Last Updated : 30 Mar, 2014 11:43 AM

 

Published : 30 Mar 2014 11:43 AM
Last Updated : 30 Mar 2014 11:43 AM

2.50 லட்சம் வாத நோயாளிகளுக்கு 2 ஆண்டுகளில் சிகிச்சை: தாம்பரம் தேசிய சித்த மருத்துவமனை சாதனை

தாம்பரம் தேசிய சித்த மருத்துவமனையில் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 2.50 லட்சம் வாத நோயாளிகள் சிகிச்சை பெற்று சென்றுள்ளனர் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தாம்பரம் சானடோரியத்தில் சுமார் 14.73 ஏக்கர் பரப்பளவிலான தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தை (அயோத்திதாச பண்டிதர் மருத்துவமனை) 2005-ம் ஆண் டில் பிரதமர் மன்மோகன் சிங் தொடங்கி வைத்தார். இந்த மருத்துவமனையில் தோல் நோய்கள், வாத நோய்கள், சர்க்கரை நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக சித்த மருத்துவம் மூலம் வாத நோய்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதனால், தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வாத நோயாளிகள் தினமும் சிகிச்சைக்கு வருகின்றனர்.

இது தொடர்பாக தேசிய சித்த மருத்துவ நிர்வாகம் கூறியதாவது:

தமிழ் மருத்துவமான சித்த மருத்துவம் மிகப் பழமையானது. திருக்குறளில் மருந்து என்னும் அதிகாரம் சித்த மருத்துவ அடிப்படையில் கூறப்பட்டுள்ளது. சங்க இலக்கியங்களான தொல்காப்பியம் தொடங்கி புறநானூறு, குறிஞ்சிப்பாட்டு போன்றவற்றில் சித்த மருத்துவம் பற்றி தெளிவாக கூறப்பட்டுள்ளது. சித்த மருத்துவத்தின் முதல் சித்தர் அகத்தியர் ஆவார்.

சித்த மருத்துவத்தில் நீர்க்குறி நெய்க்குறி, நாடி மூலம் நோய்களை கண்டுபிடிக்கிறோம். இந்த மருத்துவமனையில் பக்க வாதம், அழல்கீழ் வாதம், முடக்கு வாதம் உள்ளிட்ட 80 வகையான வாத நோய்களுக்கு சிகிச்சை அளிக்கிறோம். குறிப்பாக சித்த மருத்துவத்தின் மூலம் வர்மம், தொக்கணம் (மசாஜ்), பழக்க வழக்கம், உணவு மற்றும் பத்தியம் போன்றவைகளால் சிகிச்சை அளிக்கப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் வாத நோய்களால் பாதிக்கப்பட்ட சுமார் 2.50 லட்சம் பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். மாத்திரை, இளகம் (லேகியம்), தைலம் போன்ற மருந்துகளை நோயாளிகளுக்கு கொடுக்கிறோம். இங்கு வழங்கப்படும் மருந்துகள் மிகவும் விலை உயர்ந்தவை. ஏழை-எளிய நோயாளிகள் உட்பட அனைவருக்கும் இலவசமாக மருந்துகளை வழங்குகிறோம்.

இவ்வாறு நிர்வாகம் தெரிவித்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x