Published : 15 Mar 2014 12:00 AM
Last Updated : 15 Mar 2014 12:00 AM
கலாச்சார நடன நிகழ்ச்சி கள் என்ற பெயரில் இளை ஞர்களைக் கெடுக்கும் வகையில் கோயில் திருவிழாக் களின்போது நடத்தப்படும் நடன நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியான தீர்ப்பு வழங்கியுள்ளது.
தங்கள் கிராமத்தில் உள்ள கோயிலின் வருடாந்திர திருவிழாவின்போது கலாச்சார நடன நிகழ்ச்சி நடத்துவதற்கு அனுமதி வழங்குமாறு தங்கள் சரக காவல் நிலையத்துக்கு உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் வெவ்வேறு ஊர்களைச் சேர்ந்த பலர் மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொண்ட நீதிபதி பி.ராஜேந்திரன், காவல் துறையினருக்கு அத்தகைய உத்தரவு எதையும் பிறப்பிக்க இயலாது எனக் கூறி அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தார்.
நீதிபதியின் தீர்ப்பு விவரம்:
கோயில் திருவிழாக்களின்போது நடன நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு அனுமதி அளித்திடுமாறு காவல் துறையினருக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறி சேலம், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த பலர் இங்கு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். ஆனால் கோயில் திருவிழாக்களில் அத்தகைய நடன நிகழ்ச்சிகள் நடத்த வேண்டியதன் அவசியம் என்ன என்பதை எந்த மனுதாரரும் தெரிவிக்கவில்லை.
கோயில்களில் இதுபோன்ற நடன நிகழ்ச்சிகள் காலம்காலமாக நடத்தப்பட வில்லை. மிக அண்மைக் காலங்களில்தான் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அத்தகைய நிகழ்ச்சிகளில் நமது கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய சிறப்புகள் பற்றி எதுவும் நிகழ்த்தப்படுவதில்லை. மாறாக, இளைஞர்களின் மனதை சீரழித்து அவர்களை தவறானப் பாதைக்கு அழைத்துச் செல்லும் மிக மோசமான நிகழ்ச்சிகளே நடத்தப்படுவதாக நீதிமன்றத் தின் கவனத்துக்கு வந்துள்ளது.
மேலும் அத்தகைய நிகழ்ச்சிகள் பெரும்பாலும் நள்ளிரவு நேரங்களிலேயே நடத்தப் படுகின்றன. குடி போதையில் உள்ளவர்கள்தான் அங்கு பார்வையாளர்களாக உள்ளனர். இதனால் அத்தகைய நிகழ்ச்சிகள் நடத்தப் படும் இடங்களில் பொது அமைதி பாதிக் கப்பட்டு, ஏராளமான பிரச்சினைகள் ஏற்படுகின்றன. ஆகவே, இத்தகைய நிகழ்ச்சிகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
ஓர் இடத்தில் நடத்தப்படும் நிகழ்ச்சிக்கு அனுமதி தருவதா அல்லது வேண்டாமா என்பதைப் பற்றி அந்தந்த சரக காவல் நிலைய அதிகாரிகள்தான் முடிவெடுக்க வேண்டும். ஆகவே, கோயில் திருவிழாக்களில் நடன நிகழ்ச்சிகள் நடத்த காவல் துறையினர் அனுமதி மறுக்கும்போது, காவல் துறையினரின் அந்த நடவடிக்கையில் தலையிட்டு, நிகழ்ச்சிக்கு அனுமதி தருமாறு நீதிமன்றத்தால் எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது என நீதிபதி ராஜேந்திரன் தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.
இதேபோன்ற ஒரு தீர்ப்பை உயர் நீதிமன்ற நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் கடந்த பிப்ரவரி 28-ம் தேதி பிறப்பித்திருந்தார். உயர் நீதிமன்ற நீதிபதிகள் அடுத்தடுத்து பிறப்பித்துள்ள இதுபோன்ற தீர்ப்புகளின் காரணமாக இளைஞர்களை சீரழிக்கும் மோசமான நடன நிகழ்ச்சிகள் இனி கோயில் திருவிழாக்களின்போது நடத்தப்படுவது பெருமளவில் குறையக்கூடும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT