Published : 09 Jun 2017 10:57 AM
Last Updated : 09 Jun 2017 10:57 AM

பால் கலப்படத்தை தடுக்க நடமாடும் ஆய்வுக்கூடங்கள் மாவட்டங்கள் தோறும் ஏற்படுத்தப்படுமா?

பால் மற்றும் பால் சார்ந்த உணவுப் பொருட்களில் கலப்படத்தை கண்டறிய மாவட்டங்கள் தோறும் நடமாடும் உணவுப்பரிசோதனை வாகனங்கள் மற்றும் பகுப்பாய்வு மையங்கள் ஏற்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நீருக்கு அடுத்து பால் மற்றும் பால் சார்ந்த உணவுப்பொட்கள் தற்போது பொதுமக்களின் அன்றாட உணவு பழக்க முறையில் அவசியமாகிவிட்டது. சர்வதேச அளவில் பால் உற்பத்தி மற்றும் பயன்பாட்டில் முதல் 5 நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கிறது. தற்போது மக்களுடைய தேவைக்கு ஏற்ப பால் உற்பத்தி இல்லாததால் உற்பத்தியை அதிகரித்து காட்டுவதற்காக பாலில் கலப்படம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. கடந்த வாரம் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியே, தனியார் பால் நிறுவனங்களில் விற்கப்படும் பாலில் கலப்படம் இருப்பதாக தெரிவித்ததால் பொதுமக்களிடம் இந்த விவகாரம் பெரும் அச்சத்தையும், அதிர்வலையும் உருவாக்கி உள்ளது.

அதனால், தமிழகம் முழுவதும் தற்போது பொதுமக்கள் பயன்படுத்தும் பாலில் கலப்படம் உள்ளதா என்பது குறித்து உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறையின் சார்பில் தரப்பரிசோதனை நடத்தப்படுகிறது. இந்த பரிசோதனைகள் தற்காலிக கண்துடைப்பு நடவடிக்கையாகவே இருப்பதாகவும், ஆண்டு முழு வதும் மக்கள் பாலில் உள்ள கலப்படத்தை எளிமையாக கண்டறியும் வகையில் நடமாடும் ஆய்வக வசதி கொண்ட உணவு பரிசோதனை வாகனங்களையும், பகுப்பாய்வு கூடங்களையும் உடனடியாக மாவட்டங்கள் தோறும் அமைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதுகுறித்து மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஆர்.காந்தி கூறுகையில், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயம் அமைப்பானது, கடந்த 2012-ஆம் ஆண்டு பாலில் உள்ள கலப்படம் தொடர்பாக தேசிய அளவிலான சர்வே செய்தனர். அந்த சர்வேயின் முடிவில், இந்தியாவில் 68.4 சதவீதம் விற்பனை செய்யப்படும் பாலில் கலப்படம் இருப்பதாக கண்டறிந்தது. இதில் பீகார், சட்டீஷ்கர், ஒரிஷா, மேற்கு வங்காளம், மிஜோரம், ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில் விற்பனை செய்யப்படும் பாலில் 100 சதவீதம் கலப்படம் இருப்பது தெரியவந்தது.

உத்தரபிரதேசம், உத்திரகாண்ட்டில் 88 சதவீதமும், ராஜஸ்தானில் 76 சதவீதமும், குஜராத்தில் 89 சதவீதமும், டெல்லி 70 சதவீமும் பாலில் கலப்படம் இருப்பதாக சொல்லப்பட்டது. ஆனால், தமிழ்நாட்டில் 12 சதவீதமும், ஆந்திராவில் 6.7 சதவீதமும், கர்நாடகாவில் 22 சதவீதமும், கேரளாவில் 28 சதவீதமும் மட்டுமே பாலில் கலப்படம் இருந்ததாக சொல்லப்பட்டது.

பாலில் பல்வேறு கலப்படங்கள் செய்யப்படுவது மிக கொடூரமான குற்றமாகும். கலப்படத்தை எளிதாக கண்டறிவதற்கு மாவட்டங்கள் தோறும் உரிய பரிசோதனை ஆய்வுக்கூடங்கள் இல்லாதது, அதிகாரிகளுடைய போதுமான கண்காணிப்பு இல்லாததால் எளி தாக கலப்படம் செய்யக்கூடிய உணவுப்பொருளாக பால் மாறிவிட்டது.

உணவுப்பொருட்களில் கலப் படம் செய்தவர்களை கண்டறிந்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அந்த நிறுவனங்களை தொடர் பயன்பாட்டில் இல்லா மல் தடை செய்வதற்கு உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகளுக்கு அதிகாரம் உண்டு. ஆனால், இவர்கள் அந்த கடமையை தட்டி கழிக்கின்றனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பால் கலப்படத்தை தடுக்க 10 கட்டளைகள்

வழக்கறிஞர் காந்தி மேலும் கூறுகையில், கடந்த 2012-ஆம் ஆண்டு சுவாமி அட்சுதானந்த் என்பவர் பொதுநல வழக்கினை விசாரித்த உச்சநீதிமன்றம், பாலில் கலப்படம் செய்வதை தடுப்பதற்காக 10 கட்டளைகளை பிறப்பித்துள்ளது. அதன்படி மத்திய, மாநில அரசுகள் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டத்தை செயல்படுத்த வேண்டும். பால் பண்ணை, பால் விற்பனையாளர்கள் மத்தியில் பாலில் ரசாயணங்களை கலப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்கிற விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

மாநில உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அனைத்து மாவட்டங்களிலும் பாலில் உள்ள கலப்படத்தை கண்டறியவதற்காக உரிய அதிகாரிகள் மற்றும் ஆய்வகளை நியமிக்க கட்டமைப்பு வசதிகளை உருவாக்க வேண்டும். நடமாடும் ஆய்வக வசதிகள் கொண்டு உணவு பரிசோதனை வாகனங்களை உடனடியாக மாவட்டங்கள் தோறும் அமைக்க வேண்டும், பொதுமக்கள் இலவசமாக தொலைபேசி மூலம் அழைத்து புகார் சொல்வதற்கு ஒரு கட்டமில்லா இலவச அழைப்பு எண் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 10 கட்டளைகளை கடந்த மத்திய மாநில உணவு பாதுகாப்பு தர நிர்ணய அதிகாரிகள், நடைமுறைப் படுத்தாதே இந்த பிரச்சனைக்கு முக்கிய காரணம், என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x