Published : 07 Jan 2014 02:28 PM
Last Updated : 07 Jan 2014 02:28 PM
விழுப்புரம் அருகே, அடிப்படை வசதி செய்வது தரப்படாததைக் கண்டித்து அரசு பள்ளி மாணவர்கள் திங்கட்கிழமை வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.
விழுப்புரம் அருகே சாணிமேடு அரசு உயர்நிலைப் பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் போதுமான ஆசிரியர்கள் இல்லையென்றும், வகுப்பறைகள், ஆய்வகம், குடிநீர், உள்ளிட்ட வசதிகள் செய்தி தரக்கோரியும் சில மாதங்களுக்கு முன்பு புரட்சிகர இளைஞர் மாணவர் முன்னணி சார்பில் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதைக் கண்டித்து திங்கட்கிழமை மாணவர்கள் தங்களது பெற்றோருடன் இணைந்து பள்ளியின் முன்பு வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் புரட்சிகர இளைஞர் மாணவர் முன்னணி நிர்வாகிகளும் பங்கேற்றனர்.
தகவல் அறிந்த விழுப்புரம் தாலுக்கா போலீஸார் மாணவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் கல்வித்துறை அதிகாரிகள் வந்து வாக்குறுதி கொடுத்தால்தான் போராட்டதை கைவிடுவோம் என மாணவர்கள் கூறினர். இதையடுத்து விழுப்புரம் தாசில்தார் ரவிகண்ணன் மாணவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி போராட்டத்தைக் கைவிடச் செய்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT