Published : 06 Jun 2015 03:58 PM
Last Updated : 06 Jun 2015 03:58 PM

மூடநம்பிக்கையை பரப்பும் வகையில் மழைக்காக சிறப்பு பூஜை செய்வதா? - ராமதாஸ் கேள்வி

வறட்சியைப் போக்க மழை வேண்டும் என்ற நோக்கத்தில் எந்த தவறும் கிடையாது. ஆனால், மூடநம்பிக்கையை பரப்பும் வகையில் மழை வேண்டி சிறப்பு பூஜைகளை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துவது கண்டிக்கப்பட வேண்டியது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழ்நாட்டை நான்காவது ஆண்டாக வறட்சி வாட்டிக் கொண்டிருக்கும் நிலையில், மழை பெய்ய வேண்டி தமிழகத்திலுள்ள பொதுப்பணித்துறையின் நீர்வளப்பிரிவு செயற்பொறியாளர்கள் அனைவரும் சிறப்பு பூஜைகளை நடத்த வேண்டும் என்றும், அதுகுறித்த விவரங்களை தலைமை அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்றும் அத்துறையின் தலைமைப் பொறியாளர் அசோகன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

வறட்சியைப் போக்க மழை வேண்டும் என்ற நோக்கத்தில் எந்த தவறும் கிடையாது. அறிவியலும், தொழில்நுட்பமும் வளர்ச்சியடைந்துள்ள இக்காலத்தில், செயற்கை மழை பெய்ய ஏற்பாடு செய்திருந்தால் அதை வரவேற்று பாராட்டியிருக்கலாம். அதை விடுத்து மூடநம்பிக்கையை பரப்பும் வகையில் மழை வேண்டி சிறப்பு பூஜைகளை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துவது கண்டிக்கப்பட வேண்டியதாகும்.

மன்னன் எவ்வழியோ மக்களும் அவ்வழி என்பார்கள். அதேபோல், ஜெயலலிதாவின் விடுதலைக்காக அமைச்சர் பெருமக்கள் அனைவரும் யாகம், பூஜை போன்றவற்றில் ஈடுபட்டதன் பாதிப்போ என்னவோ அதிகாரிகளும் அதே வழியில் செல்லத் தொடங்கியுள்ளனர். இது மிகவும் ஆபத்தான போக்காகும்.

பகுத்தறிவுக்கும், அறிவியலுக்கும் ஒவ்வாத இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதை விடுத்து, வறட்சிக்கு அறிவியலின் உதவியுடன் தீர்வு காண்பதற்கு தலைமைப் பொறியாளர் முயல வேண்டும்'' என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x