Last Updated : 05 Sep, 2016 02:39 PM

 

Published : 05 Sep 2016 02:39 PM
Last Updated : 05 Sep 2016 02:39 PM

பெரியாறு அணையில் நீர்மட்டம் சரிவு: 20 ஆயிரம் ஏக்கர் பாசனம் கேள்விக்குறி?

பெரியாறு அணை நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால், பதினெட்டாம் கால்வாயில் இந்த ஆண்டு தண்ணீர் திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதோடு, 20 ஆயிரம் ஏக்கர் மானாவாரி சாகுபடி பாசனம் கேள்விக்குறியாகி உள்ளது.

முல்லைப் பெரியாறு அணை நீர் மூலம் கம்பம் பள்ளத்தாக்கில் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 65 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. இதற்கிடையில் கூடலூர், உத்தமபாளையம், போடி உள்ளிட்ட பகுதிகள் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் மேடான பகுதிகளில் அமைந்துள்ளதால், ஆற்றுப் பாசனம் இல்லாமல் போய்விட்டது. இதனால் அப்பகுதியில் 20 ஆயிரம் ஏக்கரில் நடைபெற்று வரும் மானாவாரி சாகுபடிக்கு மழையையே நம்பி உள்ளனர். பல ஆண்டுகளாக இப்பகுதியில் மழை இல்லாததால் கடந்த 2010-ம் ஆண்டு கூடலூர் அருகே லோயர்கேம்ப் தலைமை மதகில் இருந்து தேவாரம் அருகே டி.ரெங்கநாதபுரம் வரை கால்வாய் வெட்டி பதினெட்டாம் கால்வாய் திட்டம் தொடங்கப்பட்டது. (தற்போது போடி வரை நீட்டிப்பு செய்யப்பட்டு வருகிறது.) இந்த கால்வாய்க்கு பெரியாறு, வைகை ஆகிய இரு அணைகளில் நீர் இருப்பு 6260 மில்லியன் கனஅடியாகவோ அல்லது பெரியாறு அணையின் நீர்மட்டம் 126 அடியாகவோ இருந்தால் மட்டும் ஆண்டுதோறும் செப் 15-ம் தேதியில் இருந்து அக்டோபர் 31-ம் தேதிக்குள் விநாடிக்கு 279 கன அடி வீதம் 9 நாட்கள் 0.209 டி.எம்.சி. தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், நேற்றைய நிலவரப்படி பெரியாறு அணையின் நீர்மட்டம் 115.90 அடியாகவும், பெரியாறு, வைகையில் நீர் இருப்பு மொத்தம் 2,190 மில்லியன் கன அடியாகவும் இருந்தது. இதனால் இந்த ஆண்டு தண்ணீர் திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து ‘தி இந்து’விடம் பதினெட்டாம் கால்வாய் திட்ட விவசாய சங்கத் தலைவர் பி. ராமராஜ், செயலாளர் ஏ.திருப்பதிவாசகன் ஆகியோர் கூறியதாவது: கேரளாவில் தென்மேற்குப் பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை, இதனால் பெரியாறு அணைக்கு நீர்வரத்து குறைந்து, நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. இதற்கிடையில், கம்பம் பள்ளத்தாக்கு பகுதி முதல்போக நெல் சாகுபடிக்கு தண்ணீர் தாமதமாக திறக்கப்பட்டதால், விவசாயிகள் பலர் முதல்போக சாகுபடியைக் கைவிட்டு விட்டனர். தற்போது தேனி மாவட்டத்தில் மழை இல்லாததால், பதினெட்டாம் கால்வாய் மூலம் நேரடியாக உத்தமபாளையம் வட்டத்தில் 2568 ஏக்கரும், போடி வட்டத்தில் 2045 ஏக்கர் என மொத்தம் 4613 ஏக்கர், மறைமுகமாக சுமார் 15 ஆயிரம் ஏக்கர் என மொத்தம் 20 ஆயிரம் ஏக்கர் வரை மானாவாரி சாகுபடி பாசனம் கேள்விக் குறியாகி விட்டது என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x