Published : 01 Apr 2014 12:00 AM
Last Updated : 01 Apr 2014 12:00 AM
தமிழகத்தில் கூட்டணி அமைத்துப் போட்டியிடும் மதிமுக, மமக, விசிக உள்ளிட்ட கட்சிகளுக்கு அவர்கள் விரும்பிய சின்னங்கள் கிடைக்குமா என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக மதிமுகவுக்கு பதிவு செய்யப்பட்ட பம்பரம் சின்னம் பட்டியலிலேயே இல்லாததால், அக்கட்சியினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
நாடாளுமன்றத் தேர்தலில் திமுக மற்றும் பாஜக கூட்டணிகளில் உள்ள கட்சிகள், தனி சின்னத்தில் போட்டியிட முடிவு செய்துள்ளன. மதிமுக-வும் தனது பம்பரம் சின்னத்திலேயே போட்டியிட முடிவு செய்துள்ளது.
ஆனால், கடந்த சட்டமன்றத் தேர்தலை மதிமுக புறக்கணித்ததாலும் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் குறைந்த வாக்கு சதவீதமே பெற்றிருந்ததாலும், மதிமுக-வுக்கு பம்பரம் சின்னமும் கட்சியின் அங்கீகாரமும் பறிபோனது. இதனால் மதிமுக தற்போது, பதிவு செய்யப்பட்ட அங்கீகாரம் இல்லாத கட்சியாகவே தேர்தல் ஆணையத்தால் பட்டியலிடப்பட்டுள்ளது.
பம்பரம் சின்னத்தை சுயேச்சை பட்டியலில் வைத்திருந்தால் மட்டுமே, அதை மதிமுகவுக்கு ஒதுக்க முடியும் என்றும் அதேசமயம் மற்ற தொகுதிகளில் சுயேச்சைகளுக்கும் பம்பரம் ஒதுக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆனால், தற்போது சுயேச்சை பட்டியலி லேயே பம்பரம் சின்னம் இல்லையென்பதால், மதிமுக தரப்பு அதிர்ச்சியடைந்துள்ளது.
இதுகுறித்து மதிமுக அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமியிடம் கேட்டபோது, ’’தேர்தல் ஆணையத் திடம் விண்ணப்பித்துள்ளோம். எங்களுக்கு பம்பரம் சின்னம் கிடைக்கும் என்பதில் மாற்ற மில்லை. அதனால்தான் பம்பரம் சின்னத்தை வைத்து பிரச்சாரம் செய்கிறோம்’’என்றார்.
இதேபோல் திமுக கூட்டணியிலுள்ள விடுத லைச் சிறுத்தைகள் கட்சி கடந்த முறை நட்சத்திரம் சின்னத் தில் போட்டியிட்டது. ஆனால், இம்முறை நட்சத்திரம் சின்னம் தேர்தல் ஆணைய பட்டியலில் இல்லாததால், அக்கட்சி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
இதேபோல், மனித நேய மக்கள் கட்சி மெழுகுவர்த்திகள் சின்னத்துக்கும், புதிய தமிழகம் தொலைக்காட்சி பெட்டி சின்னத் துக்கும் விண்ணப்பித்துள்ளன. மேலும் சுயேச்சை பட்டியலில் உள்ள இந்த சின்னங்கள் தங்க ளுக்கு மட்டுமே தர வேண்டும், சுயேச்சைகளுக்கு தரக்கூடாது என நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளன.
சின்னம் குழப்பம் குறித்து, மனித நேய மக்கள் கட்சி மூத்த தலைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாவிடம் கேட்டபோது, “பொதுவாக தேர்தல் ஆணையம் பதிவு செய்யப்பட்ட கட்சிகளை சுயேச் சையாகப் பார்ப்பதை தவிர்க்க வேண்டும். நாங்கள் முறைப்படி பதிவு செய்து, கணக்கு விவரங்கள் தாக்கல் செய்து, உட்கட்சி தேர்தல் நடத்தி கட்சியை வழிநடத்துகிறோம். ஆனால், எங்களுக்கு சின்னம் ஒதுக்குவதில் இதுபோன்று பாரபட்சமாக செயல்படுவது தவிர்க்கப்பட வேண்டும். அதேநேரம் சின்னம் ஒதுக்காததால் பிரச்சாரத்தில் எந்தக் குழப்பமும் இல்லை. வாக்காளர்கள் மிகுந்த விழிப்புணர் வுடன்தான் இருக்கிறார்கள். அதனால்தான், கடந்த தேர்தலில் மமகவும், புதிய தமிழகமும் தனி சின்னத்தில் போட்டியிட்டு இரண்டு இடங்களைப் பிடித்தோம்’’ என்றார்.
ஏற்கெனவே அங்கீகாரம் பெற்று குறிப்பிட்ட சின்னத்தைப் பயன்படுத்திய கட்சிகளுக்கு அங்கீகாரம் இழந்து 6 வருடங்கள் வரை அந்த குறிப்பிட்ட சின்னத் தைப் கேட்டுப் பெற உரிமை இருக்கிறது. அதனடிப்படையில் மதிமுக (பம்பரம்), பாமக (மாம்பழம்) கட்சிகளுக்கு தேர்தல் சின்னங்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வி.சி. கட்சிக்கு ‘நட்சத்திரம்’கிடைக்காது
விடுதலை சிறுத்தைகள் கட்சி பதிவு செய்யப்பட்ட கட்சியாக இருந்தாலும், தேர்தல் ஆணையத்தால் இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை. தேர்தல் ஆணைய விதிமுறைப்படி, குறைந்தது 10 சதவீத இடங்களிலாவது போட்டியிட்டால் மட்டுமே, அவர்கள் கேட்கும் சின்னம் கிடைக்கும். இதன் அடிப்படையில் இந்த தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு நட்சத்திர சின்னம் கிடைக்காது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்தார். சுயேச்சைகளுக்கான சின்னம் பட்டியலிலும் நட்சத்திர சின்னம் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT