Published : 03 Apr 2017 12:04 PM
Last Updated : 03 Apr 2017 12:04 PM
வறட்சியான பகுதியை பசுமையாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களால் தொடங்கப்பட்ட 'வனத்துக்குள் அருப்புக்கோட்டை' என்ற இயக்கம், கடந்த 7 மாதங்களில் 3,500 மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகிறது.
பருவநிலை சீராக இருக்கவும், மழை தவறாது பெய்யவும் முக்கிய காரணியாக இருப்பவை மரங்கள். சாலை மற்றும் குடியிருப்புகள் விரிவாக்கம் உள்ளட்ட பல்வேறு காரணங்களால் அதிக அளவிலான மரங்கள் அழிக்கப்படுகின்றன. இதன் காரணமாக பருவ நிலை மாற்றம், இயற்கை சீற்றம் உள்ளிட்ட பிரச்சினைகளை சந்தித்து வருகிறோம். இயற்கை மற்றும் பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த, மரங்களை பேணுவதும், நாம் வாழும் பகுதியில் மரக்கன்றுகளை நட்டுவைத்து பசுமையாகவும், குளிர்ச்சியாகவும் வைத்துக்கொள்வதே ஒரே வழி.
இதை உணர்ந்த அருப்புக்கோட்டை இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஒன்று கூடி ‘வனத்துக்குள் அருப்புக்கோட்டை’ என்ற இயக்கத்தைத் தொடங்கி கடந்த 7 மாதங்களில் 3,500-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டுவைத்து பராமரித்து வருகின்றனர்.
இந்த இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும் யோகா ஆசிரியருமான அருப்புக்கோட்டை திருநகரைச் சேர்ந்த சுந்தர்ராஜன் கூறியதாவது:
வறட்சியான பகுதியான அருப்புக் கோட்டையை மரங்கள் சூழ்ந்த பகுதியாக மாற்றுவதே எங்கள் லட்சியம். இதற்காக கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி ‘வனத்துக்குள் அருப்புக்கோட்டை’ என்ற இயக்கத்தைத் தொடங்கினோம். இதில் யோகா பயிற்சி பெறும் மாணவர்கள், பள்ளி, கல்லூரி மாணவர் கள், இளைஞர்கள், தன்னார்வலர்கள், தொழிலதிபர்கள், வியாபாரிகள், வணிகர்கள் என பல்வேறு தரப்பினரும் இணைந்துள்ளனர். இதற்காக தனியாக ஒரு வாட்ஸ் அப் குழுவை தொடங்கினோம். இதன் மூலம் பசுமையின் அவசியம் குறித்த தகவல்களை பகிர்ந்து வருகிறோம்.
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று கூடி மரக்கன்றுகளை நடுகிறோம். அதற்கு தவறாமல் தண்ணீர் ஊற்றவும் ஏற்பாடு செய்துள்ளோம். இதற்கு எங்கள் குழுவில் உள்ளவர்களும், சமூக ஆர்வலர்களும், வெளிநாடுகளில் வாழும் அருப்புக்கோட்டையை சேர்ந்தவர்களும் நிதி உதவி அளித்து வருகின்றனர். வேம்பு, புங்கை, கொன்றை, இலுப்பை, மருத மரம், ஆலமரம், அரசமரம் உள்ளிட்ட மரக்கன்றுகளை நடுகிறோம். இதுவரை 3,500-க்கும் அதிகமான மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகிறோம். அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நடுவதற்கு இலக்கு நிர் ணயித்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT