Published : 11 Jan 2014 12:00 AM
Last Updated : 11 Jan 2014 12:00 AM

ஜல்லிக்கட்டுக் காளைகளுக்காக தயாராகும் சொகுசு வாகனம்

தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டுகளில் ஒன்றாக ஜல்லிக்கட்டு கருதப்படுகிறது. தமிழகத்தில் மதுரை, திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை மற்றும் தென்மாவட்டங்களில் பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக் கட்டு நடத்தப்படுகிறது.

ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் முன்பெல்லாம் ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்கு நடத்தியே கொண்டு செல்லப் பட்டன. அதன் பின்னர், ஒரு வேனில் நான்கைந்து காளைகளை ஏற்றிக் கொண்டு சென்றனர். பல மணிநேரங்கள் மிகுந்த சிரமமான நிலையில் பயணிப்பதால் காளை கள் சோர்வடைந்து, ஜல்லிக்கட்டில் முழு வேகத்தில் பங்கேற்க முடிய வில்லை என்கின்றனர் ஜல்லிக்கட்டு காளைகள் வளர்ப்போர்.

சொகுசு வாகனம்…

திருச்சியில் பயிற்சி பெறும் தனது காளைகளை ஜல்லிக்கட்டுக்கு கொண்டு செல்ல பிரத்யேகமான வாகனத்தை உருவாக்க முடிவு செய்த தமிழர் வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு வீரவிளையாட்டு பாதுகாப்பு சங்கத்தின் கெளரவத் தலைவர் செந்தில் தொண்டைமான் இதற்கான நடவடிக்கைகளை தொடங்கினார்.

திருச்சி பிராட்டியூரில் உள்ள டி.டி. என்ற வாகனங்களுக்கு பாடி கட்டும் நிறுவனத்தில் இந்த வாகனம் தற்போது தயாராகி, முடியும் தருவாயில் உள்ளது.

இந்த வேனின் பின்பகுதியில் ஒவ்வொரு காளையும் தனித்தனியே பயணிக்கும் வகையில் அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரே நேரத் தில் இந்த வேனில் 5 காளைகளைக் கொண்டு செல்ல முடியும்.

குளுகுளு வசதி

காளைகள் வெயிலில் களைப்படையாமல் இருக்க ஏர் கூலர், மின்விசிறி உள்ளிட்ட வசதிகளும் இந்த வாகனத்தில் செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து தமிழர் வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு பாதுகாப்பு சங்க மாநிலச் செயலர் ஒண்டிராஜ் கூறியது: “ஜல்லிக்கட்டுக் காளைகளை துன்புறுத்துகிறோம் என சிலர் குரலெழுப்பி வருகின்றனர். ஆனால், ஒவ்வொரு காளையையும் எந்த வகையில் சிறப்பாகப் பராமரித்து வருகிறோம் என்பதை அதன் வளர்ப்புக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தை அருகில் இருந்து பார்த்தால் தான் தெரியும்.

காளைகளை ஒரே வாகனத் தில் ஏற்றிச் செல்லும் போது, அவை களுக்கு பெரும் சிரமம் ஏற்படுகிறது. தற்போது கட்டமைக்கப்பட்டு வரும் சொகுசு வாகனத்தில் காளைகள் எந்தச் சிரமமும் இல்லாமல் பயணிக்கும்” என்றார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x