Published : 16 Oct 2013 11:50 AM
Last Updated : 16 Oct 2013 11:50 AM
தூத்துக்குடி அருகே ஆயுதங்களுடன் சிறைப்பிடிக்கப்பட்ட அமெரிக்க கப்பல், எதற்காக இந்த பகுதிக்கு வந்தது என்பதில் தொடர்ந்து மர்மம் நீடிக்கிறது. இரு நாட்டு உறவு சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால் அடுத்து என்ன செய்வது என தெரியாமல் அதிகாரிகள் திணறுகின்றனர்.
தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து 15 கடல் மைல் தொலைவில் இந்திய கடல் பகுதிக்குள் நுழைந்த சீமேன் கார்டு ஓகியோ என்ற ரோந்து கப்பலை இந்திய கடலோரக் காவல் படையினர் கடந்த வெள்ளிக்கிழமை மடக்கிப் பிடித்து தூத்துக்குடி துறைமுகத்துக்கு கொண்டு வந்தனர்.
தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள இந்த கப்பலில் இந்திய கடற்படை, கடலோர காவல் படை, கடலோர பாது காப்பு குழும போலீஸார், ஐ.பி., கியூ உள்ளிட்ட மத்திய, மாநில உளவு போலீஸார், உள்ளூர் போலீஸார் போன்ற பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கூட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் இந்த கப்பல் அமெரிக்காவின் வாஷிங்டனை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டுவரும் அட்வன் போர்ட் என்ற தனியார் மெரைன் பாதுகாப்பு நிறுவனத்துக்கு சொந்தமான கப்பல் எனத் தெரியவந்தது.
அந்த கப்பலில் 35 அதிநவீன செமி ஆட்டோமெட்டிக் துப்பாக்கிகள், 5,700 ரவுண்ட் தோட்டாக்கள் இருந்தன. மேலும், பயிற்சி பெற்ற 25 பாதுகாவலர்கள், 10 கப்பல் மாலுமிகள் இருந்தனர். இந்த மாலுமிகளில் 8 பேர் இந்தியர்கள். அதிலும் ஒருவர் தமிழகத்தை சேர்ந்தவர். பாதுகாவலர்களை பொறுத்தவரை அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன், எஸ்டோனியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் உள்ளனர்.
கப்பலில் நவீன ஆயுதங்களை வைத்திருந்தது மற்றும் தூத்துக்குடி பகுதிக்கு வந்ததற்கான முறையான ஆவணங்களைக் கப்பலில் இருந்த வர்கள் காட்ட தவறியதைத் தொடர்ந்து கப்பலை தொடர்ந்து துறைமுகத்திலேயே நிறுத்திவைக்க அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
மேலும், ஆயுதங்கள் வைத்திருந்தது மற்றும் இந்திய கடல் பகுதியில் சட்டவிரோதமாக டீசல் பரிமாறியது உள்ளிட்ட 4 பிரிவுகளின்கீழ் கப்பலில் இருந்த 25 பாதுகாவலர்கள் மற்றும் 10 மாலுமிகள் மீது தருவைகுளம் கடலோர காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.
ஆனால் இரு நாட்டு உறவு தொடர்பான விவகாரம் என்பதால் மத்திய அரசின் குறிப்பாக வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதல் படியே எந்த நடவடிக்கையும் எடுக்க முடியும் என விசாரணை அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.
அந்த கப்பல் நிறுவனத்தின் பிரதிநிதியாக சாக்கோ தாமஸ் என்பவர் தூத்துக்குடிக்கு வந்துள்ளார். அவரிடமும் போலீஸார் விசா ரணை நடத்தினர். அவர் தூத்துக்குடியில் தொடர்ந்து முகாமிட்டு போலீஸார் கேட்கும் சில ஆவணங்களைக் கப்பல் நிறுவனத்திடம் இருந்து பெற்று போலீஸாரிடம் கொடுத்து வருகிறார்.
