Published : 30 Dec 2013 07:56 PM
Last Updated : 30 Dec 2013 07:56 PM

மதுரை: ஆம்புலன்ஸுக்கு வழிவிடுவதில் தேனி முதலிடம்

ஆம்புலன்ஸ் வாகனங்கள் வரும்போது, தங்கள் வாகனத்தை நிறுத்தி வழிவிடுவதில் தேனி மாவட்ட மக்களே முதலிடத்தில் இருக்கின்றனர். 108 ஆம்புலன்ஸை அதிகம் பயன்படுத்துகிற மதுரை மாவட்டத்திலோ, அதற்கு வழிவிடும் விஷயத்தில் இன்னமும் விழிப்புணர்வு தேவைப்படுகிறது.

சிறப்பு ஆம்புலன்ஸ்

மதுரை மாவட்டத்தில் கடந்த 4.11.2008-ம் தேதி முதன்முறையாக 108 ஆம்புலன்ஸ் சேவைத் திட்டம் தொடங்கப்பட்டது. தற்போது மாவட்டத்தில் பச்சிளம் குழந்தைகளுக்கான சிறப்பு ஆம்புலன்ஸ் உள்பட 19 ஆம்புலன்ஸ்கள் பயன்பாட்டில் உள்ளன. கடந்த நவ. 30-ம் தேதி வரை இந்த ஆம்புலன்ஸ்களை 1,01,901 பேர் பயன்படுத்தி உள்ளனர்.

மதுரையைத் தொடர்ந்து, 29.12.2008-ம் தேதி விருதுநகரில் இந்த சேவை தொடங்கப்பட்டது. தற்போது இத்திட்டத்தின் கீழ் அங்கு 14 ஆம்புலன்ஸ்கள் இயக்கப்படுகின்றன. இதன் மூலம் இதுவரையில் 64,359 பேர் பயன் பெற்றுள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தைப் பொருத்தவரையில், 3.3.2009-ம் தேதி இந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது. அங்கு மொத்தம் 16 ஆம்புலன்ஸ்கள் உள்ளன. இதனை இதுவரையில் 61,574 பேர் பயன்படுத்தி உள்ளனர்.

மக்கள் தொகை குறைவு

தேனி மாவட்டத்தில் 1.3.1009 அன்று தொடங்கிய இந்தச் சேவையை இதுவரையில் 51,026 பேர் பயன்படுத்தி உள்ளனர். அந்த மாவட்டத்தில் மக்கள் தொகை குறைவு என்பதால், 10 ஆம்புலன்ஸ்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. இந்த 4 மாவட்டங்களையும் சேர்த்து மொத்தம் 2,79,046 பேர் 108 ஆம்புலன்ஸ் சேவையைப் பயன்படுத்தி உள்ளனர். இதில் விபத்துகளுக்காக 79,902 பேரும், பிரசவத்துக்காக 82,504 பேரும் பயன்படுத்தி உள்ளனர்.

இதற்கு அடுத்தபடியாக விஷக்கடி பாதிப்பு, அடிதடி, இதயக் கோளாறு, தீவிர வயிற்றுவலி போன்றவற்றுக்காக அதிகளவில் ஆம்புலன்ஸ் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இதுபற்றி 108 ஆம்புலன்ஸ் சேவையின் மதுரை மண்டல மேலாளர் தணிகைவேல் முருகன் கூறியது: இந்தத் திட்டம் குக்கிராமங்களையும் சென்றடைந்துள்ளது என்றாலும், ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கு உதவும் மனப்பான்மை இன்னமும் வளர வேண்டியது உள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்களை ஏற்றச் செல்லும் போது, ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கு உதவ வேண்டும். அவர்களுடன் தகராறு செய்வது உள்ளிட்ட செயல்களைச் செய்தால், அது அவர்களது பணியைப் பாதிக்கும்.

மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுபவர்களுடன், 2 பேர் மட்டுமே ஆம்புலன்ஸில் பயணிக்கலாம். அதிகமானோர் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்படும் போது, உறவினர்கள், நண்பர்கள் தனி வாகனத்தில் வருவதே நல்லது. ஆம்புலன்ஸ்களுக்கு வழி விடுவதில், தேனி மாவட்ட மக்கள் பெருந்தன்மையுடன் நடந்து கொள்கின்றனர். மதுரை, விருதுநகர் போன்ற மாவட்டங்களில் இன்னமும் ஆம்புலன்ஸுக்கு வழிவிடாத போக்கு தொடர்கிறது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x