Published : 31 Mar 2015 03:35 PM
Last Updated : 31 Mar 2015 03:35 PM

தேமுதிக எம்எல்ஏக்கள் 6 பேர் அடுத்த கூட்டத் தொடரிலும் நீக்கம்: மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சியினர் கண்டனம்

சட்டப்பேரவையில் நடந்த அமளி தொடர்பாக, உரிமைக்குழு பரிந்து ரையின்பேரில் தேமுதிக எம்எல்ஏக்கள் 6 பேர், அடுத்த கூட்டத்தொடரில் 10 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்படுவதாக பேரவைத் தலைவர் ப.தனபால் அறிவித்தார். இதைக் கண்டித்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தன.

கடந்த பிப்ரவரி 19-ம் தேதி சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் மோகன்ராஜ் பேசும்போது, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை விமர்சித்து ஒரு கருத்தை தெரிவித்தார். அதற்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட அமைச்சர்களும், ஆளுங்கட்சி உறுப்பினர்களும் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். பதிலுக்கு தேமுதிக உறுப்பினர்களும் கூச்சலிட்டனர். இதனால், பேரவையில் கடும் அமளி ஏற்பட்டது.

இதையடுத்து, தேமுதிக உறுப்பி னர்களை நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்ததுடன், இப்பிரச்சினையை உரிமைக் குழுவுக்கு அனுப்பவும் பேரவைத் தலைவர் உத்தரவிட்டார். பேரவைத் தலைவரை முற்றுகையிட்டு அமளியில் ஈடுபட்ட தேமுதிக உறுப்பினர்கள் அழகாபுரம் ஆர்.மோகன்ராஜ், வி.சி.சந்திரகுமார், கே.தினகரன், சி.எச்.சேகர், எஸ்.ஆர்.பார்த்திபன், எல்.வெங்கடேசன் ஆகிய 6 பேருக்கும் விளக்கம் கேட்டு உரிமைக்குழு நோட்டீஸ் அனுப்பியது. அவர்கள் எழுத்துப்பூர்வமாக பேரவைச் செயலர் ஏ.எம்.பி.ஜமாலுதீனிடம் விளக்கம் அளித்தனர்.

இந்நிலையில், சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், சஸ்பெண்ட் செய்யப்பட்ட 6 தேமுதிக எம்எல்ஏக்கள் தொடர்பான உரிமைக்குழுவின் அறிக்கையை குழுவின் தலைவரும் பேரவை துணைத்தலைவருமான பொள்ளாச்சி ஜெயராமன் தாக்கல் செய்தார். அந்த அறிக்கையை உடனடியாக ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளக்கோரி அவை முன்னவரான மின் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் ஒரு தீர்மானத்தை கொண்டுவந்தார். அத்தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.

அதன்பிறகு பேரவைத்தலைவர் ப.தனபால் அவையில் ஓர் அறிவிப்பை வெளியிட்டு பேசியதாவது:

பேரவை முன்னவர் கொண்டுவந்து அவையிலே நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, அவை உரிமை மீறல் குற்றத்துக்கு ஆளான தேமுதிக வைச் சேர்ந்த வி.சி.சந்திரகுமார், அழகாபுரம் ஆர்.மோகன்ராஜ். எஸ்.ஆர்.பார்த்திபன், எல்.வெங்கடேசன், சி.எச்.சேகர், க.தினகரன் ஆகிய 6 உறுப்பினர்களும் அடுத்த கூட்டத் தொடர் தொடங்கி 10 நாட்களுக்கு அவை நடவடிக்கைகளில் இருந்து நீக்கப்படுகின்றனர். இக்காலத்தில் சட்டப்பேரவை உறுப்பினர் என்ற முறையில் அவர்களுக்கு வழங்கப் பட்டு வரும் ஊதியம் மற்றும் எந்தவித மான பிற ஆதாயங்களையும், சலுகை களையும் பெற இயலாது.

இவ்வாறு பேரவைத் தலைவர் தனபால் கூறினார்.

தேமுதிக உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையை குறைக்குமாறு திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், காங்கிரஸ், மனிதநேய மக்கள் கட்சி, அகில இந்திய பார்வர்டு பிளாக் ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் பேரவைத் தலைவருக்கு வேண்டுகோள் விடுத்தனர். உரிமைக்குழு பரிந்துரை யின் பேரிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக பேரவைத் தலைவர் விளக்கம் அளித்தார்.

அப்போது அவை முன்னவர் நத்தம் விஸ்வநாதன் குறுக்கிட்டு, “அவர்கள் தவறு செய்திருக்கிறார்கள். அதற்குரிய தண்டனையை பெற்றிருக்கிறார்கள். மற்ற உறுப்பினர்கள் ஜனநாயக கடமையை ஆற்றும் வகையிலும், பேரவையின் மாண்புகளை காப்பாற்றவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

தங்கள் வேண்டுகோள் ஏற்கப்படாத தால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் திமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், காங்கிரஸ், மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

தேமுதிக எம்எல்ஏக்களை சஸ்பெண்ட் செய்தது ஜனநாயகத்தை படுகுழியில் தள்ளும் நடவடிக்கை: மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சியினர் கண்டனம்

தேமுதிக எம்எல்ஏக்களை அடுத்த கூட்டத் தொடரிலும் சஸ்பெண்ட் செய்திருப்பது, ஜனநாயகத்தை படுகுழியில் தள்ளும் நடவடிக்கை என்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தேமுதிகவைச் சேர்ந்த 6 எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையின் அடுத்த கூட்டத்தொடரிலும் 10 நாட்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை நேற்று சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தன.

பேரவைக்கு வெளியே நிருபர்களிடம் அந்தக் கட்சிகளின் தலைவர்கள் கூறியதாவது:

மு.க.ஸ்டாலின் (திமுக):

தேமுதிகவின் குறிப்பிட்ட 6 உறுப்பினர்கள் அடுத்தக் கூட்டத்தொடரிலும் பங்கேற்கக் கூடாது என்றும் எம்எல்ஏக்களுக்கான சலுகைகளை பெற முடியாது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஜனநாயகத்தை படுகுழியில் தள்ளும் இந்த நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறோம்.

பிரின்ஸ் (காங்கிரஸ்):

கேரளத்தில் பேரவைத் தலைவர் மீதே ஒரு உறுப்பினர் நாற்காலியை தூக்கி வீசினார். அங்குகூட இதுபோன்ற கடுமையான தண்டனை வழங்கப்படவில்லை. தேமுதிக எம்எல்ஏக்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்திருப்பது கண்டிக்கத்தக்கது.

அ.சவுந்தரராஜன் (மார்க் சிஸ்ட்):

தேமுதிக உறுப்பினர் களை மக்கள்தான் தேர்ந்தெடுத் துள்ளனர். ஒருவர் அவையில் இருக்கலாமா, வேண்டாமா என்பது குறித்து இந்த அவை முடிவு எடுக்கலாமே தவிர, எம்எல்ஏவாக இருக்கலாமா, கூடாதா என்பதை முடிவெடுக்க இந்த அவைக்கு உரிமை இருக்கிறதா?

ஆறுமுகம் (இந்திய கம்யூனிஸ்ட்):

தேமுதிக எம்எல்ஏக்களின் மீதான நடவடிக்கை அதீதமானது. சட்டப்பேரவை உறுப்பினர்களின் செயல்பாடுகளை முடக்கும் அளவுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற நிலையை பின்பற்றக்கூடாது.

என்.ஆர்.ரெங்கராஜன் (காங்கிரஸ் - தமாகா ஆதரவு):

பிரதான எதிர்க்கட்சியான தேமுதிகவின் 6 எம்எல்ஏக்களை இடைநீக்கம் செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. அவர்களை பேரவைக்குள் அனுமதிக்க வேண்டும்.

ஜவாஹிருல்லா (மமக):

கேரளத்திலும், காஷ்மீரிலும் சட்டப்பேரவைக்குள் இதுமாதிரியான பிரச்சினைகள் நடந்துள்ளன. அங்கெல்லாம் வழங்கப்படாத கடுமையான தண்டனை இங்கு வழங்கப்பட்டுள்ளது. இது கண்டிக்கத்தக்கது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x