Published : 17 Jan 2014 12:00 AM
Last Updated : 17 Jan 2014 12:00 AM
சென்னையில் வரும் காலத்தில் குறிப்பாக கோடை காலத்தில் தட்டுப்பாடின்றி குடிநீர் விநியோகிப்பதற்காக மேட்டூர், ஈரோட்டில் இருந்து ரயிலில் குடிநீர் கொண்டு வருவது பற்றி சென்னை குடிநீர் வாரியம் தெற்கு ரயில்வேயுடன் ஆலோசனை நடத்தி வருகிறது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் தற்போது நீர் இருப்பு மிகவும் குறைவாக உள்ளது. பூண்டி ஏரியில் 104 மில்லியன் கன அடியும், சோழவரம் ஏரியில் 118 மில்லியன் கனஅடியும், புழல் ஏரியில் 2,085 மில்லியன் கனஅடியும், செம்பரம்பாக்கத்தில் 800 மில்லியன் கன அடியும் நீர் இருப்பு உள்ளது. இந்த 4 ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11,057 மில்லியன் கன அடி ஆகும். கடந்த 16-ம் தேதி நிலவரப்படி 3,107 மில்லியன் கனஅடி மட்டுமே நீர் இருப்பு உள்ளது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் மற்றொரு ஏரியான வீராணத்தின் மொத்த கொள்ளளவு 1,456 மில்லியன் கனஅடி. இப்போது 629 மில்லியன் கனஅடி நீர்தான் இருப்பு இருக்கிறது. வீராணம் ஏரியில் மட்டும் வினாடிக்கு 300 கனஅடி நீர்வரத்து உள்ளது.
பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 93 கனஅடி கிருஷ்ணா நீரும், புழல் ஏரிக்கு வினாடிக்கு 55 கனஅடி தண்ணீரும் வருகிறது. சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு நீர்வரத்து அறவே இல்லை.
ஏரிகளில் நீர் இருப்பு குறைவால், சென்னைக்கு நாள்தோறும் 83 கோடி லிட்டர் குடிநீர் சப்ளை செய்வதற்குப் பதிலாக, 57 கோடி லிட்டர் மட்டுமே சப்ளை செய்யப்படுகிறது.
தென்மேற்கு பருவமழையின் போது சென்னையில் 750 மில்லி மீட்டர் மழை பெய்யும். கடந்த ஆண்டு 616 மில்லி மீட்டர் மழை பெய்தது. ஆனால், வடகிழக்குப் பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை. சென்னையில் பெய்ய வேண்டிய 750 மில்லி மீட்டருக்குப் பதிலாக, 437 மில்லிமீட்டர் மட்டுமே மழை பதிவாகியுள்ளது.
கடந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை பொய்த்துவிட்டதால், நிலத்தடி நீர் மட்டமும் வெகுவாகக் குறைந்துவிட்டது. இதனால், சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
இதுகுறித்து சென்னை குடிநீர் வாரிய உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்இருப்பு குறைவாக உள்ளது. அதனால், மொத்த குடிநீர் தேவையில் 60 சதவீதத்தை வீராணம் ஏரியும், நெம்மேலி, மீஞ்சூர் ஆகிய இடங்களில் உள்ள கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையங்களும்தான் பூர்த்தி செய்கின்றன.
சென்னையில் 2001-ம் ஆண்டு கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. அப்போது சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் வெறுமனே 1,423 மில்லியன் கனஅடி மட்டுமே நீர்இருப்பு இருந்தது. நிலத்தடி நீர்மட்டம் 22 மீட்டருக்கும் கீழே போய்விட்டது. கண்டலேறு அணையில் நீர் இருப்பு மிகவும் குறைவாக இருந்தது.
புதிய வீராணம் திட்டம் நிறைவுபெறவில்லை. கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையங்களும் இல்லை. அதனால் அப்போது மேட்டூர், ஈரோட்டில் இருந்து ரயில் மூலம் சென்னைக்கு குடிநீர் கொண்டு வரப்பட்டது. தற்போது நிலைமை அந்த அளவுக்கு மோசமாக இல்லை.
இருந்தபோதிலும், வரும் மாதங்களில் குறிப்பாக கோடை காலங்களில் சென்னை குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக இப்போதே திட்டமிடுகிறோம். சென்னை அருகே உள்ள கும்மிடிப்பூண்டி, ஆத்தூர், மாமண்டூர், தாமரைப்பாக்கம், மீஞ்சூர், பஞ்சட்டி, நெய்வேலி ஆகிய இடங்களில் இருந்து ஆழ்குழாய் கிணற்று நீரை லாரிகள் மூலம் சென்னை கொண்டு வரவும், விவசாயக் கிணறுகளை வாடகைக்கு எடுத்து தண்ணீர் எடுத்து வரவும், தேவைப்பட்டால் ஈரோடு, மேட்டூரில் இருந்து ரயில்கள் மூலம் தண்ணீர் எடுத்து வரவும் திட்டமிட்டுள்ளோம்.
இதுதொடர்பாக தெற்கு ரயில்வே அதிகாரிகளுடன் சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து சென்னைக்கு கூடுதலாக கிருஷ்ணா நீர் திறந்துவிடவும் கோரிக்கை விடுத்துள்ளோம் என்றார் அவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT