Published : 04 Jan 2017 08:43 AM
Last Updated : 04 Jan 2017 08:43 AM
அதிமுகவின் செய்தித் தொடர்பாளர் களில் ஒருவரும் தலைமைக் கழக பேச்சாளருமான நாஞ்சில் சம்பத் மதிமுகவில் இருந்து விலகி அதிமுகவில் சேர்ந்தபோது, அவ ருக்கு பதவி அளிக்கப்பட்டதுடன், கட்சி சார்பில் ‘டிஎன் 06 ஹெச் 9007’ என்ற எண் கொண்ட இன்னோவா கார் கொடுக்கப்பட்டிருந்தது. நேற்று காலை அந்த காரை, அதிமுக அலு வலக வளாகத்தில் ஒப்படைத்து விட்டார். இந்நிலையில், ‘தி இந்து’வுக்கு நாஞ்சில் சம்பத் அளித்த சிறப்புப் பேட்டி:
ஜெயலலிதா வழங்கிய ‘இன்னோவா’ காரை திடீரென அதிமுக தலைமையகத்தில் ஒப்படைத்தது ஏன்?
கட்சிக்கு பிரச்சாரம் செய்வதற் காக ‘இன்னோவோ’ காரை ஜெயலலிதா தந்தார். 8 மாதங்களாக எந்த பிரச்சாரக் கூட்டமும் இல்லை. இனியும் நடக்கும் என்ற நம்பிக்கையும் இல்லை. அதனால் கொடுத்தனுப்பிட்டேன்.
காரை திருப்பி ஒப்படைத்தபோது அதிமுக தரப்பில் உங்களிடம் ஏதாவது கேட்டார்களா?
நண்பர் மூலமாக கொடுத்தனுப்பி னேன். தலைமைக் கழக மேலாளர் மகாலிங்கம் வந்தால் ஒப்படைத்து விடுங்கள் என்று சொல்லி அங்கி ருந்தவர்களிடம் காரை ஒப்படைத்து விட்டு வந்துவிட்டார் நண்பர்.
8 மாதங்களாக உங்களை கூட்டங்களுக்கு அழைக்காமல் ஒதுக்கி வைத்துவிட்டார்கள் என்ற ஆதங்கத்தில் இந்த முடிவா?
கூட்டத்துக்கு அழைக்க வேண் டும் என்ற ஆசையோ அழைக்க வில்லையே என்ற ஆதங்கமோ எனக்குக் கிடையாது.
அதிமுகவில் இருந்து நீங்கள் ஒதுங்கக் காரணம் என்ன?
மாதம் 10 கூட்டம் பேசுவது, இதன் மூலம் கிடைக்கும் காசுதான் எனது ரெவின்யூ. இப்போது வருமானத்துக்கு வழியில்லை. உற்சாகமாக பணியாற்றுவதற்கான களமும் தளமும் அதிமுகவில் இல்லை. அதனால் அமைதியாக இருந்தேன்.
சசிகலா தலைமைப் பொறுப்புக்கு வந்ததால் ஒதுங்க நினைப்பதுபோல் தெரிகிறதே?
இதுவரை நான் சசிகலாவை பார்த்ததுமில்லை, பேசியதுமில்லை, பழகியதுமில்லை. அப்படி இருக்க தலைமை மீது அதிருப்தி எங்கிருந்து வந்தது? பொதுவாவே எனக்கு இந்த பவர் செக்டாரே பிடிக்காது. ஒரு பிரச்சாரகனாக, இலக்கியவாதியாக எனது அடையாளத்தைத் தக்க வைத்துக்கொள்ள அதிமுகவில் இனி வாய்ப்பு இருக்காது எனத் தெரிந்தது; அவ்வளவுதான்.
உங்கள் அடுத்தகட்ட முடிவு?
எந்த முடிவு எடுத்தாலும் பொங்கலை ஒட்டித்தான் இருக்கும்.
திமுகவில் இணைவதாக தகவல்கள் வருகின்றனவே?
நான் எந்தக் கதவையும் தட்டவில்லை. திமுகவில் இணைவது குறித்து எனது நண்பர்கள் சிலர் என்னிடம் பேசினார்கள். சிறிது காலம் அமைதியாக இருக்க விரும்புகிறேன்.
ஜெயலலிதா இடத்தில் சசிகலா - இந்தத் தேர்வு சரியானது என கருதுகிறீர்களா?
அது சசிகலாவின் எதிர்கால செயல்பாட்டை பார்த்துத்தான் சொல்லமுடியும்.
சசிகலா பொதுச் செயலாளராக வந்ததில் உங்களுக்கு அதிருப்தி என்கிறார்களே?
அப்படியெல்லாம் சொல்ல முடியாது. கட்சியில் நான் ஒரு கருவி மட்டுமே. இந்தக் கருவிக்கு இப்போது அங்கு வேலை இல்லை.
இனி அதிமுகவின் எதிர்காலம் எப்படி இருக்கும்?
அது தலைமை தாங்கக் கூடியவரின் வல்லமையையும் வள்ளல் தன்மையையும் பொறுத்தது. இதெல்லாம் சசிகலாவுக்கு இருக்கிறதா இல்லையா என்பது போகப்போக தெரியும்.
அதிமுகவின் அடிமட்டத்தில் தீபாவுக்கு ஆதரவாகவும் சசிகலாவுக்கு எதிராகவும் குரல்கள் கேட்கின்றனவே?
அடிமட்டத்தில் தீபாவுக்கு அனுதாபம் இருப்பதை நானும் உணர்கிறேன். ஆனால், அந்த அனுதாபம் எப்படி தலைமை ஆக முடியும்? அடிமட்டத் தொண்டன் எதுவும் தெரியாத அப்பாவி. அவனுக்கு ஏற்பட்டிருக்கும் அவநம்பிக்கையை போக்க வேண்டியது தற்போதைய தலைமையின் பொறுப்பு.
ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக சொல்லப்படுவதை நீங்கள் ஆமோதிக்கிறீர்களா?
மர்மம் இருப்பது உண்மை. அதை விலக்க வேண்டியது அரசின் கடமை.
ஜெயலலிதா மரணம், தமிழகத்தில் ஆட்சித் தலைமை மாற்றம் இவ்விரண்டு விஷயத்திலும் மத்திய அரசின் நிலைப்பாட்டை எப்படி பார்க்கின்றீர்கள்?
மத்தியில் இருப்பவர்கள் நிச்சயம் ஆதாயம் தேடப் பார்ப்பார்கள். அதற்கு இடம் தராத வகையில் இயக்கத்தையும் மாநிலத்தையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அதிமுகவினருக்கு இருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT