Published : 23 Mar 2014 11:33 AM
Last Updated : 23 Mar 2014 11:33 AM

எஞ்சிய 9 தொகுதிகளில் போட்டியிட காங்கிரஸில் கடும் போட்டி: சிதம்பரம் தொகுதி வேட்பாளரை மாற்ற வாய்ப்பு

காங்கிரஸ் கட்சியில் கன்னியாகுமரி உள்ளிட்ட தொகுதிகளுக்கு கடுமையான போட்டி இருப்பதாலேயே இரண்டாவது பட்டியல் வெளிவருவது தாமதமாகிறது.

வியாழக்கிழமை இரவு காங்கிரஸ் வெளியிட்ட 30 பேர் கொண்ட தமிழகத்துக்கான முதல் பட்டியலில் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இன்னும் வரவேண்டிய ஒன்பது தொகுதிகளுக்கான பட்டியலில் ராகுல் விசுவா சிகள் இருவர் இருப்ப தாகச் சொல்லப்படுகிறது. பொள்ளாச்சி தொகுதி மயூரா ஜெயக்குமாருக்கும் மகிளா காங்கிரஸ் அகில இந்தியச் செயலாளரான ஜோதிமணிக்கு கரூர் தொகுதியும், திருவள்ளூர் கிறிஸ்டோபருக்கும் (ராகுலுக்கு நெருக்கமானவர்) ஒதுக்கப்படலாம் எனத் தெரிகிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட வசந்தகுமார், எம்.எல்.ஏ-க்கள் பிரின்ஸ், விஜயதாரணி, மாவட்டத் தலைவர் ராபர்ட் ப்ரூஸ், சிதம்பரம் ஆதரவாளரான தயாபரன் ஆகியோரிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இதனிடையே, நாமக்கல்லில் இருந்து தென்காசிக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள ஜெயக்குமார், சிதம்பரத்தில் நிறுத்தப்பட்டுள்ள வள்ளல் பெருமான், ஈரோட்டில் நிறுத்தப்பட்டுள்ள கோபி ஆகியோருக்கு எதிராக போர்க்கொடி தூக்கப்பட் டுள்ளது.

தென்காசியில் போட்டியிட முன்னாள் மத்திய அமைச்சர் அருணாச்சலத்தின் மகன் மனு கொடுத்திருந்தும் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அதேபோல் மாநில தலைமையிலிருந்து சிதம்பரம் தொகுதிக்கு மணிரத்தினம் பெயர் சிபாரிசு செய்து அனுப்பப்பட்டதாம். ஆனால் டெல்லியில் அவரது பெயர் எப்படி மாயமானது எனத் தெரியவில்லை என்கிறார் ஞானதேசிகன்.

மணிரத்தினத்துக்கு பதிலாக நிறுத்தப்பட்டுள்ள வள்ளல்பெருமான் ப.சிதம்பரம் விசுவாசி என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், சிதம்பரத்தில் மணிரத் தினத்துக்கும் விழுப்புரம் வள்ளல்பெருமானுக்கும் மாற்றி ஒதுக்கப்படலாம் எனத் தெரிகிறது. ஈரோடு தொகுதியில் தங்கபாலு தனது ஆதரவாளரான திருப்பூர் மாவட்ட முன்னாள் தலைவர் கோபிக்கு பெற்றுத் தந்திருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x