Published : 08 Mar 2017 10:10 AM
Last Updated : 08 Mar 2017 10:10 AM
இன்று உலக மகளிர் தினம்
பெண்கள் அடிமைத்தனத்தை அடியோடு விட்டொழிக்க வேண்டும் என சர்வதேச மகளிர் தினத்தையொட்டி பத்மஸ்ரீ கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் தெரிவித்துள்ளார்.
பெண்கள் முன்னேற்றம், அடித் தட்டு மக்களின் உரிமைகள், நிலமற்ற விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மீட்டெடுத்தல் இவைகளுக்காக தனது 91 வயதிலும் போராடி வரு கிறார் காந்திய போராளி பத்மஸ்ரீ கிருஷ்ணம்மாள். அண்மையில், இந்திய குடியரசுத் தலைவரால் அளிக்கப்பட்ட ‘பெண் சாதனையாளர்’ விருது கிருஷ்ணம்மாளின் தன்னலமற்ற சேவைக்கு கிடைத்திருக்கும் இன்னொரு அங்கீகாரம்.
சர்வதேச மகளிர் தினத்தை யொட்டி, பெண்கள் முன்னேற்றம், அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து ‘தி இந்து’விடம் கிருஷ்ணம்மாள் கூறியதாவது:
இந்தக் காலத்து பெண்கள், ஆண்களைவிட அதிகமாக உழைக்கிறார்கள். ஆனால், எது நல்லது, எது கெட்டது என்று தெரியாமலும் ஒரு குறிக்கோள் இல்லாமலும் ஓடுகிறார்கள். மண்ணை மிதித்து பக்குவப்படுத்துவதுபோல் பெண்கள் கையில் முக்கியப் பொறுப்புகளைக் கொடுத்து, அதில் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மூலம் அவர்களை எதற்கும் தயாரானவர்களாக பக்குவப்படுத்த வேண்டும்.
இந்தியா சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் கடந்த பிறகும் மக்களுக்கு விடிவு காலம் பிறக்கவில்லை. ஐந்தாண்டு, பத்தாண்டு திட்டங்களை எல்லாம் பார்த்தாகி விட்டது. இன்னமும் கிராமங்களில் குடிப்பதற்கு தண்ணீர் இல்லை; குடியிருக்க வீடு இல்லை. இதை யெல்லாம் அரசாங்கம் செய்யும் என்று அடுக்களையில் முடங்கிக் கிடக்காமல் நம்மால் என்ன செய்ய முடியும் என்ற சிந்தனையோடு பெண்கள் வெளியில் வரவேண்டும் என்பதுதான் அவர்களுக்கு நான் சொல்லும் மகளிர் தின செய்தி.
அந்தக் காலத்தில், ‘இந்த சமுதாயத்துக்கு நான் என்ன செய்தேன்?’ என்ற கேள்வியே மக்களிடம் மேலோங்கி இருந்தது. ஆனால், இப்போது ‘இதனால் எனக்கு என்ன கிடைக்கும்?’ என்ற கேள்வியோடுதான் மக்கள் ஓடிக்கொண்டு இருக்கிறார்கள். பெண்களுக்கு எதிரான நெருக்கடிகளும் சவால்களும் அந்தக் காலத்திலும் இருந்தது. இப்போது நடப்பதைவிட அதிகமாகவே இருந்தது. அன்றைக்கு இத்தனை ஊடக வெளிச்சம் இல்லாததால் எதுவும் வெளியில் தெரியாமல் இருந்தது. அதையெல்லாம் சமாளித்துத்தான் நாங்கள் எல்லாம் வெளியில் வந்திருக்கிறோம்.
அதுபோல இன்றைய பெண்களும் சமுதாய பொறுப்புகளை எடுத்துக்கொள்வதற்கு துணிச்சலோடு எழுந்து வர வேண்டும். அத்தகைய எழுச்சியும், தெளிவும், துணிச்சலும் பெண்களுக்கு வந்து விட்டால் இந்த சமுதாயம் அது வாகவே ஒழுக்கம் பெற்று திருந்திவிடும். அத்தகைய விடியலை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகத் தான் என்னைப் போன்றவர்கள் இந்த வயதிலும் ஓடிக்கொண்டு இருக்கிறோம் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT