Published : 27 Dec 2013 12:00 AM
Last Updated : 27 Dec 2013 12:00 AM
சென்னை தரமணியிலும் மயிலாப்பூரிலும் பொது இடங்களில் மக்களுக்கு இடையூறாகவும் விதிகளுக்கு புறம்பாகவும் டாஸ்மாக் கடைகள் இருக்கின்றன. குடித்து விட்டு தகாத முறையில் நடந்து கொள்வதால் அப்பகுதியினருக்கு குறிப்பாக பெண்களுக்கு இவை பெரும் ஆபத்தாக உள்ளன.
தரமணி நூறடி சாலையில் எஸ்.ஆர்.பி.டூல்ஸ் முதல் விஜயநகர் பேருந்து நிலையம் வரை 12 கடைகளும், எம்.ஜி.அர். சாலையில் மூன்று கடைகளும் உள்ளன.
நூறடி சாலையில், பிள்ளையார் கோயிலுக்கும், பேருந்து நிறுத்தத்துக்கும் மிக அருகில் ஒரு டாஸ்மாக் கடை அமைந்திருப்பதால் பேருந்து நிறுத்தத்தில் காத்திருப்பவர்களும், கோயிலுக்கு வருபவர்களும் அவதிக்குள்ளாகின்றனர்.
இது குறித்து அப்பகுதியில் வசிக்கும் ஹனீபா கூறுகையில், “டாஸ்மாக் கடையை வேறு இடத்துக்கு மாற்றக் கோரி 3 மாதங்களுக்கு முன் போராட்டம் நடத்தினோம். ஆனால் பேருந்து நிறுத்தத்தை 20 அடி தள்ளி அமைத்துவிட்டு பிரச்சினை முடிந்தது என்று அதிகாரிகள் கூறுகின்றனர்” என்றார்.
அதே நூறடி சாலையில் தேவாலயத்துக்கு எதிரில், வீரபாண்டிய தெரு முனையில் இருக்கும் டாஸ்மாக் கடை பிரதான சாலைக்கு செல்லும் வழியில் அமைந்திருக்கிறது. இதனால் பலர் பக்கத்து தெருக்கள் வழியாக பிரதான சாலையை சென்றடைகின்றனர்.
இதே போன்று கோதாவரி தெரு முனையில் பள்ளிக்கு அருகில் டாஸ்மாக் கடை உள்ளது. எம்.ஜி.ஆர். சாலையில் தரமணி ரயில் நிலையத்துக்கும், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலகத்துக்கும் அருகில் 3 கடைகள் அமைந்துள்ளன.
இது ரயில் நிலையத்தைப் பயன்படுத்தும் நூற்றுக்கணக்கான பயணிகளுக்கும் மாணவர்களுக்கும் இடையூறாக உள்ளது.
மயிலாப்பூர் ரயில் நிலையம் அருகே, இரண்டு டாஸ்மாக் கடைகள் அருகருகே அமைந்திருக்கின்றன. லேடி சிவசாமி உயர்நிலைப் பள்ளி, வித்யா பால மந்திர், சாந்தோம் உயர்நிலைப் பள்ளி உள்ளிட்ட பல பள்ளி மாணவர்கள் அந்த கடைகளின் வழியாக செல்ல வேண்டியிருக்கிறது. அப்பகுதியில் வசிக்கும் சந்தியா கூறுகையில், “நாங்கள் அந்தப் பக்கம் சென்றால் மூக்கை மூடிக் கொண்டுதான் செல்வோம். அவ்வளவு அருவருப்பான இடமாக மாறியுள்ளது” என்றார்.
இது குறித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தென் சென்னை மாவட்டச் செயலாளர் தாமு கூறுகையில், “சென்னையில் 454 டாஸ்மாக் கடைகள் உள்ளன. ஆயிரம்விளக்கு, தாம்பரம் சானடோரியம், சிந்தாதிரிப்பேட்டை, திருவல்லிக்கேணி, திருமங்கலம் உள்ளிட்ட பல இடங்களில் பொது மக்களுக்கு தொந்தரவாக கடைகள் இருக்கின்றன.
இவற்றை அகற்றக் கோரி போராட்டம் நடத்தினால் போலீஸ் பாதுகாப்புடன் கடைகளை நடத்துகின்றனர்” என்றார்.
இதுகுறித்து டாஸ்மாக் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், “கோயில், தேவாலயம் அருகில் டாஸ்மாக் கடை இருக்கக் கூடாது என்றுதான் விதிகள் உள்ளன. பேருந்து, ரயில் நிலையத்துக்கு அருகில் இருக்கக் கூடாது என்று விதிகள் கூறவில்லை.
இதுபற்றி ஏதேனும் புகார் அளித்தால் நடவடிக்கை எடுப்போம்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT