Published : 12 Jan 2014 04:14 PM
Last Updated : 12 Jan 2014 04:14 PM
நாகர்கோவிலில் பட்டா நிலத்தை ஆர்ஜிதம் செய்ய தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் செய்யும் முயற்சி கண்டனத்துக்குரியது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் நகர்ப் பகுதியில் அமைந்துள்ள பெரியவிளை, தட்டான்விளை, ஏர் கேம்ப் ரோடு பகுதிகளைச் சேர்ந்த ஏழை, எளிய மக்களின் பட்டா நிலங்களையும், பெரிய விளை ஊர் சாமக் கொடைக்கார சுவாமி கோவிலுக்கு உரிய பட்டா பூமியையும், ஊர் பூமி, கல்லறை பூமி மற்றும் ஏர் கேம்ப் சாலையில் உள்ள பட்டா பூமியையும், பொதுமக்கள் வீடுகள் அமைந்த பகுதியையும் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் 1982-ம் ஆண்டு முதல் கையகப்படுத்த முயற்சி செய்து வருவதை எதிர்த்து சுமார் 32 ஆண்டுகளாக நில உரிமையாளர்கள் பல்வேறு வடிவங்களில் போராடி வருகின்றனர்.
நாகர்கோவில் நகராட்சி நிர்வாகம், இப்பகுதி நிலங்களை ஆர்ஜிதம் செய்திடக்கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. 2001-ம் ஆண்டு அப்போதைய மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப்படி அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு, நில ஆர்ஜிதம் செய்யக்கூடாது என முடிவுகளை அறிவித்தார்.
சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில், பாதிக்கப்பட்ட மக்களின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுக்கள் ஏற்கப்பட்டு, நில ஆர்ஜிதம் செய்யக்கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2009-ம் ஆண்டு ஓய்வுபெற்ற நீதிபதி பாஸ்கர் தலைமையில் அமைக்கப்பட்ட ஆய்வுக் குழுவும் இப்பகுதியில் நில ஆர்ஜிதத்தைக் கைவிட அரசுக்குப் பரிந்துரை செய்து அறிக்கை சமர்ப்பித்தது. தமிழக அரசும், வீட்டு வசதி வாரியம் கையகப்படுத்திப் பயன்படுத்தாமல் உள்ள நிலத்தை நில உடமையாளருக்கே திருப்பிக் கொடுக்கப்படும் என அறிவித்தது. இப்பகுதியில் ஒரு செண்டின் இன்றைய மதிப்பு ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் ஆகும். ஆனால், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் மதிப்பீடு ரூ.1,200 மட்டும்.
இப்பகுதியில் வசிக்கும் மக்கள் நிரந்தரமாகக் குடியிருப்பவர்கள். இடம் உரிமையாளர்களின் அனுபவத்திலேயே இருந்து வருகிறது. பலரும் வீடு கட்டி குடியிருக்கிறார்கள். கல்லறைத் தோட்டங்களும், திருக்கோவில்களும் இப்பகுதியில் அமைந்துள்ளன. குடியிருப்புகள் மற்றும் கடைகள் நிரம்பியுள்ளன.
சட்டப்படி மக்களுக்கு முழு உரிமையுள்ள பூமியை அத்துமீறி கையகப்படுத்த தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் முயற்சிப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்காக தொடர்ந்து போராடி வரும் தமிழ்நாடு காமராஜர் நற்பணி மன்றத் தலைவர் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணனனையும், பொதுமக்களையும் மற்றும் வழக்கறிஞர்களையும் மிரட்டிய நாகர்கோவில் சரக துணைக் கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, நாகர்கோவில் வழக்கறிஞர் சங்கம் தொடர்ந்து போராடி வருகிறது. அவர்களுக்கு எனது ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பொதுமக்களின் ஒட்டுமொத்த உணர்வுகளுக்கு மதிப்பளித்து இப்பகுதி பூமியைக் கையகப்படுத்த முனையும் வீட்டுவசதி வாரியத்தின் முயற்சிகளைத் தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு கைவிட செய்திட வலியுறுத்துகிறேன்" என்று வைகோ கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT