந்து கொள்ளவில்லை. அதனால்தான் அமைச்சரவையிலிருந்து திமுக வெளியேறியது. என்றாலும் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்து அந்த பழி தங்கள் மீது வரக்கூடாது என்பதற்காகவே மத்திய அரசுக்கு திமுக வெளியிலிருந்து ஆதரவளித்து வந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT