Published : 28 Jan 2014 07:31 PM
Last Updated : 28 Jan 2014 07:31 PM
தலைவர் என் மீது இப்படியொரு அபாண்டத்தைச் சுமத்துவார் என்று நான் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை என்று மு.க.அழகிரி அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.
தி.மு.க. தலைவரின் பேட்டி ஒளிபரப்பானபோது விருதுநகர் மாவட்டத்தில் இருந்த மு.க.அழகிரி, அவர் சொன்ன தகவல்களைக் கேட்டு அதிர்ச்சியடைந்தார். மதுரை திரும்பிய அவர், தன் வீடு முன்பு உள்ள அலுவலகத்தில் அமர்ந்து கருணாநிதியின் அந்தப் பேட்டியை டி.வி.யில் பார்த்தார். பின்னர் கோபம், வேதனை கலந்த முகத்தோடு வீட்டுக்குள் எழுந்து சென்றார் மு.க.அழகிரி.
கருணாநிதியின் பேட்டிக்கு அவரது எதிர்விளைவு என்ன என்பதைத் தெரிந்து கொள்வதற்காக பகல் 1.30 மணியளவில் பத்திரிகையாளர்கள் அவரது வீட்டு முன் திரண்டனர். ஆனால், அழகிரி வீட்டில் இருந்து எந்தத் தகவலும் வரவில்லை.
பின்னர் மாலை 5 மணிக்கு அழகிரி பேட்டியளிக்க இருப்பதாக அனைத்து நிருபர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த முறை மீடியாக்காரர்கள் மைக் வைப்பதற்கு இரு டேபிள்கள் போட்டு, நிருபர்கள் அமர சேர்கள் போடப்பட்டு பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.
மாலை 6 மணி அளவில் பத்திரிகையாளர்கள் முன் வந்தமர்ந்த மு.க.அழகிரி, கவலை தோய்ந்த முகத்தோடு பேச ஆரம்பித்தார். அவர் பேசியதாவது:
“உங்களுடைய எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லமாட்டேன். நான் என்ன சொல்லப் போகிறேனோ அதை மட்டும்தான் நீங்கள் எழுதிக்கொள்ள வேண்டும். ஆரம்பிக்கலாமா? என்று கேட்டுவிட்டு மளமளவென பேச ஆரம்பித்தார். அவரது பேட்டி.
இன்று (செவ்வாய்க்கிழமை) மதியம் வெளியான தலைவரின் பேட்டியைக் கண்டு மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். என் மீது இப்படி ஒரு அபாண்டத்தைச் சுமத்துவார் என்று நான் கனவில்கூட நினைத்துப் பார்த்திருக்க முடியாது. ஆனால் அதை அவர் எனக்கு வழங்கிய பிறந்தநாள் வாழ்த்தாக நான் ஏற்றுக்கொள்கிறேன். ஏற்றுக்கொள்கிறேன் என்றால் பழியை ஏற்றுக்கொள்ளவில்லை. அவரது குற்றச்சாட்டை பிறந்தநாள் வாழ்த்து சொன்னதாக ஏற்றுக்கொள்கிறேன்.
சஸ்பெண்ட்தான் பரிசு
ஜன. 24-ம் தேதி காலையில் நான் தலைவரைச் சந்தித்து பல நியாயங்களை எடுத்துச் சொன்னேன். தொண்டர்களுடைய குற்றச்சாட்டுகளையும், ஒன்றிய செயலாளர்களுடைய குற்றச் சாட்டுகளையும் எடுத்துக்கொண்டு தலைவரிடத்தில் காட்டினேன். அதற்குக் கிடைத்த பரிசுதான் என்னைக் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்தது. நியாயத் துக்காக, தொண்டர் களுக்காகப் போராடியதற்காக இப்படிப்பட்ட பரிசு கிடைத்துள்ளது.
