Published : 29 Jan 2014 09:13 PM
Last Updated : 29 Jan 2014 09:13 PM
கோடை காலம் தொடங்கும் முன்பே, தூத்துக்குடியில் குடிநீர் பிரச்சினை தலை தூக்கத் தொடங்கியுள்ளது. மாநகராட்சி நிர்வாகம், போர்க் கால அடிப்படையில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்களின் முற்றுகை, சாலை மறியல் போராட்டங்களைத் தொடர்ந்து தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் குடிநீர் விநியோகத்தை சீராக்க, மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர், எம்.எல்.ஏ. ஆகியோர் செவ்வாய்க்கிழமை கூட்டாக ஆய்வு மேற்கொண்டனர்.
குடிநீர் பிரச்சினை
தூத்துக்குடி மாநகராட்சியில் 60 வார்டுகளில், 4 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். இம்மாநகராட்சிக்கு தேவையான குடிநீர், வல்லநாடு அருகே தாமிரவருணி ஆற்றில் எடுக்கப்படு கிறது. வல்லநாடு நீரேற்று நிலையத்தில், குடிநீர் பம்ப் செய்யப்பட்டு, குழாய் மூலம் ராஜாஜி பூங்கா கொண்டு வரப்படுகிறது. அங்கிருந்து நகரில் உள்ள 8 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.
5 நாளுக்கு ஒரு முறை
தினமும் 21 மில்லியன் லிட்டர் தண்ணீர் சப்ளை செய்யப்படு வதாக, மாநகராட்சி தெரிவிக்கிறது. ஆனால், மாநகராட்சி பகுதியில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. பெரும்பாலான பகுதிகளில், 5 முதல் 7 நாட்களுக்கு ஒருமுறை தான் குடிநீர்
விநியோகிக்கப்படுகிறது. குறிப்பாக மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட 5 ஊராட்சி பகுதிகளில், குடிநீர் தட்டுப்பாடு கடுமையாக உள்ளது.
மக்கள் போராட்டம்
குடிநீர் பிரச்சினையைத் தீர்க்க வலியுறுத்தி, ஆங்காங்கே மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் உச்சக்கட்டம் தான் 3-வது வார்டு மக்கள் திங்கள்கிழமை நடத்திய போராட்டம்.
தூத்துக்குடி மாநகராட்சியின் 3-வது வார்டுக்கு உட்பட்ட ராஜகோபால் நகர், ஹவுசிங் போர்டு காலனி, பால்பாண்டி நகர், பாரதி நகர், அன்னை தெரசா நகர், நிகிலேசன் நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு, ஒன்றரை மாதமாக குடிநீர் விநியோகம் செய்யவில்லை எனக் கூறி, அப்பகுதி மக்கள் திங்கள்கிழமை காலிக் குடங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது அங்கு வந்த தூத்துக்குடி எம்.எல்.ஏ., சி.த.செல்லப்பாண்டியனை முற்றுகையிட்டனர்.
பொதுமக்களை, மாநகராட்சி அலுவலகத்துக்கு வரும்படி எம்.எல்.ஏ. கேட்டுக் கொண்டார். அங்கு, எம்.எல்.ஏ. மற்றும் மாநகராட்சி ஆணையர் சோ.மதுமதி முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
சுமூக தீர்வு ஏற்படாததை தொடர்ந்து, பொதுமக்கள் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டதுடன், சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். மக்களின் போராட்டம் மாலை வரை நீடித்தது.
ஆட்சியர் ஆய்வு
இதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் ம. ரவிக்குமார், மாநகராட்சி ஆணையர் சோ.மதுமதி, எம்.எல்.ஏ., சி.த. செல்லப்பாண்டியன் ஆகியோர் மாநகராட்சி பொதுப்பணித்துறை மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனர்.
மில்லர்புரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, ராஜகோபால் நகர், சின்னக்கண்ணுபுரம், நிகிலேசன் நகர் பகுதிகளுக்கு சென்று, அங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை பார்வையிட்டனர். அப்பகுதி மக்களை சந்தித்து, குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். கோரம்பள்ளம் குளத்துக்குச் சென்று, நீர் இருப்பு நிலவரம், அங்கு அமைக்கப்பட்டுள்ள கிணறுகளை ஆய்வு செய்தனர்.
அதிகாரிகள் விளக்கம்
மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘மழை சரியாக பெய்யாததால் தாமிரவருணி ஆற்றில் தண்ணீர் குறைந்துள்ளது. உறைகிணறுகளுக்கு வரும் நீரின் அளவும் குறைந்துள்ளது. இருப்பினும் மக்களுக்கு தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
குடிநீர் குழாய்களில் ஏற்பட்டுள்ள கசிவுகளை சரி செய்யவும், வி.எம்.எஸ். நகர், ஹவுசிங் போர்டு பகுதிகளில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை சரி செய்யவும் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இந்த பணிகள் புதன்கிழமை நடைபெறுகிறது.
மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. 3-வது வார்டு பகுதிக்கும் தினமும் 4 லாரி தண்ணீர் வழங்கப்படுகிறது. 4-வது பைப்லைன் திட்டப் பணிகள் நிறைவடையும் போது தூத்துக்குடி மாநகராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு இருக்காது’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT