Last Updated : 03 Mar, 2017 08:23 AM

 

Published : 03 Mar 2017 08:23 AM
Last Updated : 03 Mar 2017 08:23 AM

சென்னை குடிநீருக்காக நெய்வேலி சுரங்கத்தில் இருந்து தண்ணீர் எடுக்கும் அளவு கணிசமாக அதிகரிப்பு

நெய்வேலி நிலக்கரிச் சுரங்கத்தில் இருந்து சென்னையின் குடிநீர் தேவைக்காக எடுக்கப்படும் நீரின் அளவு 70 மில்லியன் லிட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது.

சென்னையின் குடிநீர் தேவை யைப் பூர்த்தி செய்ய பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம், வீராணம் ஆகிய 5 ஏரிகள், கடல் நீரைக் குடிநீராக்கும் 2 யூனிட்கள், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள விவசாயக் கிணறுகள் ஆகியவற் றில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், சென்னை மாநகர மக்களின் தினசரி தேவைக்கு சற்றுக் குறைவாகவே குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.

இந்நிலையில், நெய்வேலி பழுப்பு நிலக்கரிச் சுரங்கத்தில் தேங்கும் தண்ணீரை அப்பகுதி விவசாயத்துக்குப் போக மீதமுள்ள உபரிநீரை சுத்திகரித்து சென்னை குடிநீர் தேவைக்குப் பயன்படுத்தத் திட்டமிடப்பட்டது. அதன்படி, நெய்வேலியில் சுமார் 600 ஏக்கரில் 2 யூனிட்களாக அமைந்துள்ள சுரங்கத்தில் நீர் ஊற்று மூலம் தேங்கும் தண்ணீர் சுரங்கப் பணிகளுக்காக அவ்வப்போது வெளியேற்றப்படுகிறது.

அவ்வாறு வெளியேற்றப்படும் தண்ணீர் அதனருகே உள்ள வாலாஜா ஏரி, பெருமாள் ஏரி ஆகிய ஏரிகளுக்கு அனுப்பப்படுகிறது. அதனால் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. விவசாயத்துக்குப் போக மீதமுள்ள உபரிநீர் கடந்த ஒரு மாதமாக சென்னை குடிநீர் தேவைக்காக எடுக்கப்பட்டு வருகிறது. அங்கு எடுக்கப்படும் தண்ணீர் வடக்குத்து கிராமத்தில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்டு வீராணம் தண் ணீர் எடுத்து வரப்படும் குழாய் வழியாக சென்னைக்குக் கொண்டு வரப்படுகிறது.

தொடக்கத்தில் நெய்வேலியில் விநாடிக்கு 20 கனஅடி வீதம் தினமும் 40 மில்லியன் லிட்டர் தண்ணீர் நெய்வேலியில் இருந்து எடுக்கப்பட்டு சுத்திகரித்து சென்னைக்கு அனுப்பப்பட்டது. இப்போது இதன் அளவு தினமும் 70 மில்லியன் லிட்டர் என்ற அளவுக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவர் கூறும் போது, “சென்னை குடிநீர் தேவை யைக் கருத்தில் கொண்டு நெய் வேலி பழுப்பு நிலக்கரிச் சுரங்கத் தில் இருந்து சென்னைக்கு எடுக் கப்படும் தண்ணீரின் அளவு கணிச மாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 10 நாட்களுக்கு முன்பு சராசரியாக தினமும் 40 மில்லியன் லிட்டர் எடுக்கப்பட்டது. இப்போது தினமும் 70 மில்லியன் லிட்டர் எடுக்கப் படுகிறது.

கிருஷ்ணா நதி நீர், கடல்நீரைக் குடிநீராக்கும் யூனிட்கள், விவசாயக் கிணறுகள் ஆகியவற்றின் மூலம் கிடைக்கும் தண்ணீர் சென்னையின் அடுத்த 3 மாதங்களின் தேவையைப் பூர்த்திசெய்வதாக இருக்கிறது. இப்போது நெய்வேலியில் இருந்து கூடுதலாக தண்ணீர் எடுக்கப்படுவ தால் சென்னையில் குடிநீர் தட்டுப் பாடு ஏற்படாமல் நிலைமையைச் சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x