இது தொடர்பாக நம்மிடம் பேசிய காவல்துறை அதிகாரி ஒருவர், கப்பல் நிறுவனம் சார்பில் நாங்கள் கேட்கும் ஆவணங்களை காட்டி வருகின்றனர். இருப்பினும் அனைத்து விசாரணை அமைப்புகளும் இணைந்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். கப்பல் துறையில் இருந்தும் மூத்த அதிகாரி ஒருவர் தூத்துக்குடிக்கு வரவுள்ளார். இந்த விஷயத்தில் நாங்கள் எந்த முடிவும் எடுக்க முடியாது. இந்திய அரசுதான் முடிவெடுக்க வேண்டும். அவர்களை கைது செய்வது, கப்பலை விடுவிப்பது போன்ற எந்த நடவடிக்கையும் மத்திய அரசின் அறிவுறுத்தல்படியே எடுக்கப்படும் என்றார் அந்த அதிகாரி.
அறிக்கை தயார்
இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசிடம் விரிவான அறிக்கையை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கேட்டுள்ளது. இதையடுத்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் எம். ரவிக்குமார், சீமேன் கார்டு ஓகியோ கப்பலை நேரில் பார்வையிட்டு, விசாரணை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன் அடிப்படையில் அமெரிக்க கப்பல் சிறை பிடிக்கப்பட்டிருப்பது குறித்து விரிவான அறிக்கையை மாவட்ட ஆட்சியர் தயாரித்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சட்டவிரோத டீசல் பரிமாற்றம்
சீமேன் கார்டு ஓகியோ கப்பலுக்கு தூத்துக்குடி அருகே கடல் பகுதியில் வைத்து சட்டவிரோதமாக டீசல் பரிமாறியிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. கப்பல் நடுக்கடலில் இருந்தபோது திடீரென எரிபொருள் தீர்ந்துவிட்டதாம். இதையடுத்து கப்பலின் கேப்டன் துபாயில் உள்ள தங்கள் நிறுவனத்தின் ஏஜென்டை தொடர்பு கொண்டாராம். அவர் தூத்துக்குடி கடல் பகுதில் டீசல் நிரப்ப ஏற்பாடு செய்துள்ளார்.
துபாயில் இருந்து அந்த ஏஜென்ட் தூத்துக்குடி யைச் சேர்ந்த ஒருவரை தொடர்புகொண்டு டீசலுக்கு ஏற்பாடு செய்துள்ளார். இதையடுத்து தூத்துக்குடியில் உள்ள பெட்ரோல் நிலையம் ஒன்றில் 10 பேரல் டீசல் (2 ஆயிரம் லிட்டர்) வாங்கப்பட்டு விசைப்படகு மூலம் கொண்டு செல்லப்பட்டு கப்பலில் கொடுக்கப்பட்டதாம். மேலும், சில காய்கறிகளும் தூத்துக்குடியில் வாங்கிச் சென்று அந்த கப்பலுக்கு கொடுக்கப்பட்ட தாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக வழக்குப் பதிந்துள்ள போலீஸார், கப்பலுக்கு தூத்துக்குடியில் இருந்து டீசல் சப்ளை செய்தது யார், எந்த படகு பயன்படுத்தப்பட்டது, படகில் யார் யாரெல்லாம் சென்றார்கள் என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக சில முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன. இதில் தொடர்புடையவர்கள் விரைவில் சிக்குவார்கள் என போலீஸார் தெரிவித்தனர்.
மர்மம் நீடிப்பு
இந்த கப்பல் தூத்துக்குடி கடல் பகுதிக்கு எதற்காக வந்தது என்பது குறித்து தொடர்ந்து மர்மம் நீடித்து வருகிறது. அட்வன் போர்ட் நிறுவனம் சார்பில் ரோந்து கப்பல்கள் உலகின் பல்வேறு கடல் பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஏதாவது பகுதியில் சரக்கு கப்பல்களுக்குப் பாதுகாப்பு தேவைப்பட்டால், உடனடியாக அருகில் இருக்கும் ரோந்து கப்பல் அந்த பகுதிக்கு அனுப்பி வைக்கப்படுமாம்.
தூத்துக்குடியில் சிறைப் பிடிக்கப்பட்டுள்ள சீமேன் கார்டு ஓகியோ கப்பல் இந்திய பெருங்கடல் மற்றும் ஏதன் வளைகுடா பகுதியில் ரோந்து சுற்றி வருமாம். அவ்வாறு இந்திய பெருங்கடல் பகுதியில் ரோந்து சுற்றி வரும்போது எரிபொருள் தீர்ந்து போனதால், எரிபொருள் நிரப்புவதற்காக மன்னார் வளைகுடா பகுதிக்கு வந்ததாக விசாரணை நடத்திவரும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். நடுக்கடலில் எரிபொருள் தீர்ந்துவிட்டால் அருகில் உள்ள துறைமுகம் , கடலோர காவல் படை, கடற்படை ஆகியவற்றுக்குத் தகவல் தெரிவித்து எரிபொருள் ஏற்பாடு செய்வதுதான் விதிமுறை. ஆனால், இந்த கப்பலில் சட்டவிரோதமாக டீசல் பரிமாற்றம் நடைபெற்றிருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.
தூத்துக்குடியில் சகஜம்
கப்பல்களில் பொருள்கள் பரிமாற்றம் நடைபெறுவது தூத்துக்குடி பகுதியில் சகஜமாக நடைபெறும் ஒன்று. தூத்துக்குடி துறைமுகத்தில் எரிபொருள் நிரப்பும் வசதி கிடையாது. எனவே, தூத்துக்குடிக்கு வரும் சரக்கு கப்பல்களுக்கு டீசல் தேவைப்பட்டால் அதை படகுகளில் கொண்டு சென்று கப்பலுக்கு சப்ளை செய்வதற்கு என்றே சிலர் உள்ளனர். கப்பல்களுக்கு டீசல், காய்கறிகள் போன்றவற்றை கொடுத்துவிட்டு கப்பலில் உள்ள பொருள்களை பரிமாறிக் கொள்வது என்பது இந்த பகுதியில் அவ்வப்போது நடைபெறுகிறது. இதை அறிந்துதான் அந்த கப்பல் தூத்துக்குடி பகுதிக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. எரிபொருளுக்காக மட்டுமே அந்த கப்பல் தூத்துக்குடிக்கு வந்துள்ளது. வேறு எந்த உள்நோக்கமும் இருப்ப தாகத் தெரியவில்லை என மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.
கப்பலின் வேலை என்ன
அட்வன் போர்ட் என்ற நிறுவனம் உலகளவில் உள்ள பெரிய தனியார் பாதுகாப்பு கப்பல் நிறுவனமாகும். இந்நிறுவனத்திடம் சில பாதுகாப்பு கப்பல்கள் உள்ளன. இந்நிறுவன கப்பல்களில் பயிற்சி பெற்ற பாதுகாவலர்கள் இருப்பர். இவர்கள்பெரும்பாலும் அமெரிக்க மற்றும் இங்கிலாந்து ராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்களாகவே உள்ளனர். மேலும், இவர்களிடம் அதிநவீன துப்பாக்கிகள் இருக்கும்.
சரக்கு கப்பல், எண்ணெய் கப்பல் போன்ற பல்வேறு கப்பல்களுக்கு அட்வன் போர்டு நிறுவன கப்பல்கள் பாதுகாப்பாக செல்லும். கடல் கொள்ளையர்கள் சரக்குக் கப்பலை வழிமறித்தால், அவர்களை துப்பாக்கியால் சுட்டு விரட்டியடித்து கப்பலை பாதுகாப்பாக கொண்டு சேர்ப்பதுதான் இந்த கப்பலின் வேலை. சோமாலியா கடல் பகுதி, ஏமன் வளைகுடா பகுதிகளில் இதுபோன்று பல கப்பல்களை கடல் கொள்ளையர்களிடம் இருந்து காப்பாற்றியிருப்பதாக அந்நிறுவனத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT