Published : 18 Jan 2014 09:35 AM
Last Updated : 18 Jan 2014 09:35 AM
வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், சென்னை அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகா மில் மாநகர பஸ் ஒட்டுநர்கள், ஆட்டோ ஓட்டுநர்களில் பலருக்கு ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், பல்வேறு பார்வை குறைபாடு கள் இருப்பது தெரியவந்தது.
தமிழக அரசின் போக்குவரத்துத் துறை சார்பில் இந்த ஆண்டு ஜனவரி 11-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை சாலை பாதுகாப்பு வாரம் கடைபிடிக்கப்பட்டு, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப் பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கே.கே.நகர் வட்டார போக்குவரத்து அலுவலகம் (ஆர்.டி.ஓ.) சார்பில் கே.கே.நகர் பஸ் நிலையத்தில் இலவச மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடை பெற்றது. இதில் 6 பேர் கொண்ட மருத்துவக் குழு மருத்துவப் பரிசோதனை செய்தது.
இது தொடர்பாக கே.கே.நகர் வட்டார போக்குவரத்து அலுவலர் ஜி.அசோக்குமார் கூறியதாவது:
ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் சாலை பாதுகாப்பு வார விழாவில் கே.கே.நகர் ஆர்.டி.ஓ. சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கே.கே.நகர் பஸ் நிலை யத்தில் இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. இதில் மாநகர பஸ், ஆட்டோ டிரைவர்கள் மற்றும் பொதுமக்கள் என மொத்தம் 300 பேர் கலந்து கொண்டனர்.
சோதனையில் ஓட்டுநர்களில் 14 பேருக்கு பார்வை குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது. அதாவது, இரவில் நிறக்கோடு தெரிவதில்லை. கண்ணில் புரை ஏற்படுதல், கிட்டப் பார்வை, தூரப் பார்வை குறைபாடுகள் இருந்தது தெரியவந்தது. 23 பேருக்கு நீரிழிவு நோயும், 41 பேருக்கு ரத்த அழுத்த குறைபாடும் இருந்தது கண்டறியப்பட்டது. உரிய சிகிச்சை பெறும் வகையில் இவர்களுக்கு கூப்பன்கள் வழங்கப்பட்டன.
ஆலோசனைகள்
பின்னர் உடலில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துவது, ரத்த அளவை சீராக வைத்திருப்பது உள்ளிட்டவை குறித்த மருத்துவ ஆலோசனைகள் அவர்களுக்கு வழங்கப்பட்டன என்று கூறினார்.
இந்நிகழ்ச்சியில், போக்கு வரத்து இணை ஆணையர் ராதாகிருஷ்ணன், வாகன ஆய்வாளர்கள் வி.மாதவன், எம்.தரன், கே.செந்தூர்வேல், எம்.செழியன், கே.ஜெயலட்சுமி ஆகியோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT