Published : 18 Feb 2015 05:13 PM
Last Updated : 18 Feb 2015 05:13 PM

சட்டம் - ஒழுங்கு பிரச்சினையின்றி அமைதிப் பூங்காவாக திகழ்கிறது தமிழகம்: முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

கடந்த 44 மாதங்களாக மக்களைப் பாதிக்கும் சட்டம் - ஒழுங்குப் பிரச்சினைகள் ஏதுமின்றி தமிழகம் தொடர்ந்து அமைதிப் பூங்காவாக திகழ்கிறது என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

மேலும், முந்தைய திமுக ஆட்சியைக் காட்டிலும் தற்போதைய ஆட்சியில் குற்றங்கள் வெகுவாக குறைந்திருப்பதாக அவர் சில புள்ளிவிவரங்களை வெளியிட்டார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று (புதன்கிழமை) சட்டம் - ஒழுங்கு தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்து முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியது:

"சட்டம் - ஒழுங்கை பற்றி சில ஐயப்பாடுகள் எழுப்பப்பட்டன. இந்தப் பிரச்சினையை இங்கே திரித்துக் கூறுகின்றார்கள். சில விளக்கங்களை நான் இங்கே கூறுவதற்கு கடமைப்பட்டிருக்கிறேன்.

காவல் துறையினர் அரசின் அறிவுரைகளின்படி, மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கை சீரிய முறையில் தொடர்ந்து பராமரித்து வருவதுடன், குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

கடந்த 2005 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியின் இறுதியில் நடந்த கொலைகளின் எண்ணிக்கை 1,366 ஆக இருந்தது. ஆனால், கடந்த 2010-ல் கடந்த திமுக ஆட்சியின் இறுதியில் அது 1,715 ஆக உயர்ந்திருந்தது. இதேபோல், ஆதாயக் கொலைகள் 74-ல் இருந்து 153 ஆக உயர்ந்தது.

அதிமுக ஆட்சியின் இறுதியில் 2005-ல் கூட்டுக் கொள்ளைகள் 73 ஆக இருந்து, திமுக ஆட்சியின் இறுதியில் 2010-ல் 85 ஆகவும், கொள்ளைகள் 437-ல் இருந்து 1,817 ஆகவும் மற்றும் கன்னக்களவுகள் 3,738-ல் இருந்து 4,715 ஆகவும் உயர்ந்துள்ளன. ஐந்தாண்டு மைனாரிட்டி திமுக ஆட்சியில் கொலை வழக்குகள் 25.5 சதவிகிதமும், ஆதாயக் கொலை 106.8 சதவிகிதமும், கூட்டுக் கொள்ளை 16.4 சதவிகிதமும், கொள்ளைகள் 315.8 சதவிகிதமும், கன்னக்களவு 26 சதவிகிதமும் அதிகரித்துள்ளதை காணலாம். அதாவது, கொலைகள் ஆண்டொன்றுக்கு சராசரியாக 5.1 சதவிகிதம் கூடியுள்ளன. ஆதாயக் கொலைகள் சராசரியாக 21.4 சதவிகிதம் கூடியுள்ளன. கூட்டுக் கொள்ளைகள் சராசரியாக 3.3 சதவிகிதம் கூடியுள்ளன. கொள்ளைகள் சராசரியாக 63.2 சதவிகிதம் கூடியுள்ளன. கன்னக்களவு வழக்குகள் ஆண்டொன்றுக்கு சராசரியாக 5.2 சதவிகிதம் கூடியுள்ளன.

திமுக ஆட்சியில் கொலைகளின் எண்ணிக்கை ஆண்டொன்றுக்கு 5.1 சதவிகிதம் கூடியுள்ளன. ஆனால், ஜெயலலிதா ஆட்சி பொறுப்பேற்ற 2011 ஆம் ஆண்டு முதல் 1,747 கொலைகளும், 2012 ஆம் ஆண்டு 1,806 கொலைகளும், 2013 ஆம் ஆண்டு 1,806 கொலைகளும் நடந்துள்ளன. ஆனால், கடந்த 2014 ஆம் ஆண்டு 1,678 கொலைகள் நடந்துள்ளன. கடந்த திமுக ஆட்சியின் இறுதியில் 2010 ஆம் ஆண்டு தாக்கலான 1,715 கொலை வழக்குகளுடன் 2014 ஆம் ஆண்டு தாக்கலான கொலை வழக்குகளை ஒப்பிடுகையில், கொலைகளின் எண்ணிக்கை 2014-ல் 2.1 சதவிகிதம் குறைந்துள்ளது.

திமுக ஆட்சியின்போது ஒவ்வொரு ஆண்டும் 5.1 சதவிகிதம் கூடிவந்த கொலை வழக்குகள், இந்நான்கு ஆண்டுகளில் சராசரியாக 0.5 சதவிகிதம் குறைந்து வந்துள்ளது சுட்டிக்காட்டப்பட வேண்டிய ஒன்றாகும். கொலைகளிலேயே மிகவும் கொடியவை ஆதாயக் கொலைகளாகும். இவற்றின் எண்ணிக்கை 2010 ஆம் ஆண்டு 153 ஆக இருந்தது. 2011-ல் ஆதாயக் கொலைகள் 123 ஆகவும், 2012-ல் 137 ஆகவும் இருந்து, 2013-ல் 121 ஆகக் குறைந்துள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு ஆதாயக் கொலைகள் 127 ஆக நடந்துள்ளன. கடந்த 2010 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2014 ஆம் ஆண்டு ஆதாயக் கொலைகள் 17 சதவிகிதம் குறைந்துள்ளது. இவ்வழக்குகளின் சதவிகிதம் இந்நான்கு ஆண்டுகளில் ஆண்டொன்றுக்கு 4.3 சதவிகிதம் குறைந்துள்ளது என்பதை நான் இங்கு சுட்டிக்காட்டகடமைப்பட்டிருக்கின்றேன்.

ஆனால், இதற்கு நேர்மாறாக, திமுக ஆட்சியின்போது ஆண்டிற்கு சராசரியாக 21.4 சதவிகிதம் ஆதாயக் கொலைகள் கூடியுள்ளதைக் காணலாம். கூட்டுக் கொள்ளை வழக்குகள் 2011 ஆம் ஆண்டு 101 வழக்குகள் தாக்கலாகியுள்ளன. ஆனால், 2012 ஆம் ஆண்டு 97 கூட்டுக் கொள்ளை வழக்குகளும், 2013 ஆம் ஆண்டு 83 கூட்டுக் கொள்ளை வழக்குகள் மட்டுமே தாக்கலாகியுள்ளன. கடந்த 2014 ஆம் ஆண்டு கூட்டுக் கொள்ளை வழக்குகள் 101 தாக்கலாகியுள்ளன. இவ்வழக்குகள் 2011 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, 2014 ஆம் ஆண்டில் தாக்கலான வழக்குகளின் சதவிகிதத்தில் மாற்றம் ஏதுமில்லை. அதாவது இவ்வழக்குகளின் எண்ணிக்கை அதிகரிக்காமல் அதே அளவில் இருந்து வருகிறது. ஆனால், திமுக ஆட்சியில் கூட்டுக் கொள்ளை வழக்குகள் சராசரியாக 3.3 சதவிகிதம் ஒவ்வொரு வருடமும் அதிகரித்து வந்துள்ளன.

கொள்ளை வழக்குகள் 2011 ஆம் ஆண்டு 2,066 வழக்குகள் தாக்கலாகியுள்ளன. ஆனால், 2012 ஆம் ஆண்டு 1,898 கொள்ளை வழக்குகள் மட்டுமே தாக்கலாகியுள்ளன. கடந்த 2013 ஆம் ஆண்டு 2,186 கொள்ளை வழக்குகள் தாக்கலாகியுள்ளன. கடந்த 2014 ஆம் ஆண்டு கொள்ளை வழக்குகள் 1,969 தாக்கலாகியுள்ளன. இவ்வழக்குகள் 2011 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2014 ஆம் ஆண்டு 4.7 சதவிகிதம் குறைந்துள்ளது. இம்மூன்றாண்டுகளில் சராசரியாக அதாவது ஆண்டிற்கு 1.6 சதவீதம் குறைந்து வந்துள்ளது. ஆனால், திமுக ஆட்சியில் கொள்ளை வழக்குகள் சராசரியாக 63.2 சதவிகிதம் ஒவ்வொரு வருடமும் அதிகரித்து வந்துள்ளன.

கன்னக்களவு வழக்குகள் 2011 ஆம் ஆண்டு 4,848 வழக்குகள் தாக்கலாகியுள்ளன. ஆனால், 2012 ஆம் ஆண்டு 4,457 கன்னக்களவு வழக்குகள் தாக்கலாகியுள்ளன. கடந்த 2013 ஆம் ஆண்டு 5,125 கன்னக்களவு வழக்குகள் தாக்கலாகியுள்ளன. கடந்த 2014 ஆம் ஆண்டு கன்னக்களவு வழக்குகள் 5,266 தாக்கலாகியுள்ளன. இவ்வழக்குகள் 2011 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2014-ல் 8.6 சதவிகிதம் அதிகரித்துள்ளது. அதாவது ஆண்டிற்கு 2.9 சதவிகிதம் மட்டுமே அதிகரித்துள்ளது.

ஆனால், திமுக ஆட்சியில் கன்னக்களவு வழக்குகள் சராசரியாக 5.2 சதவிகிதம் ஒவ்வொரு வருடமும் அதிகரித்து வந்துள்ளன. களவு வழக்குகள் 2010 ஆம் ஆண்டு 14,583 வழக்குகள் தாக்கலாகி இருந்தன. 2011 ஆம் ஆண்டு 13,924 வழக்குகளும் மற்றும் 2012 ஆம் ஆண்டு 11,996 வழக்குகளும் தாக்கலாகியுள்ளன. கடந்த 2013 ஆம் ஆண்டு 11,950 களவு வழக்குகளாக குறைந்துள்ளன.

கடந்த 2014 ஆம் ஆண்டு களவு வழக்குகள் 11,969 தாக்கலாகியுள்ளன. 2010 ஆம் ஆண்டு வழக்குகளை, 2013 ஆம் ஆண்டு தாக்கலான வழக்குகளோடு ஒப்பிடுகையில் 17.9 சதவிகிதம் குறைந்துள்ளன. இது ஆண்டிற்கு 4.5 சதவிகிதம் குறைந்து வருவதைக் காட்டுகிறது.

2010 ஆம் ஆண்டு கொலை வழக்குகள் உட்பட சொத்து சம்பந்தமாக 23,068 வழக்குகள் தாக்கலாகியுள்ளன. இது 2011 ஆம் ஆண்டில் 22,809 வழக்குகளாக குறைந்தும், 2012 ஆம் ஆண்டு 20,391 வழக்குகளாக மேலும் குறைந்துள்ளன.

கடந்த 2013 ஆம் ஆண்டு சொத்து சம்பந்தமாக 21,271 வழக்குகள் தாக்கலாகியுள்ளன. கடந்த 2014 ஆம் ஆண்டு சொத்து சம்பந்தமாக 21,110 வழக்குகள் தாக்கலாகியுள்ளன. திமுக ஆட்சியில் 2010 ஆம் ஆண்டு தாக்கலான மொத்த சொத்து வழக்குகளை 2014 ஆம் ஆண்டு தாக்கலான வழக்குகளோடு ஒப்பிடும்போது 1,958 வழக்குகள் குறைந்துள்ளன. இதிலிருந்து காவல் துறையினர் எடுத்து வரும் குற்றத்தடுப்பு நடவடிக்கைகளினால், கொலை மற்றும் சொத்து சம்பந்தமான ஒட்டுமொத்தக் குற்றங்கள் குறைந்து வருகின்றன என்பது தெளிவாகிறது.

தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்கையின்படி, நமது மாநிலத்தில் 2012 ஆம் ஆண்டு தாக்கலான குற்றங்களை மற்ற மாநிலங்களில் தாக்கலான குற்றங்களுடன் ஒப்பிடுகையில், தமிழ்நாட்டில் தாக்கலான குற்றங்களின் எண்ணிக்கை குறைந்தே காணப்படுகின்றன. உதாரணத்திற்கு, 2012 ஆம் ஆண்டு கொலை வழக்குகள் உத்தரப் பிரதேசத்தில் 4,966-ம், பிஹாரில் 3,566-ம், ஆந்திராவில் 2,717-ம், மகாராஷ்டிராவில் 2,712-ம், மத்திய பிரதேசத்தில் 2,373-ம் மற்றும் மேற்கு வங்கத்தில் 2,252-ம் தாக்கலாகியுள்ளன.

இதேபோன்று, 2013 ஆம் ஆண்டு உத்தரப் பிரதேச மாநிலத்தில் 5,047-ம், பீகாரில் 3,441-ம் ஆந்திராவில் 2,484-ம், மகாராஷ்டிராவில் 2,512-ம், மத்திய பிரதேசத்தில் 2,112-ம் மற்றும் மேற்கு வங்கத்தில் 2,264-ம் தாக்கலாகியுள்ளன. ஆனால், இவற்றுடன் ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் கொலை வழக்குகள் எண்ணிக்கை 2000-க்கும் குறைவாகவே உள்ளது.

பொதுவாக, குற்ற நிகழ்வுகளை ஒப்பிடும்போது, குற்றவிகிதம் என்ற எண்ணிக்கை பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு எத்தனை குற்றங்கள் நடந்துள்ளன என்பதன் குறியீடு ஆகும். கடந்த 2013 ஆம் ஆண்டு நடந்த சொத்து சம்பந்தமான குற்றங்களின் மாநில குற்ற விகிதம் 28.4 ஆகும். இது தேசிய சராசரியான 39.8 சதவிகிதத்துடன் ஒப்பிடும்போது 11.4 புள்ளிகள் குறைவாக உள்ளது.

ஆனால், இக்குற்ற விகிதம் ஹரியானாவில் 97.6 ஆகவும், மகாராஷ்டிராவில் 70.4 ஆகவும், ராஜஸ்தானில் 51.1 ஆகவும், மத்திய பிரதேசத்தில் 51 ஆகவும், அசாமில் 50.8 ஆகவும், ஆந்திரப் பிரதேசத்தில் 48.2 ஆகவும், கர்நாடகாவில் 47.2 ஆகவும், ஒடிசாவில் 38.6 ஆகவும், குஜராத்தில் 36.2 ஆகவும் உள்ளது. இதிலிருந்து 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டில் மாநிலத்தில் சொத்து சம்பந்தமாக தாக்கலாகும் வழக்குகளின் குற்ற சதவிகிதம் தேசிய குற்ற சதவிகிதத்தைவிட தொடர்ந்து குறைவாக இருந்து வருவதும், மற்ற மாநிலங்களின் குற்ற சதவிகிதத்தை ஒப்பிடும்போது, நம் மாநிலத்தில் இச்சதவிகிதம் குறைவாக இருந்து வருவதும் தெளிவாக தெரிய வருகிறது.

காவல் துறையினர், குற்ற வழக்குகளில் திறமையாக புலன் விசாரணை செய்து பல முக்கிய கொலை, கொள்ளை வழக்குகளில் எதிரிகளைக் கைது செய்து, களவு போன பொருட்களை மீட்டு வருவதுடன், தொடர்ந்து குற்றம் செய்யும் குற்றவாளிகளை தடுப்புக் காவலில் வைத்திடவும் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

பல்வேறு தடுப்புக் காவல் சட்டங்களின்கீழ் 2010 ஆம் ஆண்டு திமுக ஆட்சியின் போது 2,073 நபர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர். இவ்வாட்சிக் காலத்தில், கடந்த 2012 ஆம் ஆண்டு 2,158 நபர்களும், 2013 ஆம் ஆண்டு 3,433 நபர்களும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர். கடந்த 2014 ஆம் ஆண்டு 3,757 நபர்கள் இச்சட்டங்களின்கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சென்ற 2013 ஆம் ஆண்டு களவு போன 146.59 கோடி மதிப்பிலான சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன. கடந்த 2014 ஆம் ஆண்டு களவு போன ரூ.98.04 கோடி மதிப்பிலான சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன. தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் 2013 ஆம் ஆண்டிற்கான புள்ளிவிவரத்தின்படி களவு போன சொத்துக்களை மீட்டதில் 2013 ஆம் ஆண்டு தமிழகம் இந்திய அளவில் முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

இதிலிருந்து காவல் துறையினர் சொத்து சம்பந்தமான வழக்குகளில் குற்றவாளிகளைக் கைது செய்து, களவு போன சொத்துக்களை மீட்பதுடன், குற்றவாளிகள் மீண்டும் பிணையில் வெளிவந்து குற்றங்களில் ஈடுபடுவதைத் தடுக்கும் வகையிலும், குற்றத் தடுப்பு நடவடிக்கைகளை கடந்த ஆட்சிக் காலத்தில் இருந்ததைவிட ஜெயலலிதாவின் நல்லாட்சியில் சிறப்பாக மேற்கொண்டு வருகிறார்கள் என்பது இங்கே தெரிய வருகிறது.

குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மற்றும் சட்டம் - ஒழுங்குப் பிரச்சினைகள் குறித்து மாநில உளவுத் துறையினர் முன்கூட்டியே அளிக்கும் தகவல்களின் அடிப்படையில், மாவட்ட காவல் துறையினர் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை கைது செய்து வருவதுடன், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் மக்கள் தொகை அதிகரிப்பு, வளர்ந்து வரும் பொருளாதாரம், தகவல் தொழில்நுட்ப முன்னேற்றம், மாறி வரும் சமுதாய சூழ்நிலை மற்றும் நகரமயமாக்குதல் போன்றவற்றால் குற்ற நிகழ்வுகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்பது புள்ளிவிவரங்கள் கூறும் மறுக்க முடியாத உண்மையாகும். ஆனால், இதற்கு மாறாக, நமது மாநிலத்தைப் பொறுத்தவரை காவல் துறையினர் குற்றவாளிகள்மீது எடுத்துவரும் கடும் நடவடிக்கைகளினால், குற்ற நிகழ்வுகள் குறைந்து வந்துள்ளன என்பதை மேற்குறிப்பிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

சிறப்பான சட்டம் - ஒழுங்கு பராமரிப்பு என்பது மாநிலத்தில் சட்டத்தின் ஆட்சி எவ்வாறு நடைபெறுகிறது என்பதைப் பொறுத்தும், பொதுமக்களிடையே தனி மனித பாதுகாப்பு மற்றும் தங்களது சொத்துக்கள் மற்றும் உடைமைகளுக்கும் பாதுகாப்பு எவ்வாறு உள்ளது என்பதைப் பொறுத்தும் மற்றும் சட்டத்தை அமல்படுத்தும் காவல் துறையினரின் சுதந்திரமான செயல்பாட்டைப் பொறுத்தும் மட்டுமே அமையும்.

நம்முடைய அரசு அவ்வப்போது அளித்துவரும் அறிவுரைகளின்பேரிலும், ஊக்கத்தின்பேரிலும், காவல் துறையினர் சிறப்பாகச் செயல்பட்டு, மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கைப் பராமரித்து வருவதோடு, குற்றத் தடுப்பு மற்றும் குற்றங்களைக் கண்டுபிடித்தல் போன்றவற்றிலும் முழு ஈடுபாட்டுன் செயல்பட்டு வருகின்றனர். கடந்த 44 மாதங்களாக மக்களைப் பாதிக்கும் சட்டம் - ஒழுங்குப் பிரச்சினைகள் ஏதுமின்றி மாநிலம் தொடர்ந்து அமைதிப் பூங்கா மாநிலமாக நிலவி வருகிறது என்பதை இங்கே தெரிவித்துக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கின்றேன்" என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x