Published : 28 May 2017 12:08 PM
Last Updated : 28 May 2017 12:08 PM

அமராவதி ஆற்றில் குழாய் பதித்து தண்ணீர் திருட்டு

அமராவதி ஆற்றில் முறைகேடாக பாறைகளை உடைத்து தண்ணீர் திருட்டு நடைபெற்று வருவதை தடுக்கக் கோரி, பொதுப்பணித் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அலங்கியம் அருகே அமராவதி ஆறு, பழநி சண்முக நதி ஆகியவை இணையும் கூடுதுறை உள்ளது. அங்கிருந்து தாராபுரம் நகரம், கொண்டர்சம்பாளையம், நஞ்சம்பாளையம், தளவாய்பட்டிணம் உட்பட 18 ஊராட்சிகளுக்கு தேவையான குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.

இந்நிலையில், அதே ஆற்றின் நடுவே உள்ள பாறைகளை வெடி வைத்து சிலர் பைப் லைன்கள் அமைத்து, சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ள நிலங்களுக்கு முறைகேடாக தண்ணீர் எடுக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக, அங்குள்ள பொதுப்பணித் துறை அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு, முறைகேடாக பதிக்கப்பட்டுள்ள குழாய்களை பறிமுதல் செய்ய வேண்டுமென விவசாய தொழிலாளர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர்.

ஆனால், விடுமுறை என்பதாலும் அதிகாரிகள் யாரும் இல்லாததாலும் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

இதுதொடர்பாக அவர்கள் கூறும்போது, “கடந்த சில ஆண்டுகளாக பருவமழை இன்றி கடும் வறட்சி நிலவுகிறது. நீர் வரத்து இல்லாததால் அமராவதி அணை வறண்டு காணப்படுகிறது. ஆற்றின் பல இடங்களிலும் முறைகேடாக மணல் அள்ளப்பட்டதன் விளைவாக, ஆறும் பாலைவனமாக மாறியுள்ளது. சமீபத்தில் தாராபுரம், சின்னதாராபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் குடிநீர் இன்றி பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகினர். பொதுமக்களின் போராட்டத்தை அடுத்து, அணையில் இருந்து 3 நாட்களுக்கு மட்டும் ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது.

குடிநீர் தேவைக்காக திறக்கப்பட்ட நீரையும் சிலர் மோட்டார் வைத்து உறிஞ்சியது கண்டுபிடிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், வறட்சியால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும், சிலர் அங்குள்ள பாறைகளை வெடி வைத்து தகர்த்து, பூமிக்கடியில் குழாய்களை பதித்து தண்ணீர் எடுத்து வருவது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x