Published : 04 Jan 2014 12:00 AM
Last Updated : 04 Jan 2014 12:00 AM
கடற்கரை - தாம்பரம் இடையேயான மின்சார ரயில் சேவையை செங்கல்பட்டு வரை நீட்டிக்க வேண்டும் என்று புறநகர் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை புறநகர்ப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் நகருக்குள் எளிதில் வந்து செல்ல வசதியாக கடற்கரை - தாம்பரம், கடற்கரை - செங்கல்பட்டு, சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி, சென்ட்ரல் - திருத்தணி ஆகிய மார்க்கங்களில் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. வடசென்னையுடன் ஒப்பிடும்போது தென்சென்னை மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இந்நிலையில் தென்சென்னை புறநகர்ப் பகுதிகளில் பயணிகளின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
கடற்கரை - தாம்பரம் இடையே 5 நிமிடங்கள், 10 நிமிடங்களுக்கு ஒரு ரயில் என்ற வீதத்தில் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால், கடற்கரை - செங்கல்பட்டு இடையே உடனுக்
குடன் ரயில் சேவை கிடையாது. ‘பீக் அவர்ஸ்’ எனப்படும் காலை, மாலை நெரிசலான நேரங்களில் 15 நிமிடங்கள், 20 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்படுகிறது. மற்ற நேரங்களில் 45 நிமிடம் அல்லது ஒரு மணி நேரத்துக்கு ஒரு ரயில்தான் செல்கிறது.
மாதாந்திர பாஸ்
செங்கல்பட்டு, பரனூர், சிங்கப்பெருமாள்கோவில், மறைமலைநகர், காட்டாங்குளத்தூர், பொத்தேரி, கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், வண்டலூர், பெருங்களத்தூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள், வியாபாரிகள் நகருக்குள் வந்து செல்வதற்கு செங்கல்பட்டு மின்சார ரயில்களைத்தான் பெரிதும் நம்பியுள்ளனர்.
குறைந்த கட்டணம், நெரிசலில் சிக்காமல் விரைவாக செல்லும் வசதி போன்ற காரணங்களால் பெரும்பாலானோர் பஸ் பயணத்தை விட ரயில் பயணத்தைத்தான் அதிகம் விரும்புகின்றனர். இவர்களில் சுமார் 90 சதவீதம் பேர் மாதாந்திர பாஸ் பெற்று பயணம் செய்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
படிக்கட்டில் ஆபத்தான பயணம்
அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் மின்சார ரயில்கள் இயக்கப்படாததால் செங்கல்பட்டு ரயில்களில் எப்போது பார்த்தாலும் கூட்டம் நிரம்பி வழிகிறது. காலை, மாலை நேரங்களில் சொல்லவே வேண்டாம். பெண்கள் மற்றும்
வயதானவர்கள்கூட, படிக்கட்டுகளில் ஆபத்தான நிலையில் பயணம் செய்வதை காணமுடிகிறது. 12 பெட்டி ரயிலாக இல்லாமல் 9 பெட்டி ரயிலாக இருந்தால் நிலைமை இன்னும் மோசம்.
தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் போன்ற பண்டிகைக் காலங்களில் கோழிக்குஞ்சுகளை பெட்டியில் அடைத்து வைத்திருப்பதைப்போல ரயில் பெட்டிகளில் பயணிகள் அடைபட்டு பரிதாபமாக பயணம் செய்கின்றனர்.
நெரிசலில் சிக்கிக்கொள்ளும் பெண்கள், வயதானவர்கள், குழந்தைகள் படும்பாடு மிகவும் பரிதாபமானது.
நடவடிக்கை இல்லை
கடற்கரை - செங்கல்பட்டு இடையே கூடுதல் மின்சார ரயில்களை இயக்க வேண்டும் அல்லது கடற்கரை - தாம்பரம் ரயில் சேவையை செங்கல்பட்டு வரை நீட்டிக்க வேண்டும் என்று புறநகர் ரயில் பயணிகள் சங்கம் சார்பில் தெற்கு ரயில்வே பொதுமேலாளர், கோட்ட மேலாளர் ஆகியோருக்கு ஏராளமான மனுக்கள் அளித்ததுதான் மிச்சம். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று புறநகர் ரயில் பயணிகள் வேதனையுடன் கூறுகின்றனர்.
வேண்டுகோள்
நெரிசலைத் தவிர்க்கவும், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு கருதியும் கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில் சேவையை அதிகரிக்க வேண்டும் அல்லது கடற்கரை - தாம்பரம் சேவையை செங்கல்பட்டு வரை நீட்டிக்க வேண்டும் என்று புறநகர் பயணிகள் மீண்டும் மீண்டும் கோரிக்கை விடுக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT