Last Updated : 28 Oct, 2014 09:35 AM

 

Published : 28 Oct 2014 09:35 AM
Last Updated : 28 Oct 2014 09:35 AM

முக்கிய வழக்குகளை விசாரிக்கும் சிபிஐக்கு தேவையான கட்டமைப்பு வசதி: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

முக்கிய வழக்குகளை விசாரிக்கும் சிபிஐ போலீஸாருக்கு அலுவலகம் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை யும், வாகனம் உள்ளிட்ட தளவாட வசதிகளையும் தமிழக அரசு செய்து கொடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மதுரை சின்னசொக்கி குளத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ஜமால் முகம்மது, கடந்த செப். 2-ம் தேதி கொடைக்கானலுக்கு கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை தொடர்பாக, முன்னாள் திமுக அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகள் இந்திரா உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், ஜமால் முகம்மது கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி, அவரது மனைவி ஜெய்னாபீவி உட்பட 8 பேர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றி, கடந்த அக். 20-ம் தேதி உத்தரவிட்டார். மேலும், தமிழகம் முழுவதும் மாவட்டவாரியாக, கடந்த 10 ஆண்டுகளாக ரியல் எஸ்டேட் பிரச்சினையில் நடந்த குற்றங்கள், கடத்தல்கள், கொலை போன்ற விவரங்கள் மற்றும் கட்டப் பஞ்சாயத்து, ரவுடிகள் மூலம் எவ்வளவு நில ஆக்கிரமிப்புச் சம்பவங்கள் நடந்துள்ளன? அரசு நிலங்கள் அதிகாரிகளின் துணையுடன் ஆக்கிரமிக்கப்பட் டுள்ளதா என்பது குறித்து அக். 27-ல் பதில் மனு தாக்கல் செய்ய தமிழக காவல்துறை இயக்குநருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி என்.கிருபாகரன் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது டிஜிபி தரப்பில் தென்மண்டல ஐ.ஜி. பதில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கடந்த 10 ஆண்டுகளாக ரியல் எஸ்டேட் பிரச்சினையில் எந்தக் கொலையும் நடைபெறவில்லை எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இது தவிர, கடத்தல் வழக்குகளின் பட்டியல் தனியாக குறிப்பிடப்பட்டிருந்தது.

நீதிபதி அதிர்ச்சி

திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ரியல் எஸ்டேட் பிரச்சினையில் கொலைகள் நடை பெறவில்லை எனக் குறிப்பிடப் பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி யடைந்த நீதிபதி, சமீபத்தில் ரியல் எஸ்டேட் மோதலில் அமைச்சர் ஒருவரின் உறவினர் கொலை செய்யப்பட்ட செய்தி ஊடகங்களில் வந்ததை சுட்டிக்காட்டினார். பின்னர், ஐ.ஜி.யின் பதில் மனுவை நிராகரித்த நீதிபதி, இந்த வழக்கில் நீதிமன்றம் ஏற்கெனவே கேட்டிருந்த அனைத்து கேள்விகளுக்கும் உரிய பதில்களுடன் புதிய அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக காவல்துறை இயக்குநருக்கு உத்தரவிட்டார்.

முன்னதாக, ஜமால்முகம்மது கொலை வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டதாக அரசு வழக்கறிஞர் ஏ.பி.பாலசுப்பிரமணியன் கூறினார். சிபிஐ தரப்பில் ஆஜரான உதவி சொலிசிட்டர் ஜெனரல் ஜி.ஆர். சுவாமிநாதன் வாதிடும்போது, ஜமால்முகம்மது கொலை வழக்கின் ஆவணங்களை போலீஸார் சிபிஐ வசம் வழங்கிவிட்டனர். ஆனால், மதுரையில் சிபிஐ-க்கு தனி அலுவலகம் கிடையாது. கட்டமைப்பு வசதிகளும் இல்லை என்றார். இதையடுத்து, கொலை உள்ளிட்ட முக்கிய வழக்குகளை விசாரிக்கும் சிபிஐ போலீஸாருக்கு அலுவலகம் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளும், வாகனம் உள்ளிட்ட தளவாட வசதிகளையும் தமிழக அரசு செய்து கொடுக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். பின்னர், விசாரணை அக். 30-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x