Published : 20 Mar 2014 12:00 AM
Last Updated : 20 Mar 2014 12:00 AM

தகுதித் தேர்வு மூலம் நிரப்பப்படும் 16 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள்: பாடப்பிரிவு, இடஒதுக்கீடு வாரியாக பட்டியல் வெளியிட முடிவு

தகுதித்தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ள 16 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் பாடப்பிரிவு, இடஒதுக்கீடு, தமிழ்வழி ஒதுக்கீடு வாரியாக வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தகுதித் தேர்வில் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் என சுமார் 72 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தகுதித்தேர்வு மூலம் 2 ஆயிரம் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களும், 14 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் இடங்களும் நிரப்பப்பட உள்ளன.

பட்டதாரி ஆசிரியர்களுக்கான 2-வது தாளில் மட்டும் 43 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. ஆனால், நிரப்பப்பட உள்ள காலியிடங்களோ 14 ஆயிரம் மட்டும்தான். 43 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தாலும் அவர்கள் எந்தெந்தப் பாடப்பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் என்பதும் இடஒதுக்கீடு நிலை குறித்த விவரமும் இன்னும் தெரியவில்லை.

யார், யார் தேர்ச்சி?

ஒட்டுமொத்தமாக பார்த்தால் 43 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தாலும், ஒரு சில பாடங்களில் அதிகம் பேர் இருந்தால் அங்கு குறிப்பிட்ட எண்ணிக்கையிலேயே வேலை கிடைக்கும். அதேநேரத்தில், ஒருசில பாடங்களில் காலியிடங்கள் அதிகமாக இருந்து, தேவையான எண்ணிக்கையில் ஆசிரியர்கள் வெற்றி பெற்றிருக்காவிட்டால் அங்கு காலியிடங்கள் ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது.

பட்டியல் வெளியீடு

இந்நிலையில், தகுதித்தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ள 16 ஆசிரியர் பணியிடங்களை அனைவரும் தெரிந்துகொள்ளும் வகையில் பாடப்பிரிவு, இடஒதுக்கீடு, தமிழ்வழி ஒதுக்கீடு, மாற்றுத் திறனாளிகளுக்கான ஒதுக்கீடு என பகுதி வாரியாக பட்டியலிட்டு வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது.

இந்தப் பட்டியல் வெளியான பிறகே, தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்களில் எந்தெந்த கட் ஆப் மதிப்பெண் பெற்றவர்களுக்கு, எந்தெந்த பாட ஆசிரியர்களுக்கு, எந்தெந்த இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வேலை கிடைக்கும் என்பது உறுதியாக தெரியவரும்.

2-வது தாளில் கூடுதலாக 28,000 பேர் தேர்ச்சி

இடைநிலை ஆசிரியர்களுக்கான முதல் தாளில் தேர்ச்சி பெற்ற 18 ஆயிரம் பேருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி கடந்த 12-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. சென்னை, மதுரை, திருச்சி, சேலம், கும்பகோணம் ஆகிய 5 மையங்களில் தினமும் 1,250 பேர் கலந்துகொள்கிறார்கள். 31-ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு பணி முடியும். விடுபட்டவர்களுக்கு ஏப்ரல் 1-ல் நடத்தப்படுகிறது.

இந்நிலையில், தகுதித்தேர்வின் 2-வது தாளில் (பட்டதாரி ஆசிரியர்களுக்கானது) 28 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு ஏப்ரல் முதல் வாரத்தில் தொடங்கி ஒரு மாதம் நடக்கும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x