Published : 18 Jul 2016 10:34 AM
Last Updated : 18 Jul 2016 10:34 AM
பண்டிகை, விடுமுறை நாட்களில் சிறப்பு ரயில்கள் என்ற பெயரில், 'சுவிதா' போன்ற கூடுதல் கட்டண ரயில்கள் தற்போது அதிக அள வில் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் பல மடங்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதால், சாதாரண மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
பண்டிகை நாட்களில் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு முன்பெல்லாம் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். இந்த ரயில்களில் வழக்கமான கட்டணம்தான் வசூலிக்கப்படும். ஆனால், கடந்த ஓராண்டாக சுவிதா சிறப்பு ரயில்கள் அதிகம் இயக்கப் படுகின்றன. சுவிதா சிறப்பு ரயிலில் பயணிகளின் தேவையை அடிப்படையாகக் கொண்டு, கட்டணம் பல மடங்கு உயர்த் தப்பட்டு வசூலிக்கப்படுகிறது.
4 மடங்கு அதிக கட்டணம்
உதாரணமாக, சென்னை எழும்பூர் மதுரைக்கு கணக்கிட்டால் 2 ஏ.சி.க்கு ரூ.1,560 முதல் ரூ.4,470 வரையும், 3 ஏ.சி.க்கு ரூ.1,120 முதல் ரூ.3,185 வரையும், படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில் ரூ.415 முதல் ரூ.1,135 வரையும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதுவே, வழக்கமான விரைவு ரயில்களில் 2 ஏ.சி. கட்டணம் ரூ.1,140, 3 ஏ.சி. ரூ.810, படுக்கை வசதி பெட்டிகளுக்கு ரூ.315 மட்டுமே வசூலிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. அதாவது, சராசரியாக 4 மடங்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
கடந்த மே மாதம் முதல் வரும் ஆகஸ்ட் மாதம் வரை தெற்கு ரயில்வே சார்பில் மொத்தம் 95 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் சுவிதா சிறப்பு ரயில்கள் 53. மற்ற 42-ம் சிறப்பு கட்டண சிறப்பு ரயில்கள். தற்போதைய நிலவரப்படி, இவற்றில் 72 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுவிட்டன.
காலியாக செல்லும் அவலம்
தொடர் விடுமுறை, பண்டிகை நாட்களில் மட்டுமே சுவிதா சிறப்பு ரயில்களில் கூட்டம் அதிகம் இருக்கும். வழக்கமான சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் சுவிதா சிறப்பு ரயில்களில் சுமார் 25 சதவீத இடங்கள் காலியாகவே உள்ளன. தீபாவளி பண்டிகைக்கான முன்பதிவு முடிந் துள்ள நிலையில், வழக்கமாக இயக்கப்படும் விரைவு ரயில்களில் டிக்கெட்கள் விற்று தீர்ந்துவிட்டன. எனவே, தீபாவளியையொட்டி அதிக அளவில் சுவிதா சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது.
அறிவிப்பு எப்போது?
தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு முடிந்துள்ளது. பெரும்பாலான விரைவு ரயில்களில் காத்திருப்போர் பட்டியல் சராசரியாக 200-ஐ தாண்டியுள்ளது. இந்த காத்திருப்பு பட்டியல்களில் அதிகமாக உள்ள வழித்தடங்களை தேர்வு செய்து, புதிய ரயில்கள் இயக்கம், கூடுதல் பெட்டிகள் சேர்ப்பு போன்றவை குறித்து திட்டமிட்டு அறிவிப்போம்.
கடந்த ஆண்டுபோல, இந்த ஆண்டும் எழும்பூரில் இருந்து மொத்தம் 12 சிறப்பு ரயில்கள் இயக்கப்படலாம். அதைவிட கூடுதலாக இயக்கப்படவும் வாய்ப்பு உள்ளது. சுவிதா மற்றும் சிறப்பு கட்டண ரயில்கள் இயக்குவது தொடர்பாக நாங்கள் முடிவு செய்வதில்லை, ரயில்வே வாரியம் அறிவிப்பதையே செயல்படுத்துகிறோம். ஆனால், கடந்த சில மாதங்களில் சுவிதா சிறப்பு ரயில்களில் அதிக அளவில் மக்கள் பயணம் செய்துள்ளனர்.இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
பல லட்சம் பேர் பாதிப்பு
தமிழ்நாடு முற்போக்கு நுகர் வோர் மையத் தலைவர் டி.சடகோ பன் கூறும்போது, ''ரயில்வே துறையில் லாபநோக்குடன் பல புதிய திட்டங்களை கொண்டு வருகின்றனர். அதன் அடிப்படை யில்தான் சுவிதா சிறப்பு ரயில்கள் அதிகம் இயக்கப்படுகின்றன. சாதாரண மக்கள் இவ்வளவு அதிக கட்டணம் செலுத்தி இந்த ரயிலில் பயணிக்க இயலாது. ரயில் சேவை, ரயில் நிலையங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத் தாமல் சுவிதா போன்ற சிறப்பு ரயில்களில் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி வசூலிப்பது நியாயமா? சுவிதா சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதால், ஏற்கெனவே வழக்கமான கட்டணத்தில் இயக்கப்பட்டுவந்த சிறப்பு ரயில்களை இயக்குவதே இல்லை. இதனால், ரயில் பய ணத்தை நம்பியுள்ள பல லட்சம் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT