Last Updated : 01 Aug, 2016 09:27 AM

 

Published : 01 Aug 2016 09:27 AM
Last Updated : 01 Aug 2016 09:27 AM

ரூ.5 ஆயிரம் மதிப்பு டிவிக்கு ரூ.7 ஆயிரம் வரியா?- மதுரை விமான நிலையத்தில் எல்சிடி டி.வி.யை உடைத்த தொழிலாளி

திருச்சி மாவட்டம், லால்குடியைச் சேர்ந்தவர் முருகேசன். இவர் துபையில் தொழிலாளியாக பணியாற்றுகிறார். நீண்ட நாளாக சொந்த ஊருக்கு வராமல் இருந்தார். இந்நிலையில், தனது மனைவி, குழந்தைகளை பார்க்க சொந்த ஊருக்கு திரும்பத் திட்ட மிட்டார். இதுபற்றி குடும்பத்தினரிடம் தெரிவித்த போது, அவர்கள் எல்சிடி வாங்கிவரும்படி கூறியுள்ளனர். இதற்காக ஆசை, ஆசையாக மலிவான விலையில் டிவி ஒன்றை துபையில் வாங்கியுள்ளார்.

இந்நிலையில், ஸ்பைஸ் ஜெட் விமானம் மூலம் கடந்த வெள்ளிக்கிழமை மதுரை விமான நிலையத்துக்கு அவர் வந்தார். அவர் கொண்டு வந்திருந்த பொருட்களை பரிசோதித்த அதிகாரிகள் எல்சிடி டிவிக்கு ரூ. 7 ஆயிரம் வரி விதிப்பதாகக் கூறினர். அதிர்ச்சி அடைந்த முருகேசன், ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள டிவிக்கு எப்படி ரூ. 7 ஆயிரம் வரி செலுத்த முடியும். என்னிடம் அவ்வளவு பணம் இல்லை. ரூ.2 ஆயிரம் மட்டும் இருக்கிறது என அதிகாரிகளிடம் கெஞ்சிக் கேட்டும் அவர்கள் கேட்கவில்லையாம். இதனால் கோபமடைந்த முருகேசன், தான் கொண்டு டிவியை போட்டு உடைத்தார். இச்சம்பவம் விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் செரீப் கூறியது: துபை போன்ற வெளிநாடுகளுக்கு சாதாரண பணிக்குச் செல்லும் தொழிலாளர்கள் கொண்டு வரும் பொருட்களுக்கு வரி என்ற பெயரில் அதிக தொகை வசூலிப்பது, கெடுபிடி செய்வதால் தங்களது குடும்பத்தினர் ஆசைப்படும் பொருட்களை தொழிலாளர்களால் கொண்டுவர முடியவில்லை. லால்குடியை சேர்ந்த முருகேசன் துபையில் தள்ளுபடி விலையில் ரூ. 5 ஆயிரம் மதிப்புள்ள எல்சிடி டிவியை வாங்கி வந்துள்ளார். இதற்கு ரூ. 7 ஆயிரம் வரி கேட்டதால் கோபத்தில் உடைத்துவிட்டு, மன வேதனையுடன் சென்றார்.

விலை உயர்ந்த கம்பெனி பொருட்களுக்கு கூடுதல் வரி வசூலிக்கலாம். சாதாரண தொழிலாளர்கள் கொண்டு வரும் பொருட்களுக்கு நடைமுறையிலுள்ள வரியை வசூலிக்க அதிகாரிகள் முன் வரவேண்டும் என்றார்.

இதுகுறித்து விமான நிலைய அதிகாரி ஒருவர் கூறியது: முருகேசன் கொண்டு வந்த டிவிக்கு விதிமுறைப்படிதான் ரூ. 7 ஆயிரம் வரி விதிக்கப்பட்டது. அதை அவர் செலுத்த முன்வரவில்லை. அந்த டிவியை, அவர் கை தவறி கீழே போட்டு விட்டதால் சேதமடைந்தது. இதுபற்றி அவரே எழுதிக் கொடுத்துவிட்டு சென்றார் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x