பேக்ஸ் மூலம் தகவல்கள்
ஆனால், அன்றைய தினம் என்னை கட்சியில் இருந்து விலக்கியபோது பொதுச் செயலாளர் அவர்கள், என்னை விலக்கியதற்கான காரணங்களை எல்லாம் சொல்லியிருந்தார். அவர் சொன்ன காரணங்கள் எதிலும், தற்போது தலைவர் சொன்ன குற்றச்சாட்டுகள் இல்லை. இப்போதுகூட பொதுச் செயலாளர் என்னிடம், ‘ஏன் இந்தக் குற்றச்சாட்டுகளை எல்லாம் கட்சிக்குச் சொல்லாமல், நேரடியாக தலைவரிடம் சொன்னீர்கள்?’ என்று கேட்டுள்ளார். உள்கட்சித் தேர்தலில் நடைபெற்ற குளறுபடிகள் மதுரையில் மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் நடைபெற்றுள்ளன. பல மாவட்டச் செயலாளர்கள் இதுகுறித்து என்னிடம் கூறியுள்ளனர். இது சம்பந்தமாக தொண்டர்களுடைய, ஒன்றியச் செயலாளர்களுடைய குற்றச்சாட்டுகள் எல்லாம் அறிவாலயத்துக்கு பேக்ஸ் செய்யப்படுகின்றன. ஆனால், அவை எல்லாம் மறைக்கப் படுகிறது. தலைவர், பொதுச் செயலாளர் பார்வைக்கே போய்ச்சேருவதில்லை. அதனால் தான் அறிவாலயத்தில் போய் சொல்வதைவிட, நேரடியாகத் தலைவரிடம் சொல்லலாம் என்றுதான் நான் வீட்டுக்கே சென்று தலைவரிடம் சொன்னேன்.
பரிசீலனை தேவை
நான் மீடியாக்களிடம் பேசு வதையும் ஒரு குற்றச்சாட்டாகக் கூறியுள்ளார்கள். ஆனால், என்னை சஸ்பெண்ட் செய்த பிறகுதான் மீடியாக்களிடம் பேசவே ஆரம்பித்தேன்.
மதுரை வருவதற்கு முன்பு 26-ம் தேதி துரைமுருகனையும் அவரது இல்லத்தில் சந்தித்து, அவரிடமும் இந்தப் புகார்கள் குறித்து விளக்கி நியாயம் கேட்டேன். இதை எல்லாம் பரிசீலிக்குமாறு கூறினேன்.
இந்த நேரத்தில் நான் ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். (அழகிரியின் கண்கள் கலங்கின. கண்ணீர் திரண்டது) நான் என்றைக்குமே தொண்டர்கள் பக்கம்தான் இருப்பேன். அவர்களுக்கும் என்னைப் பற்றி நன்றாகத் தெரியும். தலைவர் நல்லா இருக்கணும், நல்லா வாழணும். (இவ்வாறு அவர் கூறிக் கொண்டிருக்கும்போது, வீட்டுக்குள் இருந்து அழகிரியின் பேட்டியை லைவ்வாக பார்த்துக் கொண்டிருந்த துரை தயாநிதி, வேகமாக வெளியே வந்து பி.எம்.மன்னன் உள்ளிட்ட நிர்வாகிகளின் காதில் ஏதோ சொன்னார். (உடனே, அவர்கள் அழகிரியைத் தொட்டு பேட்டியை நிறுத்துமாறு சமிக்ஞை செய்தார்கள்)
100 ஆண்டுக்கு மேல் வாழணும்
தலைவர் இன்னும் 100 ஆண்டுகளுக்கு மேல் வாழணும். அவருக்கு முன்னால் நாங்கள் இறந்துவிட வேண்டும் என்றுதான் நினைக்கிறோம்.
இதைத்தான் சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி பேட்டியில் கூறினேன். அவருடைய கண்ணீர் என்னுடைய பிணத்தின் மீது விழவேண்டும் என்பதுதான் என் ஆசை என்று சொல்லி முடிக்கிறேன்” என்று கூறிய அழகிரி விருட்டென எழுந்து வீட்டுக்குள் சென்றுவிட்டார். இதனால், தலா 10 கேள்விகளுடன் வந்திருந்த அனைத்து நிருபர்களும் ஏமாற்றம் அடைந்தனர்.
காரியாபட்டியில் ஆலோசனை
முன்னதாக விருதுநகர் மாவட்டம், காரியாபட்டிக்கு செவ்வாய்க்கிழமை வந்த அழகிரி,. மாவட்ட துணைச் செயலர் எஸ்.எம்.போஸ் உள்ளிட்ட நிர்வாகிகளிடம் 20 நிமிடம் ஆலோசனை நடத்தினார்.
அதன் பின்னர், வெளியே வந்த அவர் நிருபர்களிடம் கூறும்போது, “எஸ்.எம்.போஸ் அண்ணன் மகன் திருமண விழாவுக்கு வர முடியாததால் இப்போது வந்தேன். தொண்டர்கள் எழுச்சியாக உள்ளதை நீங்களே பார்க்கிறீர்கள். தென்மாவட்டங்களில் தொண்டர் களின் எழுச்சிக்கு என்னுடைய நடவடிக்கைகளே காரணம்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT