Published : 20 Apr 2017 08:57 AM
Last Updated : 20 Apr 2017 08:57 AM
பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் பொம்மிடி அருகே விவசாயிகள் குழுவாக இணைந்து நீர்வழிப் பாதைகளை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தருமபுரி மாவட்டம் பாப்பி ரெட்டிப்பட்டி வட்டத்தில் சேர்வ ராயன் மலையின் ஒரு சரிவில் இருந்து வழியும் மழைநீர் அஜ்ஜம்பட்டி ஏரியில் நிரம்பி, பின்னர் ஜொல்லாக்கவுண்டன் ஏரி, சின்னாக்கவுண்டன் ஏரி என
அடுத்தடுத்த ஏரிகளை நிறைத்து ஒட்டுப்பள்ளம் பகுதிக்கு வந்து சேரும். அதேபோல, துருவத்துக்கல் மலையில் இருந்து வழியும் நீர் கும்பார அள்ளி ஏரியை நிறைத்து ஒட்டுப்பள்ளம் பகுதிக்கு வந்து சேரும்.
கவரமலையில் இருந்து வழியும் நீர் கவரமலை ஏரியை நிறைத்து ஒட்டுப்பள்ளத்துக்கு வந்து சேரும். அதே கவரமலையின் மற்றொரு பகுதியில் இருந்து வழியும் நீர் வாசிக்கவுண்டனூர் ஏரியை நிறைத்து, பின்னர் ஒட்டுப்பள்ளம் பகுதிக்கு வந்துசேரும். இது தவிர சிற்றோடை ஒன்றும் ஒட்டுப்பள்ளம் பகுதிக்கு வந்து சேரும். பின்னர் ஒட்டுப்பள்ளம் பகுதியில் இருந்து அகன்ற கால்வாயாக மாறி வழியில் 2 சிறு ஏரிகளை நிறைத்துக்கொண்டு வேப்பாடியாற்றின் ஒரு பகுதியில் இணைந்து தொப்பையாறு அணைக்கு தண்ணீர் சென்றுவிடும்.
இப்படியான நீர்வழிப் பாதையின் சில இடங்கள் ஆக்கிரமிப்பில் சிக்கியதால் சில பகுதிகளில் சுவடே இல்லாமல் மறைந்தது. இதனால், மழைக் காலங்களில் ஏற்படும் வெள்ளம் விவசாய நிலங் களுக்குள் புகுந்து பயிர்களைச் சேதப்படுத்தும் நிலை உருவானது. இவ்வாறு வெளியேறும் தண்ணீர் இறுதியில் கடலுக்குச் சென்றது.
இந்நிலையில், நீர்வழிப் பாதை களை மீட்டெடுக்க திட்டமிட்ட அப்பகுதி விவசாயிகள் சிலர் ஓராண்டாக இதற்கான முயற்சி களை மேற்கொண்டனர். நீர்வழிப்பாதைகள் தொடர்பான வருவாய்த் துறை ஆவண நகல்களைச் சேகரித்து, ஆக்கிரமிப்பில் உள்ள பகுதிகள் குறித்து சம்பந்தப் பட்டவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அதிகாரிகளை அணுகி, ஒட்டுப்பள்ளம் நீர்வழிப் பாதைகளை மீட்க அனுமதி கோரினர். இந்தப் பணிகளை விவசாயிகளே சொந்த செலவில் செய்துகொள்வதாகவும் தெரிவித்தனர்.
இதற்கு அதிகாரிகளும் உரிய அனுமதியை வழங்கி ஒத்துழைப்பு தரத் தொடங்கினர். நீர்வழிப் பாதைகளைக் கண்டறிந்து அளவீடு செய்து அடையாளமிட்ட பின்னர், அவற்றை மீட்கும் பணியை கடந்த 15 நாட்களாக மேற்கொண்டு வருகின்றனர். அருண், கலைச் செழியன், கிருஷ்ணா, அகிலன், ரவிக்குமார் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் இந்தப் பணியில் செயலாற்றி வருகிறார்கள்.
இதுபற்றி அருண் கூறும்போது, ‘‘இந்தத் திட்டத்தை ஓராண்டுக்கு முன்பு தீவிரமாக கையில் எடுத்து செயலாற்றத் தொடங்கினோம். அதிகாரிகளும் அனைத்துப் பணிகளிலும் ஊக்கம் அளித்தனர். தற்போது ரூ.2 லட்சம் செலவாகி உள்ளது. சுமார் 4 கிலோமீட்டர் தூரம் உள்ள இந்த நீர்வழிப் பாதையில் 85 சதவீதப் பணிகளைத் தற்போது முடித்துவிட்டோம். பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பழனி யப்பனும் ஊக்கப்படுத்தினார். அடுத்தகட்டமாக, சாத்தியமுள்ள 7 இடங்களைத் தேர்வு செய்து தடுப்பணைகளைக் கட்டுவதுதான் முக்கியப் பணி. அதற்கு சுமார் ரூ.7 லட்சம் வரை செலவாகும்.
விவசாயத்தைக் காக்க நினைப்பவர்களிடம் இருந்து இதற்கான உதவிகளைக் கோர திட்ட மிட்டுள்ளோம். 7 தடுப்பணைகள் அமைந்துவிட்டால் 500 ஏக்க ருக்கும் அதிகமான விவசாய நிலம் செழிப்பாகும்’’ என்று நம்பிக்கை யுடன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT