Published : 31 Mar 2017 07:50 AM
Last Updated : 31 Mar 2017 07:50 AM

இடைத்தேர்தல் விதிமீறல்கள் குறித்து வாட்ஸ்அப்பில் புகார் அளிக்கும் வசதி ஏற்படுத்தப்படுமா?

ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் நடைபெறும் விதிமீறல் கள் குறித்து, வாட்ஸ்அப் வழியாக புகார் அளிக்கும் வசதியை தேர்தல் நிர்வாகம் ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை பொது மக்கள் மத்தியில் வலுப்பெற்று வருகிறது.

ஸ்மார்ட் போன் மூலமாக பணிகளை முடித்துவிடும் அளவுக்கு இன்று தகவல் தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது. இந்நிலையில், ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில், விதிமீறல் தொடர்பான புகார்களை வாட்ஸ்அப் மூலமாக பெறாமல், வழக்கம் போல இலவச தொலைபேசி எண்ணை மட்டுமே வழங்கி இருப்பது, பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

பொதுமக்களிடம் பெறும் புகார்கள் குறித்து சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் தெரிவிக்கும் தொழில்நுட்பம் சென்னை மாநகராட்சியில் நடைமுறையில் உள்ளது. கடந்த சட்டப்பேரவை தேர்தலின்போது, மாவட்ட தேர்தல் அலுவலராக இருந்த பி.சந்தரமோகன், அந்த வசதியை தேர்தல் கட்டுப்பாட்டு அறையுடன் இணைத்து, தேர்தல் புகார்களை, அந்தந்த பறக்கும் படையினருக்கு எஸ்எம்எஸ் மூலம் அனுப்பி வைத்தார். அது தேர்தல் பறக்கும் படையினர் துரிதமாக நடவடிக்கை எடுக்க உதவியாக இருந்தது.

மாநகராட்சி பணியில் வாட்ஸ்அப்

கடந்த ஆண்டு ஏற்பட்ட வார்தா புயல் பாதிப்பின்போது, மாநகராட்சி நிர்வகித்து வரும் கட்டுப்பாட்டு அறையின் வாட்ஸ் அப் எண்களான 9445477207, 9445477203, 9445477206, 9445477201, 9445477205 ஆகிய வற்றுக்கு புகார்களை அனுப்ப லாம் என புதிய நடைமுறை ஒன்றை மாநகராட்சி ஆணையர் தா.கார்த்திகேயன் அறிவித்திருந் தார். அதன் மூலம் பெற்ற புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட துடன், புகாரை முறையாக அதிகாரி களுக்கு அனுப்பாத கட்டுப் பாட்டு அறை பணியாளர்களை பணியிடை நீக்கமும் செய்தி ருந்தார். மாநகராட்சியின் பல் வேறு பணிகளும் வாட்ஸ்அப் மூலம் கண்காணிக்கப்பட்டு வரு கிறது. அதனால் தேர்தல் புகார் களையும் அதிலேயே பெற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இது தொடர்பாக ஆர்.கே.நகர் தொகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கூறும்போது, “போன் மூலம் தெரிவிக்கப்படும் புகார்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க விரும்பவில்லை என்றால், அந்த புகார் பொய்யானது என்று, புகாரை ரத்து செய்ய முடியும். ஆனால் வாட்ஸ்அப் மூலமாக, தெரிவிக்கப்படும் புகார்கள், டிஜிட்டல் ஆதாரங்கள் வகையை சார்ந்தது. தற்போது பல குற்றங்களுக்கு மனித சாட்சி இல்லாமல், சிசிடிவி பதிவு போன்ற டிஜிட்டல் ஆதாரங்கள் மூலமாக நீதிமன்றங்கள் தீர்ப்புகளை வழங்கி வருகின்றன. அதனால் தேர்தல் வெளிப்படைத் தன்மையுடன் நடைபெற வேண்டுமென்றால், டிஜிட்டல் முறையில், வாட்ஸ்அப் மூலமாக புகார் அளிக்கும் வசதியை மாவட்ட தேர்தல் அலுவலகம் ஏற்படுத்த வேண்டும்” என்றனர்.

இது தொடர்பாக தேர்தல் நடத் தும் அலுவலர் பிரவீன் நாயரிடம் கேட்டபோது, “வாட்ஸ்அப் மூலமாக புகார் பெற நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x