Published : 26 Sep 2016 01:03 PM
Last Updated : 26 Sep 2016 01:03 PM
உள்ளாட்சி தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பாஜகவை வீழ்த்த இனயம் துறைமுகம் விவகாரம், சுசீந்திரம் பாலம், இந்துக்களுக்கு கல்வி உதவித்தொகை ஆகிய விவகாரங்களை கையில் எடுக்க காங்கிரஸ், திமுக கட்சிகள் வியூகம் வகுத்துள்ளன.
தமிழகத்தில் பாஜக மிக வலுவாக உள்ள மாவட்டம் கன்னியாகுமரி. கடந்த மக்களவைத் தேர்தலின் போது, இத்தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பொன்.ராதாகிருஷ்ணன் சாலை, நெடுஞ்சாலை மற்றும் கப்பல் துறை இணை அமைச்சராக உள்ளார்.
இனயம் துறைமுகம்
இவரது முயற்சியால் இனயத்தில் ரூ.27,500 கோடி மதிப்பீட்டில் வர்த்தக துறைமுகம் அமைகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆரம்பம் முதலே இத்திட்டத்தை ஆதரித்தும், எதிர்த்தும் பலரும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
இனயத்தில் துறைமுகம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் அண்மையில் போராட்டத்தில் பங்கெடுத்தன. இவ்விவகாரத்தை உள்ளாட்சி தேர்தலின் போது மீனவர்கள் மத்தியில் கொண்டு செல்ல திமுக, காங்கிரஸ் கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
சுசீந்திரம் பாலம்
கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் சுசீந்திரத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனின் முயற்சியினால் ரூ.7.5 கோடி மதிப்பீட்டில் புதிய பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது.
இப்பணிகளுக்கு பாகிஸ்தான் நாட்டில் உள்ள அட்டாக் எனும் நிறுவனத்தில் இருந்து
சிமென்ட் வாங்கி பயன்படுத்துவதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது. இவ்விவகாரத்துக்கு பாஜக சார்பில் விளக்கம் அளிக்கப்படவில்லை. இதை ஆம் ஆத்மி கட்சி பரப்புரை செய்து வருகிறது.
கல்வி உதவித்தொகை
கன்னியாகுமரி மாவட்டத்தில் பாஜகவின் வாக்கு வங்கிக்கு அடித்தளம் இட்ட விசயங்களில் முக்கியமானது இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என்ற, தேர்தல் நேர பிரச்சாரம் தான். அது இதுவரை சாத்தியப்படவில்லை.
சில வாரங்களுக்கு முன்பு இப்பிரச்சினையை முன்வைத்து நாகர்கோவிலில் காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தியது. இவ்விவகாரத்தையும் உள்ளாட்சி தேர்தலின் போது மக்கள் மத்தியில் கொண்டு செல்ல திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
இந்த மூன்று பிரச்சினைகளையும், உள்ளாட்சி தேர்தலில் பாஜக எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்பது போக போகத் தான் தெரியும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT