Published : 18 Sep 2013 12:15 PM
Last Updated : 18 Sep 2013 12:15 PM
வடகிழக்கு பருவமழையின்போது சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் நிரம்பி வழியும். அப்போது வரும் கிருஷ்ணா நீர் முழுவதும் கடலில் வீணாக போய் கலக்கும். அதுபோன்ற காலங்களில் கிருஷ்ணா நதிநீரை தேக்கி வைத்து சென்னை மாநகர குடிநீர் தேவைக்கு பயன்படுத்துவதற்காக தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கம் கட்டப்படுகிறது.
சென்னை
நீரின்றி அமையாது உலகு. மனித வாழ்க்கைக்கு தண்ணீர் மிகவும் அவசியம். மக்கள்தொகை 80 லட்சமாக உள்ள சென்னை பெருநகரின் தண்ணீர் தேவை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே போகிறது.
அதனால்தான், சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே கண்ணன்கோட்டை மற்றும் தேர்வாய் கண்டிகை கிராமங்களில் உள்ள இரண்டு ஏரிகளை இணைத்து, தேர்வாய் கண்டிகை என்ற புதிய நீர்த்தேக்கம் உருவாக்கப்படுகிறது. ரூ.330 கோடி செலவில் அமைக்கப்படவுள்ள இந்த நீர்த்தேக்கத்திற்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டியுள்ளார்.
ஒரு டி.எம்.சி. தண்ணீர்
இந்த நீர்த்தேக்கத்தில் ஓர் ஆண்டுக்கு இருமுறை தண்ணீர் நிரப்புவதன் மூலம் ஒரு டி.எம்.சி. (ஆயிரம் மில்லியன் கனஅடி) தண்ணீரைத் தேக்கி வைக்க முடியும். இதனைக் கொண்டு சென்னை மாநகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்கப்படும்.
ஏற்கெனவே, சென்னை குடிநீர் தேவைக்காக பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகள் உள்ளன. இதில், பூண்டி நீர்த்தேக்கம்தான் சென்னை குடிநீருக்காக அமைக்கப்பட்ட முதல் நீர்த்தேக்கம் ஆகும். அதன்பிறகு புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய 3 ஏரிகள் சென்னை குடிநீர் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டன.
பூண்டி நீர்த்தேக்கம்
பூண்டி நீர்த்தேக்கம் கட்டுவதற்கு 1909-ம் ஆண்டே திட்டமிடப்பட்டது. ஆனால், தொடர்ந்து அதற்கான பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. இந்த நிலையில், 1937-ம் ஆண்டு சென்னையில் மட்டும், வடகிழக்கு பருவமழைக் காலமான அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் 152 சென்டிமீட்டர் மழை பெய்தது. வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் 110 முதல் 120 சென்டி மீ்ட்டர்தான் மழை பெய்யும். ஆனால், அடுத்த ஆண்டு அறவே மழை இல்லை. அதனால் அதற்கு அடுத்த ஆண்டு (1939) கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டது.
அந்தக் காலக்கட்டத்தில்தான், காமராஜரின் அரசியல் குருவான சத்தியமூர்த்தி சென்னை மாநகர மேயர் ஆனார். அப்போது சென்னை மாநகர இன்ஜினீயராக ஆனந்தராவ் என்பவர் இருந்தார்.
சத்தியமூர்த்தியின் விடா முயற்சி
சென்னை நகர மக்களின் குடிநீர் தேவைக்காக திருவள்ளூர் மாவட்டம், பூண்டி கிராமத்தில் நீர்த்தேக்கம் ஒன்று கட்ட வேண்டும் என்று திட்டமிட்டு அதற்கான அறிக்கையையும் தயாரித்தனர். அதனை ஆங்கிலேய அரசு விலாவாரியாக அலசி ஆராய்ந்தது. அந்தக் காலக்கட்டத்தில் 2-ம் உலகப் போர் நடந்து கொண்டிருந்தது.
அப்போது ஆங்கிலேய அரசாங்கத்துக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் நல்ல உறவு இல்லை. காங்கிரஸ் கட்சியில் ராஜாஜியும், சத்தியமூர்த்தியும் பிரதான தலைவர்களாக இருந்தனர். பூண்டி ஏரியை வெட்டுவது தொடர்பான விஷயத்தில் சத்தியமூர்த்தி சாமர்த்தியமாக காயை நகர்த்தி காரியம் சாதித்தார். அவரது திட்ட அறிக்கையை ஆங்கிலேய அரசாங்கம் ஏற்றுக் கொள்ளும்படி செய்தார்.
ரூ.61 லட்சத்தில் கட்டி முடிப்பு
1940-ம் ஆண்டு பூண்டி நீர்த்தேக்கம் கட்டுவதற்காக ரூ.61.07 லட்சம் ஒதுக்கப்பட்டது. இதில், 2 பங்கு தொகையை சென்னை மாநகராட்சிக்கு ஆங்கிலேய அரசாங்கம் கடனாகவும், ஒரு பங்கு தொகையை மானியமாகவும் கொடுத்தது.
1940-ம் ஆண்டு ஆகஸ்ட் 8-ந் தேதி சென்னை மாகாண கவர்னர் ஆதர் ஹோப், பூண்டி நீர்த்தேக்கத்துக்கு அடிக்கல் நாட்டினார். 2 ஆண்டுகளில் கட்டி முடிக்க திட்டமிட்டனர். ஆனால், இரண்டாம் உலகப் போர், மழை வெள்ளம் ஆகியவற்றால் தாமதம் ஏற்பட்டது. ஒருவழியாக 65 லட்சம் ரூபாயில் பூண்டி நீர்த்தேக்கத்தை கட்டி முடித்தனர். 1944-ம் ஆண்டு ஜூன் மாதம் பூண்டி நீர்த்தேக்கத்தை கவர்னர் ஆதர் ஹோப் திறந்து வைத்தார். அந்த நேரத்தில், பூண்டி நீர்த்தேக்கத்தைக் கொண்டு வருவதற்காக அரும்பாடுபட்ட சத்தியமூர்த்தி உயிருடன் இல்லை என்பதுதான் சோகம்.
காமராஜரின் பிடிவாதம்
பூண்டி நீர்த்தேக்கத்துக்கு சத்தியமூர்த்தி பெயர் வைக்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் விடுத்த கோரிக்கையை ஆங்கிலேய அரசாங்கம் ஏற்கவில்லை. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, பெருந்தலைவர் காமராஜரை சென்னை மாநகராட்சி கூட்டத்துக்கு அழைத்து கௌரவப்படுத்த விரும்பினார்கள். இதனை காமராஜரிடம் தெரிவித்தபோது, முதலில் மாநகராட்சிக் கூட்டத்தில், பூண்டி நீர்த்தேக்கத்துக்கு சத்தியமூர்த்தி பெயர் வைத்து தீர்மானம் நிறைவேற்றுங்கள் என்று சொல்லியிருக்கிறார்.
1948-ம் ஆண்டு நடந்த மாநகராட்சிக் கூட்டத்தில் அதற்கான தீர்மானம் நிறைவேறியது. சென்னை குடிநீருக்காகவே முதன்முதலில் கட்டப்பட்ட பூண்டி நீர்த்தேக்கத்துக்கு, சத்தியமூர்த்தி பெயர் சூட்டப்பட்டது.
சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்துக்குப் பிறகுதான் சோழவரம், புழல் ஏரிகள் சென்னை குடிநீர் தேவைக்காக மாற்றப்பட்டன. அதைத்தொடர்ந்து செம்பரம்பாக்கம் ஏரியும் குடிநீர் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இருந்தாலும், சென்னை குடிநீர் தேவைக்கான முக்கிய நீர் ஆதாரமாக பூண்டி நீர்த்தேக்கம் இன்றளவும் இருக்கிறது.
ஆந்திர மாநிலம், கண்டலேறு அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் முதலில் பூண்டி ஏரியைத்தான் வந்தடைகிறது. அதன்பிறகு அங்கிருந்து சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் கால்வாய் வழியாக அனுப்பப்படுகிறது.
குடிநீர் தேவைக்காக பிரத்யேகமாக தேர்வாய் கண்டிகை என்ற மற்றொரு நீர்த்தேக்கம் கட்டுவதற்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டியுள்ளார். பூண்டி நீர்த்தேக்கத்தின் மேல் பகுதியில் இந்த நீர்த்தேக்கம் கட்டப்படுகிறது.
தமிழ்நாடு, ஆந்திரா அரசுகள் ஏற்படுத்திக் கொண்டுள்ள ஒப்பந்தத்தின்படி, ஆந்திராவில் இருந்து ஆண்டுக்கு 12 டி.எம்.சி. தண்ணீ்ர் திறந்துவிடப்படுகிறது. வடகிழக்கு பருவமழையின்போது சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் நிரம்பி வழியும். அப்போது வரும் கிருஷ்ணா நீர் முழுவதும் கடலில் வீணாக போய் கலக்கும். அதுபோன்ற காலங்களில் கிருஷ்ணா நதிநீரை தேக்கி வைத்து சென்னை மாநகர குடிநீர் தேவைக்கு பயன்படுத்துவதற்காகவே தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கம் கட்டப்படுகிறது. அதன்படி, கிருஷ்ணா நதிநீர் முதன்முதலில் இந்த நீர்த்தேக்கத்தில் தேக்கி வைக்கப்படும். அதன்பிறகே பூண்டி ஏரியில் தேக்கப்படும் என்று பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT