Published : 13 Apr 2017 11:26 AM
Last Updated : 13 Apr 2017 11:26 AM
காஞ்சிபுரத்தில் சாக்பீஸில் நுண்ணிய வேலைப்பாடுகள் மூலம் சிற்பங்களை உருவாக்கும் கலையை அருங்காட்சியக ஊழியர் ஒருவர் செய்து வருகிறார். இவர் இப் பயிற்சியை மாணவர்களுக்கும் இலவசமாக அளித்து வருகிறார்.
வேலூர் மாவட்டம் மேல்வல்லம் பகுதியைச் சேர்ந்தவர் அசோகன்(44). இவர் காஞ்சிபுரம் அருங்காட்சியகத்தில் மாதிரி அமைப்புக் கலைஞராக உள்ளார். ஓவியம் பயின்றுள்ள இவர் அருங்காட்சியகத்தில் சில மாதிரி வரைபடங்களை வரையும் பணியை செய்து வந்தார்.
இவருக்கு சாக்பீஸைக் கொண்டு நுண்ணிய வேலைப்பாடுகள் மூலம் சிற்பங்களை உருவாக்கும் கலையில் ஆர்வம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சொந்த முயற்சி மூலம் பயிற்சி மேற்கொண்டும், தொடர் பயிற்சியின் மூலம் சாக்பீஸ் துண்டுகளைப் பயன்படுத்தி பல அரிய சிற்பங்களை உருவாக்கி வருகிறார்.
மாமல்லபுரம் கடற்கரைக் கோயில், சங்கிலி, சிப்பிக்குள் இருந்து முத்து வெளியே வருவது, புல்லாங்குழல், தபேலா, பழங்கால இசைக்கருவிகள், புத்தகம் சுமக்கும் குழந்தை, வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை செய்து கொள்ளும் உருவம் என பல்வேறு உருவங்களை சாக்பீஸ் துண்டுகளில் சிற்பங்களாக நுண்ணிய வேலைப்பாடுகளுடன் உருவாக்கியுள்ளார்.
இக்கலையை வளர்க்கும் நோக்குடன் மாணவர்களுக்கும் இலவச பயிற்சி அளித்து வருகிறார். இவர் திருநெல்வேலி, கோயம்புத்தூர், நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதி களில் பணி செய்யும்போது சுமார் 200-க்கும் மேற்பட்ட மாண வர்களுக்கு இக்கலையில் பயிற்சி அளித்துள்ளார். தற்போது காஞ்சி புரத்தில் மாணவர்களுக்கு இலவச பயிற்சியை அளித்து வருகிறார்.
மனதை ஒருங்கிணைக்கும்
இதுகுறித்து அசோகன் கூறியதாவது: சாக்பீஸ் மூலம் நுண்ணிய வேலைப்பாடுகளுடன் சிற்பங்கள் உருவாக்கும் பயிற் சியை காஞ்சிபுரத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு இலவசமாக அளித்து வருகிறேன். யார் கேட்டாலும் அவர்களுக்கு இலவசமாக அளிக்க தயாராக உள்ளேன். இந்தப் பயிற்சியை பெறுவதன் மூலம் இக்கலையை தெரிந்து கொள்வதுடன் அவர் களுக்கு மனம் ஒருங்கிணைப்புத் திறன் வளரும். இப்பணியை செய்யும்போது சிறிது கவனம் சிதறினாலும் சிற்பம் சிதைந்துவிடும். இப்பயிற்சியை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு, தானாகவே மனதை ஒருங்கிணைக்கும் திறன் வந்துவிடும் என்று கூறினார்.
இவர் உருவாக்கிய சாக்பீஸ் சிற்பங்கள் காஞ்சிபுரம் தமிழ்நாடு ஹோட்டல் அருகே புதிதாக இடமாற்றம் செய்யப்பட்ட காஞ்சிபுரம் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அருங்காட்சியகத்தைப் பார்வை யிட்ட பொதுமக்கள் பலர் இந்த சாக்பீஸ் சிற்பங்களையும் பார்த்து ரசித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT